Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
மூன்று மந்த்ரங்களின் உயர்வு
மூலம் - இந்த ரஹஸ்யத்ரயத்தில் திருமந்த்ரம் “ஸர்வம் அஷ்டாக்ஷராந்த: ஸ்தம்” என்கிறபடியே தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாயி ருக்கையாலும், சரமச்லோகம் “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே அவலம்பிக்க ஸர்வோபாய பலஸித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும், த்வயமும் கட ச்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒருகால் உச்சரித்தவனை ஸர்வப்ரகாரத்தாலும் க்ருதக்ருத்யனாக்கவல்ல வைபவத்தை உடைத்தாயிருக்கையாலும், ரஹஸ்ய த்ரயமே முமுக்ஷுக்களுக்கு ஆதரணீயம்.
ரஹஸ்யத்ரயம் என்னும் மூன்று மந்த்ரங்களில், திருமந்த்ரம் (அஷ்டாக்ஷரம்) என்பது மற்றவற்றின் பொருளையும் தன்னுள் கொண்டது ஆகும். இதன் பொருளை உணர்ந்தால், அனைத்தையும் உணர்ந்தது ஆகும். இதனை நாரதீய கல்பம் (1-9) – ஸர்வம் அஷ்டாக்ஷராந்த: ஸ்தம் - அனைத்தும் அஷ்டாக்ஷரத்தில் உள்ளது - என்றது. சரமச்லோகம் கீதை (18-66) - ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ - மோக்ஷத்திற்கான அனைத்து உபாயங்களையும் கைவிட்டு என்னிடம் அடைக்கலம் புகுவாய் – என்று “ஒரே பாதையைக் கடைபிடிக்க வேண்டும், இந்தப் பாதை சரணாகதி என்னும் பாதையாகும்” என்பதைக் கூறுகிறது; இந்தப் பாதையானது மற்ற அனைத்து பாதைகளின் பலனையும் அளிக்கவல்லது. த்வயம் என்பது கட உபநிஷத்தில் கூறப்படுவது போல், தன்னை ஒருமுறை உச்சரித்தவனை, அவன் அனைத்து கர்மங்களையும் (மோக்ஷம் பெறுவதற்கான கர்மம்) சிறப்பாக முடிக்கும்படிச் செய்கிறது. ஆகவே முமுக்ஷுக்களுக்கு இந்த ரஹஸ்யத்ரயமே சிறந்தது.