Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

ஈச்வரன் அனைத்தையும் தாங்குதல் மற்றும் நியமித்தல் குறித்த விளக்கம்

மூலம் - சேதநாசேதநங்களைப் பற்ற தாரகனுமாய் நியந்தாவுமாகையாவது, தன் ஸ்வரூபத்தாலும் ஸங்கல்பத்தாலும் யதார்ஹம் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளுக்கு ப்ரயோஜகனாயிருக்கை. அது எங்ஙனேயென்னில், ஈச்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான குணங்களுக்கும் போலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவ்யவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாயிருக்கும். அவ்வோ த்ரவ்யங்களை ஆச்ரயித்திருக்கும் குணாதிகளுக்கு அவ்வோ த்ரவ்யத்வாரா ஆதாரமாயிருக்கும். ஜீவர்களாலே தரிக்கப்படுகிற சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாயிருக்கும் என்று சிலர் சொல்லுவார்கள். ஜீவனை த்வாரமாகக் கொண்டும் ஸ்வரூபத்தாலும் ஆதாரமாயிருக்கும் என்று சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள். இப்படி ஸர்வமும் ஈச்வர ஸ்வரூபத்தைப் பற்ற அப்ருதக்ஸித்த விசேஷணமாகையாலே இவற்றின் ஸத்தாதிகள் ஆச்ரய ஸத்தாதீனங்கள்.

ஈச்வரனுடைய ஸ்வரூபத்தாலும், ஸங்கல்பத்தாலும் மட்டுமே சேதனங்களும் அசேதனங்களும் இந்த உலகில் இருந்து தங்கள் செயல்களைச் செய்தபடி உள்ளன. ஆகவே ஈச்வரன் இவற்றைத் தாங்குபவனாகவும், நியமிப்பவனாகவும் கூறப்படுகிறான். இது எப்படி என்ற கேள்வி எழலாம். தனது ஸ்வரூபத்தை விளக்கவல்லதான தனது கல்யாணகுணங்கள் அனைத்தையும் ஈச்வரன் எவ்விதம் தாங்கியுள்ளானோ (அந்தக் குணங்களுக்கு ஆதாரமாக உள்ளானோ), அது போன்று, தன்னைக் காட்டிலும் வேறாக உள்ளதும், தன்னிடமிருந்து பிரிக்க இயலாததும் ஆகிய சேதன-அசேதனங்களைத் தாங்கியபடி உள்ளான். அவற்றின் தன்மைகளுக்கும் இவனே ஆதாரமாக உள்ளான். ஒரு சிலர், “ஜீவன் மூலமாகவே ஈச்வரன் அனைத்தையும் தாங்கியுள்ளான்” என்று கூறுவார்கள். ஒரு சிலர், “தனது ஸ்வரூபம் மூலம் நேரடியாகவும், ஜீவன் மூலம் மறைமுகமாகவும் ஈச்வரன் அனைத்தையும் தாங்கியுள்ளான்”, என்பர். சேதனம் மற்றும் அசேதனங்களுடன் கூடியவனாக ஈச்வரன் உள்ளான் (அப்ருதக்ஸித்த விசேஷணம்) என்பதால், அவனிடமிருந்து அவற்றைப் பிரிக்க இயலாது. எனவே அவற்றின் இருப்பு என்று கூறும் நிலையே அவற்றைத் தாங்கும் அவனைச் சார்ந்தே உள்ளது.