Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 10)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
வைணவ குரு பரம்பரை
மூலம் - எம்பெருமானார் திருகோட்டியூர்நம்பி ஸ்ரீபாதத்திலே ரஹஸ்யார்த்தங்களைச் சிக்ஷித்தார். திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார். ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி, ஸ்தோத்ராதிகளும் அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார். திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத்ராமாயணம் கேட்டருளினார். இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் - ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும், வேதார்த்த ஸங்க்ரஹமும், ஸ்ரீகீதாபாஷ்யமும், சிறிய கத்யமும், பெரிய கத்யமும், ஸ்ரீவைகுண்ட கத்யமும், நித்யமும் ஆக ஒன்பது. இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளைத் தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது.
திருக்கோட்டியூர்நம்பியிடம் எம்பெருமானார் ரஹஸ்ய அர்த்தங்களைக் கற்றார்; திருமாலையாண்டான் திருவடிகளில் திருவாய்மொழி அர்த்தங்களைக் கற்றார்; ஆளவந்தாராழ்வார் திருவடிகளில் திருவாய்மொழியும், ஸ்தோத்ரரத்னமும், அருளிச்செயலும் கற்றார்; திருமலைநம்பிகளின் திருவடிகளில் ஸ்ரீமத் இராமாயணம் கேட்டருளினார். இவர் அருளிச்செய்த க்ரந்தங்கள் - ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்தஸங்க்ரஹம், ஸ்ரீகீதாபாஷ்யம், சிறிய கத்யம் (ஸ்ரீரங்க கத்யம்), பெரிய கத்யம் (சரணாகதி கத்யம்), ஸ்ரீவைகுண்டகத்யம் மற்றும் நித்யம் என்னும் ஒன்பதாகும். இவருடைய சீடர்களை தங்கள் தங்கள் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்து கொள்ள வேண்டும்.