Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

ஜீவன் தனது ஸ்வரூபம் இழத்தல்

மூலம் - இருப்பு அடியாக நித்யானுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான நித்யஸூரிகளோடு ஒக்கத் தானும் ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து அநாதிமாயையாலே ஸுப்தனாய், “அநேக ஜன்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ ச்ரம ப்ரயாதோ அஸெள வாஸநா ரேணு குண்டித:” என்கிறபடியே ப்ரக்ருதியாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே தத்வ ஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க;

இவ்விதம் ஜீவன் தனது ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி, எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதில் எல்லையற்ற ஆனந்தம் கொண்ட நித்யசூரிகளுக்கு இணையாகத் தானும் கைங்கர்யம் செய்யும் தகுதி பெற்றவனே ஆவான். ஆனால் இந்த ஜீவன் தொடக்கமற்ற மாயையின் பிடியில் சிக்கிவிடுகிறான். இதனால் ப்ரக்ருதி என்ற பாலை நிலத்தில் விழுந்த விதை போன்று உள்ளான். பலப்பல பிறவிகளைத் தொடர்ந்து எடுத்தபடி உள்ளான். தான் எதற்காக உள்ளோம் என்ற எண்ணமே அவனுக்கு இருப்பதில்லை. தனக்கு ஆறுதலும் ஆதரவும் இல்லாமல் தவிக்கிறான். தனது ஸ்வரூப ஒளியை இழந்து, உண்மையான ஞானத்தையும் இழக்கிறான். இதனை ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-7-19) - அநேக ஜன்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ ச்ரம ப்ரயாதோ அஸெள வாஸநா ரேணு குண்டித: - பல ஆயிரம் பிறவிகள் எடுத்து, ஸம்ஸாரம் என்ற வழியில் சிக்குண்டு, (தான் யாரென்று அறியாதபடி) மயக்கத்தையும் அடைந்து, அதனால் சிரமம் அடைந்து, கர்மவாசனை என்னும் புழுதி சூழ, ஞானம் இழந்து ஜீவன் உள்ளான் – என்கிறது.