Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் – “மாதா அபி ஏகா பிதா அபி ஏக: மம தஸ்ய ச பக்ஷிண: | அஹம் முநிபி: ஆநீத: ஸ ச ஆநீத: கவாசனை: || அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச: ச்ருணோதி | ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷகுணா பவந்தி” என்கிறபடியே வேடுவச்சேரியிலே கிளிபோலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய், அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே அவர்கள் ஊணும் வ்ருத்தியுமே தனக்கு ஊணும் வ்ருத்தியுமாய், தன் பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியது உண்ணாதே ராஜபோக விருத்தங்களான ஜுகுப்ஸித விஷயங்களிலே தனக்குப் பேறுமிழவும் ஹர்ஷசோகங்களுமாய், ராஜகுமாரனென்று தன்னடி அறிவார் சில ரிஷிப்ராயர் உண்டானாலும் அவர்களுக்குக் கிட்டவொண்ணாத அவஸ்தையையுடையவனாய் இப்படி ப்ராந்திஸித்த சபரத்வாத்யவஸ்தையோடே யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும் ஒரு யோக்யதை பெற விரகில்லாதபடியாய்த் தட்டுப்பட்டு நிற்குமாபோலே.
(ஒரு குலத்தில் பிறந்த ஒருவன் மற்றொரு குலத்தில் தொடர்ந்து இருந்தால் தனது தன்மைகளை மறந்து, தான் இப்போது உள்ள குலத்தினர் போன்று தன்னை மாற்றிக் கொள்வானா என்ற ஐயம் ஏற்படலாம். இதற்கான விடையை விஷ்ணு புராண வரிகள் மூலம் உணர்த்துகிறார்). ஒரு கிளிக்குப் பிறந்த இரு கிளிகள் பற்றிய நிகழ்ச்சி இதுவாகும். ஒரு கிளியானது முனிவர்களாலும் மற்றொரு கிளியானது பசுமாம்ஸம் உண்பவர்களிடம் சென்று வளர்ந்தன. அவற்றில் முனிவர்களிடம் வளர்ந்த கிளி - மாதா அபி ஏகா பிதா அபி ஏக: மம தஸ்ய ச பக்ஷிண: | அஹம் முநிபி: ஆநீத: ஸ ச ஆநீத: கவாசனை: || அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச: ச்ருணோதி | ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷகுணா பவந்தி - எனக்கும் அந்தக் கிளிக்கும் ஒரே தாய், ஒரே தந்தை. நான் இந்த முனிவர்களால் இங்கு கொண்டு வரப்பட்டேன். அந்தக் கிளியானது மாட்டின் இறைச்சி உண்பவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. நான் அன்றாடம் இந்த முனிவர்களின் சொற்களைக் கேட்டபடி உள்ளேன். அந்தக் கிளியோ வேடர்களின் பேச்சைக் கேட்டபடி உள்ளது. நான் பேசும் பேச்சிற்கும், அந்தக் கிளி பேசும் பேச்சிற்கும் உள்ள வேறுபாட்டினை நீ உணர்ந்திருக்கலாம். ஆக நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் சேர்க்கையாலே வருகிறது - என்று கூறியது. வேடர்களால் வளர்க்கப்பட்ட அந்தக் கிளி போன்றே இந்த ராஜ குமாரனும் அவர்கள் தனக்குக் கற்றுக் கொடுத்த பாஷையே தன்னுடைய பாஷையாகவும், அவர்கள் பேசுவது போன்றே தானும் பேசியும், அவர்களுக்குப் பிறந்தவர்கள் என்ன உணவு உட்கொண்பாரோ அதனையே தானும் உண்டபடியும் வாழ்ந்து வந்தான். தனது ராஜபோகங்கள், ஆசாரங்கள், ஸம்ப்ரதாயம் முதலியவற்றை அந்த ராஜகுமாரன் அறியவில்லை. ஒரு ராஜகுமாரன் எப்படி நடந்து கொள்வானோ அதற்கு மாறாக இவனது நன்மை-தீமைகள், இன்ப-துன்பங்கள் இருந்து வந்தன. அந்தக் காட்டில் இருந்த ஒரு சில முனிவர்களுக்கு, இவன் ஒரு ராஜகுமாரன் என்று தெரிந்திருந்தபோதிலும், அவர்கள் இவனைத் திருத்த முயன்றபோதும், இவன் அவர்களுக்கு அருகில் வராமலேயே இருந்தான். மற்றொரு பிறவி எடுக்கும்போது அதிலாவது உன்னதமான ஒரு பிறவியை எடுக்கவல்ல முயற்சி அற்றவனாகவே இருந்து வந்தான்.