Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் - இவனும் தேஹாத்மாபிமானாதிகளாலே தன்னுருக்கொடுத்து வேற்றுருக் கொண்டு நிற்க, அந்த ராஜகுமாரனுடைய லக்ஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் ஒரு விரகாலே இவனை மீட்கப்பெற்று அபிமானிக்க இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தராபிமானத்தை வழிவிலக்கி த்ருஷ்டாத்ருஷ்ட ஸம்ஸ்காராதிகளாலே உத்தரோத்தர போக ததுபாயங்களுக்கு யோக்யனாம்படி விரகு செய்து, இவனுக்கு ஸ்வஜாத்யனுரூபமான குணவ்ருத்தங்களைத் தங்கள் உபதேச அனுஷ்டானங்களாலே குடிபுகரவிட்டு, இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போக்ய க்ஷுத்ர விஷயங்களை அருவருப்பித்து, ராஜாதி போக்யங்களான அதிசயித புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்கவல்ல அளவுடைமையை உண்டாக்கி நிறுத்துமாபோலே.
தனது உண்மையான ஸ்வபாவத்தை இழந்து, வேறு ஸ்வபாவம் எடுத்த ராஜகுமாரனின் கதி இவ்வாறு ஆனது. இது போன்றே ஜீவன், “தான் உள்ள உடலும், தானும் ஒன்றே ஆகும்” என்ற மயக்கம் காரணமாக தன்னுடைய ஸ்வபாவத்தை இழக்கிறான். இந்த ராஜகுமாரனின் தேஜஸ் போன்ற லக்ஷணங்கள் மூலம் அவனுடைய அரச பிறப்பை உணர்ந்த சில மஹான்கள் (தார்மிகர் என்றார்), அவனை ஏதேனும் ஒரு உபாயம் செய்து மீட்க மனம் கொண்டனர். அவன் தன்னை வேடுவர்களில் ஒருவனாக எண்ணியிருந்த தவறான எண்ணத்தை முதலில் மாற்றினர். அதன் பின்னர் அவர்கள் மூலமாக சரியானபடி நீராடும் வழக்கம், ஆடை உடுத்தும் வழக்கம், ஆசாரம் போன்றவைகளை அறிந்தான். இதன் மூலம், ராஜகுமாரன் ஒருவன் அனுபவிக்கத் தகுந்த விஷயங்களைத் தானும் அனுபவிக்கும் தகுதிகளைப் பெற்றான். அந்த விஷயங்களை அனுபவிக்கும் உபாயங்களையும் அறிந்தான். அரசகுமாரனுக்கு ஏற்ற உருவம், குணங்கள் என்ன என்பதை அவனுக்கு உபதேசங்கள் மூலமாகவும் எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும் உணர்த்தினர். இதன் மூலம் அவன் தான் கைக்கொண்டிருந்த தாழ்வான வாழ்க்கையை வெறுக்கும்படியும், அவனுக்கே அவை அறுவருப்பாக உள்ளபடியும் செய்தனர். இதன் மூலம் அவன் ராஜகுமார வாழ்க்கைக்கு ஏற்ற ஞானம் பெறும்படிச் செய்தனர், உயர்ந்த புருஷார்த்தங்களை தேர்ந்தெடுக்கும் அறிவையும் புகட்டினர்.