Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
சாஸ்த்ரங்களே மோக்ஷத்திற்குப் ப்ரமாணம்
மூலம் – அவ்விடத்தில், “அநந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பஹவச்ச விக்நா: | யத் ஸாரபூதம் ததுபாததீத ஹம்ஸோ யதா க்ஷீரம் இவ அம்புமிச்ரம்” என்கிற ச்லோகத்தில், ஸாரபூதம் என்கிற பதத்தாலே ப்ரதிபந்நமான நிரூபாதிக ஸாரத்தை விஷயீகரிக்கிற ஸாரதம சப்தம் உபாதேயம். பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்த்ரங்கள் அத்யந்தா ஸாரங்களாகையாலே அநுபாதேயங்கள். வேதத்தில் பூர்வபாகத்தில் ஐஹிக பல ஸாதன ப்ரதிபாதகமான ப்ரதேசம் அத்யல்ப ஸாரமாகையாலே அநுபாதேயம். ஆமுஷ்மிக பல ப்ரதிபாதகாம்சம் ஐஹிக பலத்திற்காட்டில் அதிசயித பலத்தை உடைத்தாகையாலே சிலர்க்கு ஸாரம் என்னவாயிருந்ததேயாகிலும் துக்கமூலத்வாதி தோஷ த்ருஷ்டமாகையாலே அநுபாதேயம். ஆத்ம தத் ப்ராப்தி தத் ஸாதன மாத்ரத்தை ப்ரதிபாதிக்கும் அம்சமும் ஸாரதரமாய் இருந்ததேயாகிலும் அதிலும் அத்யந்தாதிசயிதமான பரமாத்மாநுபவ ஸாபேக்ஷர்க்கு அநுபாதேயம். பரமாத்ம தத் ப்ராப்தி ததுபாயங்களை வெளியிடும் ப்ரதேசம் ஸாரதமமாகையாலே விவேகிக்கு உபாதேயம்.
மேலும் உத்தவ கீதை(3-10) - அநந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பஹவச்ச விக்நா: | யத் ஸாரபூதம் ததுபாததீத ஹம்ஸோ யதா க்ஷீரம் இவ அம்புமிச்ரம் - நமக்குத் தெரிய வேண்டியது பல உள்ளது, எல்லையற்றது, இதனை அறிய இருக்கும் காலமோ மிகவும் குறைவானது, தடங்கல்கள் பல உள்ளது, ஆகவே அன்னம் எவ்விதம் நீரிலிருந்து பாலை பிரிக்கிறதோ அது போன்று, உயர்ந்ததை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் – என்றது. இங்கு, “உயர்ந்தது” என்றால், “மிக உயர்ந்தது” என்று பொருள் கொள்ளவேண்டும். வேதங்களில் சேராத சாஸ்த்ரங்களும், வேதங்களை மறுத்துக் கூறும் சாஸ்த்ரங்களும் உயர்ந்தவையே அல்ல, எனவே அவை தள்ளப்பட வேண்டியவை ஆகும். வேதத்தின் முதல் பாகமாகிய (பூர்வ பாகம்) கர்ம காண்டத்தில், உலக விஷயங்களைப் பெற உதவும் கர்மங்களைக் கூறும் பகுதிகள் உயர்ந்தவை அல்ல, ஆகவே அவற்றைத் தள்ளலாம். உலக விஷயங்களைவிடச் சற்றே உயர்வாகத் தோன்றும் ஸ்வர்க்கம் முதலானவற்றைப் பெற உதவும் பகுதிகளும் துன்பம் முதலானவற்றிலேயே இறுதியில் முடிவதால், அவையும் பயனற்றதே ஆகும். இதனை விடச் சற்றே உயர்வாகத் தோன்றுகின்ற, ஆத்மாவைப் பற்றி அறிய உதவும் பகுதிகளும் அதனை அடையும் உபாயம் கூறும் பகுதிகளும், பரம்பொருளை மட்டுமே அரிய ஆவல் கொண்ட மனிதர்களுக்கு முக்கியமல்ல. ஆக, விவேகம் கொண்ட மனிதன் ஒருவனுக்கு, பரப்ரஹ்மம் பற்றிக் கூறும் வேத பகுதிகளும், ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் பற்றிக் கூறும் பகுதிகளும் மிகவும் முக்கியமானதாகும். எனவே அவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.