Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன் தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார் மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம் நாளும் உகக்க இங்கே நமக்கு ஓர் விதி வாய்க்கின்றதே

தாமரை மலரில் உதித்த மஹாலக்ஷ்மியின் நாயகனான எம்பெருமானின் இணைந்த திருவடிகள் மட்டுமே தங்களைக் காக்கும் என்றும், அவன் மட்டுமே தங்கள் அடைக்கலம் என்றும் அறிந்து கொண்டு நமது ஆசார்யர்கள் செய்தது என்னவென்றால் - அவனது திருவடிகளையே தங்கள் உபாயமாகப் பற்றி, அந்தத் திருவடிகளையே நமக்கும் உபாயமென்று காட்டினர். இப்படிப்பட்ட ஆசார்யர்கள், நமது அறியாமை என்னும் இருளை விலக்க, மூன்று ரஹஸ்யங்களின் உட்பொருளை நமக்கு அளித்தனர். ரஹஸ்ய த்ரயத்தின் உட்கருத்தை அன்றாடம் அனுபவித்து மகிழவல்ல ஒப்பற்ற பாக்கியம், இந்த உலகில், நமது ஆசார்ய பரம்பரை மூலம் கிட்டியுள்ளதே!