Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
சாஸ்த்ரங்களே மோக்ஷத்திற்குப் ப்ரமாணம்
மூலம் - பரமபுருஷார்த்தமும் ததுபாயமும் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களால் அறியவொண்ணாதபடியாலே இவற்றுக்கு “சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம்” என்றும், “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ” என்றும், “சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத: பரம் ப்ரஹ்மாதிகச்சதி” என்றும் சொல்லுகிறபடியே சப்தமே ப்ரமாணம்.
வாழ்க்கையின் மிக உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பதும், அதனை அடையும் உபாயமும், கண்ணால் காண்பதாலோ (ப்ரத்யக்ஷம்) அல்லது அனுமானம் செய்வதாலோ புரிந்து கொள்ள இயலாது. சாஸ்த்ரமே இவற்றுக்குப் ப்ரமாணம் என்பதை மஹாபாரதம் உத்யோக பர்வம்(68-5) - சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் - சாஸ்த்ரம் மூலம் ஜனார்த்தனனை நான் அறிகிறேன் – என்றும், கீதை (16-24) - தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ - எதனைச் செய்யவேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்று உனக்கு வழிகாட்டியாக சாஸ்த்ரமே உள்ளது – என்றும், மஹாபாரதம் சாந்திபர்வம் (276-2) - சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத: பரம் ப்ரஹ்மாதிகச்சதி - சப்தம் எனப்படும் வேதங்களை அறிந்தவன், ப்ரஹ்மத்தை (ப்ரஹ்மம் என்பது ஸ்ரீமந் நாராயணனைக் குறிக்கும்) அறிந்தவன் ஆகிறான் – என்றும் உள்ள வாக்கியங்களால் அறியலாம்.