Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 6)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

வைணவ குரு பரம்பரை

மூலம் - இவ்வாசார்யர்களில், ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள். இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹுஸ்யமும் அருளிச் செய்தார். இவருக்கு ஸ்ரீமதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும், யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார். நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான். ஈச்வர பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகமப்ராமாண்யமும், புருஷநிர்ணயமும், ஆத்மஸித்தி ஈச்வரஸித்தி ஸம்வித்ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும், கீதார்த்த ஸங்க்ரஹமும், ஸ்தோத்ரமும், சதுச்லோகியுமாக எட்டு. ஆளவந்தார்ப்பிள்ளை சொட்டைநம்பி. சொட்டைநம்பி பிள்ளை என்னாச்சான். என்னாச்சான் பிள்ளைகள் நால்வர். இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர். பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண் பிள்ளைகள் இருவர்.

இந்த ஆசார்யர்களில் (மேலே உள்ள ஸ்ரீமத்பாகவதம் கூறிய வரிகளில் உள்ள ஆசார்யர்கள்) முதலில் ஈச்வரமுனியின் பிள்ளையான நாதமுனிகள் ஆவார். இவர் நமக்கு ந்யாய தத்துவம் மற்றும் யோகரஹஸ்யம் என்பதை அருளினார். இவருக்கு மதுரகவியாழ்வாரின் உபதேசப் பரம்பரை உண்டு. மேலும் திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, மேலும் யோகம் பெற்றார். இதனால் நம்மாழ்வார் இவருக்கு நேரிலே வந்து ஆசார்யனானார். நாதமுனிகளின் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான். ஈச்வர பட்டாழ்வானின் பிள்ளை ஆளவந்தார் ஆவார். ஆளவந்தார் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் எட்டாகும் - ஆகமப்பிரமாண்யம், புருஷநிர்ணயம், ஆத்ம ஸித்தி, ஈச்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி, கீதார்த்த ஸங்க்ரஹம், ஸ்தோத்ர ரத்னம் மற்றும் சதுச்லோகி என்பவை ஆகும். ஆளவந்தாரின் பிள்ளை சொட்டை நம்பி, அவரது பிள்ளை என்னாச்சான், என்னாச்சானின் நான்கு பிள்ளைகளில் ஒருவர் பிள்ளையப்பர், பிள்ளையப்பரின் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.