Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்

சாஸ்த்ரங்களே மோக்ஷத்திற்குப் ப்ரமாணம்

மூலம் - அவ்வம்சத்திலும் ப்ரதாநப்ரதிதந்த்ரங்களான தத்த்வ ஹிதங்களுடைய ஸங்க்ரஹமாகையாலே மிகவும் ஸாரதம (உபாதேய) மாயிருக்கும் ரஹஸ்யத்ரயம். ஆகையால், “பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர: | ஸர்வதஸ் ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத:” என்கிறபடியே, ரஹஸ்யத்ரயம் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு மிகவும் உபாதேயமாகக் கடவது.

அவற்றிலும், அறியப்படவேண்டிய தத்துவங்களாக உள்ளவையும், மோக்ஷ உபாயமாக உள்ளவையும், தனித்து விளங்குபவையும், நமது ஸித்தாந்ததின் அடிப்படையாக உள்ளதும் ஆகிய மூன்று ரஹஸ்யங்களும் மிகவும் முக்கியமானவையாகும். மஹாபாரதம் சாந்திபர்வம் (176-66) - பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர: | ஸர்வதஸ் ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத: - பல உயர்ந்த சாஸ்த்ரங்களில் இருந்து விவேகம் உள்ள மனிதன், தேனியானது எவ்விதம் மலர்களில் உள்ள மகரந்தத்தை மட்டும் எடுக்கிறதோ, அது போன்று முக்கியமானவற்றை மட்டுமே எடுக்க வேண்டும் – என்றது. ஆக, மோக்ஷத்தில் விருப்பம் உள்ள ஜீவன் (முமுக்ஷு), இந்த மூன்று மந்த்ரங்களையே நாடவேண்டும்.