Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் - அந்த ராஜகுமாரனுக்குச் சில ராஜாந்தரங்கர் நேர்பட்டு பிறவியை உணர்த்தி மேலுள்ள ப்ரியதமங்களையும் ஹிததமங்களையும் தெளிவித்து ஒரு விரகாலே அந்த ராஜாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷாகாங்க்ஷையை உத்தம்பிக்குமாப் போல, இவனுக்கும் “நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா | ஞாநாநந்தமயஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மந:” என்றும், “தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மந: பரமாத்மந:” என்றும் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே, “பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ் சோராமே ஆள்கின்ற” செங்கோலுடைய ஸ்ரீய:பதி நாராயணனுடனே குடல் துவக்கைத் தெளிவித்து, இவனுக்கு தத் ப்ராப்த்யுபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து, அதடியாக அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கிச் சுரக்கும் தேனுவைப் போலே இத்தேசிகர் இவ்வாத்மாவுக்கு அஜ்ஞான ஸம்சய விபர்யயங்கள் தீரவேண்டுமென்று மிகுந்து குறைவறச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு “தத்த்வேந யச்சிதசிதீச்வர தத் ஸ்வபாவ” இத்யாதிகளிற்படியே ஈச்வரனுடையவும் ஈசிதவ்யங்களுடையவும் ஸ்வரூப ஸ்வபாவ ஸம்பந்தங்களும், இவற்றின் த்யாஜ்யோபாதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும், இவற்றின் கதி ப்ரகாரங்களும், உக்தாநுக்தங்களான மோக்ஷ விரோதிகளுமாகிற இவ்வர்த்தங்கள் முமுக்ஷுவான இவ்வத்மாவுக்கு ஜ்ஞாதவ்யங்கள். இவ்வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய சப்தராசியில் ஸாரதமமான ரஹஸ்யத்திலே ப்ரதிதந்த்ர ஸாரோத்தாரேண ஸங்க்ரஹிக்கப்படுகின்றன.
அவர்கள் ராஜகுமாரனுக்கு அவனுடைய பிறப்பைப் பற்றிக் கூறி, அவனுடைய பிறவிக்கு ஏற்ற நன்மை எது என்றும், அதனை அடையும் உபாயங்கள் என்ன என்றும் உணர்த்துகின்றனர். மேலும் அவர்கள் ராஜாவும் ராஜகுமாரனும் இணைவதற்காக உள்ள அனைத்து வழிகளையும் முயல்கின்றனர். இதனைப் போன்றே ஜீவனுக்கும் ஆசார்யர்கள் மூலமாக நடப்பதை அடுத்துள்ள ப்ரமாணங்கள் கூறுகின்றன: நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா | ஞாநாநந்தமயஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மந: - ஜீவன் என்பவன் தேவனும் அல்லன், மனிதனும் அல்லன், விலங்கும் அல்லன், மரமும் அல்லன். அவன் ஞானம் மற்றும் ஆனந்தமே தனது ஸ்வரூபமாக உடையவன். அவன் பரம்பொருளுக்கு அடிமையாக உள்ளான். அவனை அண்டியே உள்ளான். அவனது கைங்கர்யத்திற்காகவே உள்ளான் (சேஷன்) – என்றும், மந்த்ரராஜபதம் - தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மந: பரமாத்மந: - (சிவன் கூறுவது) பரம்பொருளின் ஸ்வரூபம் காரணமாக ஜீவன் அவனது அடிமையாக உள்ளான் – என்றும் உள்ளது காண்க. நாச்சியார் திருமொழி (11-3) - பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய (திருவரங்கச்செல்வனார்) - என்னும்படி உள்ள மஹாலக்ஷ்மியின் நாயகனான நாராயணனுக்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள உறவை (பிறப்பால் வந்த தொடர்பு) ஆசார்யர்கள் உபதேசிக்கின்றனர். அந்த ஆசார்யர்கள், ஜீவன் பரம்பொருளை அடைதற்குப் பெரிதும் முயல்வர். இவ்விதம் அந்த ஜீவன் பெருகின்ற பேறு மூலம் தங்களுக்கே நித்யவிபூதியும், இந்த உலகம் முழுவதும் கிட்டியதாக எண்ணுவர். அன்று பிறந்த கன்றுக்குப் பசுவானது தானே பாலைச் சுரப்பது போல், அவன் மீது அன்பு வைக்கின்றனர். அவனுடைய அஜ்ஞானம், சந்தேகம் மற்றும் தவறான ஞானம் (தேஹமே ஆத்மா என்ற எண்ணம் போன்றவை) ஆகியவற்றை, மிகவும் அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் உள்ள தங்கள் உபதேசங்கள் மூலம் விலக்குகின்றனர். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் (4) - தத்த்வேந யச்சிதசிதீச்வர தத்ஸ்வபாவ - எந்த பராசரர் சித் அசித் ஈச்வரன் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறாரோ – என்று கூறுவது போன்று, ஆசார்யர்கள் ஜீவனுக்குச் சேதன அசேதனங்களை நியமிப்பவனான பரம்பொருளின் தன்மைகளை விளக்குகின்றனர். மேலும் அவர்கள், சேதனம் மற்றும் அசேதனம் ஆகியவற்றின் தன்மைகளை விளக்கி, அவற்றின் இடையே உள்ள உறவையும் விளக்குகின்றனர், இந்த ஸம்ஸாரத்தில் அடையும் சுகம் மற்றும் துக்கம் ஆகியவற்றை விளக்குகின்றனர். இந்தப் பிடியிலிருந்து வெளியேறும் மோக்ஷம் பற்றியும், அதனை அடையும் உபாயங்கள் பற்றும் கூறுகின்றனர், ஜீவன் செல்லும் மார்க்கங்கள், அந்த வழியில் சென்று அடையப்படும் மோக்ஷத்தினை தடுக்கும் தடைகள் என்னும் அர்த்தபஞ்சகத்தையும் விளக்குகின்றனர். இவை அனைத்தும் மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவன் (முமுக்ஷு) அறிய வேண்டியதாகும். இவை அனைத்தும் ரஹஸ்யத்ரயத்தில் கூறப்படுகின்றன. இவையே ஜீவன் மற்றும் ஈச்வரன் ஆகிய இரண்டைப் பற்றியும் கூறும் இடங்களின் சாரமாக உள்ளது.