Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் - இவ்வாத்மாவுக்குச் சில தார்மிகர் பித்ராதி முகேந நொடித்து, “புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப: | சரீராக்ருதிபேதா: அஸ்து பூபைதே கர்மயோநய:” என்கிறபடியே, உருவியந்தவிந்நிலைமையை உணர்த்தி, அதுக்கு அநுரூபமான புருஷார்த்த ததுபாயங்களிலே அந்வயிக்கலாம்படி விரகு செய்து, உடம்பு தின்றார்படியன்றிக்கே ஒரு வெளிச்சிறப்புடையார்க்கு வரும் குணவ்ருத்தங்களை உண்டாக்கி, ஹேயோபாதேய விபாக க்ஷமனுமாக்கி நிறுத்தினவளவிலே,
இந்த ஜீவனுக்கு அவனது பித்ருக்கள் மூலம் சில நல்லோர்களின் (தார்மிகர்) தொடர்பு கிட்டுகிறது. அவர்கள் அந்த ஜீவனுக்குக் கீழே உள்ள விஷ்ணு புராணக் கருத்தை உணர்த்துகின்றனர். அந்த விஷ்ணு புராண வரியானது (2-13-98) - புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப: சரீராக்ருதிபேதா: அஸ்து பூபைதே கர்மயோநய: - ஜீவன் என்பவன் தேவனும் அல்லன், மனிதனும் அல்லன், விலங்கும் அல்லன், மரமும் அல்லன். உடல் உருவங்களிலும் அமைப்பிலும் உள்ள இந்த வேறுபாடுகள் அவரவர் கர்மங்களினால் உண்டானவையாகும். இது போன்ற பல வரிகளின் மூலம் அவனுக்கு (ஜீவனுக்கு) உடலைக் காட்டிலும் வேறுபட்டது ஜீவன் என்று உணர்த்துகின்றனர். அதன் பின்னர் ஜீவனின் ஸ்வரூபத்திற்கு ஏற்ற புருஷார்த்தங்கள் என்ன என்று உணர்த்தி, அந்தப் புருஷார்த்தங்களை அடையும் உபாயங்களையும் உபதேசிக்கின்றனர். அவனுக்கு - சிறந்த ஞானம் உள்ளவர்களிடம் மட்டுமே காணப்பட்டும், ஆத்மா என்பது உடலைக் காட்டிலும் வேறானது என்று அறியாதவர்களிடம் (இவர்களை உடம்புதின்றார் என்று கூறினார்) இல்லாதவையும் ஆகிய உயர்ந்த குணங்களை ஏற்படுத்துகின்றனர். மேலும் அவனுக்கு எதனை ஏற்க வேண்டும், எதனை விடவேண்டும் என்ற விவேகம் வளரும்படிச் செய்கின்றனர்.