Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 11)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
ஆசார்ய பக்தி அவச்யம்
மூலம் – “குரும் ப்ரகாசாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் அப்ரகாச ப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ” என்றார்கள். குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதுவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே. பகவத்விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும் என்னுமிடம் கட-ஜாபாலாதி ச்ருதிகளிலும், ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம். இங்ஙனல்லாதார்க்கு இப்படி ஞானஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞான தாரதம்யத்தாலே கண்டுகொள்வது. மிகவும் குணாதிகரான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம் ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம். பெற்றது குணமாக உபதேசித்தால் “சிஷ்ய பாபம் குரோரபி” என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம், வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து, தன் சிஷ்யனான நாரதபகவானை இட்டு ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது. இப்படி “அப்ரகாச ப்ரகாசாப்யாம்” என்கிற இரண்டுக்கும் “க்ஷீயதே ஸம்பதாயுஷீ” என்கிற பலங்களை ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை; இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை. ஆகையால் ஸர்வவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும், மகாரத்ன கர்ப்பமான மாணிக்கச்செப்புப்போலே இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற சிஷ்ய குண பூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம். இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம்; ஸாமாந்யமாகவுமாம். மந்த்ரசப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரஹஸ்யங்களுக்கும் ப்ரதர்சநபரம். தான் இந்த ரஹஸ்யங்களை அநுஸந்திக்கும் போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதி பல ப்ராப்தம். இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம், “ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மநஸா த்யாயேத்” என்கிறபடியே ப்ரதிஷித் ஸம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்.
சேஷஸம்ஹிதை (14-50) - குரும் ப்ரகாசாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் அப்ரகாச ப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ - புத்திமான் ஒருவன் தனது ஆசார்யனைப் பற்றி பிறரிடம் புகழ்ந்த பேச வேண்டும், அவர் உபதேசித்த மந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும், இவ்விதம் குருவைப் புகழாமலும், மந்திரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால் ஐச்வர்யமும், ஆயுளும் குறையும் - என்று கூறப்பட்டது. ஒருவன் தனது குருவை இவ்விதம் புகழ்வதும், புகழாமல் இருப்பதும், குருவிடம் அவன் கொண்டுள்ள அதிக பக்தியும் குறைந்த பக்தியுமே காரணம் ஆகும். பகவானிடத்தில் உள்ள பத்தியைப் போன்று, குருவிடத்திலும் பக்தி உள்ளவனுக்கு அனைத்து ஞானமும் ஏற்படும் என்ற கட உபநிஷத்தும் ஜாபால உபநிஷத்தும் கூறின. மற்றவர்களுக்கு இவ்விதம் ஏற்படாது. சிஷ்யர்கள் மிகவும் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக முழு தத்துவங்களையும் ஒரு குரு உபதேசிக்கவில்லை என்றாலும் அவருக்கு(குருவுக்கு) எந்தத் தோஷமும் ஏற்படாது. இதனை சாந்தோக்யத்தில் உள்ள ரைக்வர் பகுதிகளில் அறியலாம். ஆனால் சிஷ்யனைப் பற்றி முழுவதுமாக நம்பி, அவனுக்கு உபதேசம் செய்தால், அந்த சிஷ்யனின் பாவங்கள் குருவிற்கே சென்று சேர்க்கின்றன. இதனை இந்தரனுக்கு அவன் தகுதி அறியாமல் உபதேசித்த ப்ரம்மனுக்கு ஏற்பட்ட நிலை மூலம் அறியலாம். ப்ரம்மன் தனது ப்ரஹ்மவித்யையை மறந்துவிட்டான். அதனை பகவான் ப்ரம்மனின் சீடரான நாரத முனிவர் மூலம் மீண்டும் உபதேசிக்கும்படி ஆயிற்று. மேலே கூறப்பட்ட சேஷ ஸம்ஹிதை வாக்கியத்தின்படி “குருவைப் புகழாமல் இருந்தாலும், தவறான முறையில் மந்திரத்தை வெளிப்படுத்தினாலும், ஒருவனுக்கு முறையே செல்வத்திலும் ஆயுளிலும் தோஷம் ஏற்படும்” என்னும் கருத்தானது பலன்களில் வரக்கூடிய பொருத்தத்தாலும், ப்ரமாணங்களில் காணப்படுவதாலும் கூறப்படுகிறது. இந்த ச்லோகத்திற்கு, “குருவைப் புகழாமல் இருந்தால் செல்வத்துக்குத் தோஷம் என்றும், மந்திரத்தைப் போற்றாமல் இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே அளவற்றதாக ஏற்படும் குருபக்தியால் எப்போதும் குருவைப் புகழ்ந்தபடி இருத்தல்வேண்டும்; உயர்ந்த இரத்தினக்கற்களான ஆழ்பொருளை சேமித்து வைக்கின்ற செப்பு போன்று உள்ளதான திருமந்த்ரத்தின் சீர்மை குலையாமல் இருப்பதற்காக, அதனைச் செல்வத்தைப் பெறும்விதமாக சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய தன்மைகள் இல்லாதவர்களுக்கு வெளியிடாமல் காக்கவேண்டும். இங்குள்ள “குரு” என்னும் சொல்லானது தனது ஆசார்யன் தொடங்கி, பகவான் முடிய உள்ள அனைவரையும் குறிப்பதாகும்; அல்லது பொதுவாக உரைக்கப்பட்டதாகவும் கொள்ளலாம். இதே போன்று “மந்த்ரம்” என்பது மந்த்ரத்தால் கூறப்படும் ஆழ்பொருளையும் உள்ளடக்கியதாகும். மேலும் இந்த மந்த்ர உபதேசங்களைத் த்யானிக்கும்போது குருபரம்பரையையும் த்யானிக்க வேண்டும். கௌதம தர்ம சூத்திரம்(9-18) - ஸம்பாஷ்ய புண்யக் க்ருதோ மனசா த்யாயேத் - பேசக்கூடாத மனிதர்களிடம் பேசியதற்குப் ப்ராயச்சித்தம் என்னவெனில், புண்ணியத்தைக் குறித்து த்யானிப்பதே ஆகும் – என்பது காண்க.