Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

கைங்கர்யம் செய்வதற்கான ஜீவனின் தகுதிகள்

மூலம் – “வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே” என்றும், “ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப” என்றும் சொல்லுகிறபடியே பெரியபிராட்டியாரோடே கூடத் தெளிவிசும்பிலே, “யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா” என்கிறபடியே அயோத்யாதி சப்த வாச்யமான கலங்காப் பெருநகரிலே, “ஸஹஸ்ரஸ்தூணா”தி வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே, கௌஷீதகி ப்ராஹ்மணாதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே, “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்” என்றும், “நிவாஸசய்யாஸந” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வதேச – ஸர்வகால – ஸர்வவஸ்தோசித் – ஸர்வவித -கைங்கர்யங்களையும், ஸர்வவித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாகும்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே, வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அனுபவித்து க்ருதார்த்தராக வேணும் என்று ஸஹ்ருதனாயிருக்கிற

(பரம்பொருள் எவ்விதம் உள்ளான் என்று கூறப்படுகிறது) லைங்கபுராணம் - வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே - அனைத்து உலகங்களின் எஜமானனாக உள்ள ஸர்வேச்வரன், வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியுடன் பொருந்தியுள்ளான் - என்று கூறியது. திருவாய்மொழியில் (4-9-10) - ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப - அழகான கைவளையல்கள் அணிந்தவளான மஹாலக்ஷ்மியுடன் நீ நிற்க - என்று கூறினார். இவ்விதமாகப் பெரியபிராட்டியுடன் கூடியவனாக உள்ளான். (எங்கு உள்ளான் என்று கூறப்படுகிறது) ஸ்ரீகுணரத்நகோஸம் (23) - யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம்பரேண ஸ்திதா - வைகுண்டத்திற்கும் அப்பால் அயோத்யா என்றும், எவராலும் வெல்ல இயலாத அபராஜிதா என்றும் கூறப்படும் நகரத்தில் - என்பதற்கு ஏற்ப அயோத்யா என்று கூறப்படும் மாற்றம் அடையாத பெருநகரில் உள்ளான். தலவகாரோபநிஷத் - ஸஹுஸ்ரஸ்தூணே - ஆயிரம் தூண்கள் உடைய - என்று கூறும் திருமாமணி மண்டபத்தில் அமர்ந்துள்ளான். அந்த மண்டபத்தில் கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் கூறுவது போன்று (4-1-5) - பர்யங்க - உயர்ந்த ஸிம்ஹாஸநத்தில் - அமர்ந்துள்ளான். (அத்தகைய ஸிம்ஹாஸநம் எது என்று அடுத்து கூறுகிறார்) முதல் திருவந்தாதி (53) - சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் - என்னும்படி ஆதிசேஷன் எம்பெருமான் நடந்தால் குடையாகவும், அவன் அமர்ந்தால் அமரும் ஸிம்ஹாஸநமாகவும் உள்ளான் – என்றும், ஸ்தோத்ரரத்னம்(40) - நிவாஸசய்யாஸந - அவனது இருப்பிடமாகவும், ஆசனமாகவும் உள்ளான் - என்று கூறப்படும் ஆதிசேஷன் என்னும் உயர்ந்த ஸிம்ஹாஸநத்தில் அமர்ந்துள்ளான். இந்த ஆதிசேஷன் எம்பெருமான் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலைக்கேற்ப தனது உருவம் கொண்டு எம்பெருமானுக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்கிறான். ஆக அவன் எம்பெருமானின் அனைத்து நிலைகளிலும் உதவியபடி, தனக்கென்று எந்த எண்ணமும் இல்லாமல், பகவானுக்கு மட்டுமே அடிமையாக உள்ளதான் சேஷன் எனப்படுகிறான். இப்படிப்பட்ட ஆதிசேஷன் என்ற படுக்கையில் உள்ளபடி அனைத்தையும் ஆட்சி செய்தபடி உள்ளான். இவ்விதம் தான் கொண்டுள்ள நிலையான வாழ்வு போன்று, அனைத்து ஆத்மாக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாகவே எம்பெருமான் உள்ளான்.