Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 202)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஸ்வஸ்வாமி பாவத்தை மாறாடிக்கொண்டு அஜ்ஞரைப் போலேயும், அசக்தரைப் போலேயும், அஸ்வதந்த்ரரைப் போலேயும் இருக்கச் செய்தேயும், அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு ஸர்வாபேக்ஷிதங்களையும் கொடுத்தருளும்.
இன்னமும் இவ்வர்ச்சாவதார குணாதிசயத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு, இப் ப்ரபந்தத்தைத் தலைக் கட்டியருளுகிறார் (ஸ்வஸ்வாமி பாவத்தை) என்று தொடங்கி.
மேலும், இந்த அர்ச்சாவதாரத்தின் குணங்களுடைய மிகுதியை அருளிச்செய்து, இந்த “தத்வ த்ரயம்” என்ற நூலை நிறைவு செய்கிறார்.
– அதாவது, “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமி த்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” என்கிறபடியே சேதனனுக்கு ஸ்வத்வமும் தனக்கு ஸ்வாமித்வமும் வ்யவஸ்திதமா யிருக்க இவன் தன்னுடைமைகளோடொக்கத் தன்னையும் ஸஹபடிக்கும்படி ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலுமாகத் தன்னிசசையாலே மாறாடிக் கொண்டு “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்”, “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே”, “ந தஸ்யேசே கச்சந” என்றும், “ஸர்வேச்வரஸ் ஸர்வத்ருக் ஸர்வவேத்தா ஸமஸ்தசக்தி: பரமேச்வராக்க்ய:” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாய் நிரங்குச ஸ்வதந்த்ரனா யிருக்கிற தன்னை அமைத்துக கொண்டு, தன் காரியமும் பிறர் காரியமுமறியமாட்டாத அஜ்ஞரைப் போலேயும், தன்னைத் தான் ரக்ஷிக்கமாட்டாத அசக்தரைப் போலேயும், தனக்கென்னவொரு முதன்மையில்லாத அஸ்வதந்த்ரரைப் போலேயும் இராநிற்கச் செய்தேயும், விமுகரையுமுட்பட விடமாட்டாதபடி கரைபுரண்டு செல்லுகிற காருண்ய மிட்ட வழக்காய்க் கொண்டு, நேத்ர புத்ர விதரணம் முதலாக மோக்ஷ தான பர்யந்தமாக யதாதிகாரம் சேதநருடைய ஸகலாபேக்ஷிதங்களையும் கொடுத்தருளுமென்கை. – “அர்ச்சாவதாரஸ் ஸர்வேஷாம் பாந்தவோ பக்தவத்ஸல:, ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம்” என்று அர்ச்சாவதாரமானது ஸர்வர்க்கும் பாந்தவமாய் பக்தவத்ஸலமாயிருக்கும். ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும், ஸ்வாமித்வமானது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாயிருக்குமென்றும்; “இதி வ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவஸ் த்விதி, மமாயம் ராம இத்யேவ தேவ: பரசுலாஞ்சந:” என்றபடி சேஷித்வம் வ்யவஸ்திதமாயிருக்கச் செய்தேயும் என்னுடைய கேசவனென்றும், பரசுவை அடையாளமாகவுடைய தேவனான ராமன் என்னுடையவனென்றும்; “மமாயம் வாமநோ நாம நாரஸிம்ஹாக்ருதி வராஹவேஷோ பகவாந் நரோ நாராயணஸ் ததா” என்று என்னுடையவன் இந்த வாமனனானவன், ப்ரபுவான நரஸிம்ஹ ரூபியானவன், வராஹ வேஷத்தையுடைய பகவான், அப்படியே நரநாராயணன் என்றும்; “ததா க்ருஷணச்ச ராமச்ச மமாயமிதி நிர்திசேத், மத்க்ராமவாஸீ பகவாந் மமைவேதி ச தீர் பவேத்” என்னும்படியே க்ருஷ்ணனும் ராமனும் என்னுடையவெனென்றுஞ் சொல்லா நிற்கும். என்னுடைய க்ராமத்திலிருக்கிற பகவான் என்னுடையவனென்றும் மமத்வ புத்தியுண்டாகா நிறகும். – “சிந்தயேச்ச ஜகந்நாதம் ஸ்வாமிநம் பரமார்த்தத:, அசக்தமஸ்வதந்தரஞ்ச ரக்ஷ்யஞ்சாபி ஜநார்தநம்” என்று பரமார்த்தத்தால் ஜகந்நாதனாய், ஸ்வாமியான ஜநார்த்தநனை அசக்தனாகவும், அஸ்வதந்தரனாகவும், ரக்ஷ்யபூதனாகவும் சிந்திப்பதுஞ் செய்யா நிற்கும். “ததிச்சயா மஹாதேஜா புங்க்தே வை பக்தவத்ஸல:, ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி” என்று பெரிய தேஜஸ்ஸையுடைய ஜகத்பதியானவன் பக்தனுக்கு வத்ஸலனாய்க் கொண்டு, அவன் இச்சித்தபோது அமுது செய்யா நிற்கும், அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையையும் பண்ணா நிற்குமென்றும்; “ஸ்வதந்த்ரஸ் ஸ ஜகந்நாதோபி அஸ்வதந்த்ரோ யதா ததா ஸர்வ சக்திர் ஜகத்தாதாபி அசக்த இவ சேஷ்ட தே” என்று ஸ்வதந்த்ரனாய் ஜகந்நாதனாயிருக்கச் செய்தேயும், அவன் யாதொருபடி அஸ்வதந்த்ரன் அப்படியாகா நிற்கும்; ஸர்வசக்தியாய், ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாயிருக்கச் செய்தேயும், அசக்தரைப் போலே சேஷ்டியா நிற்குமென்றும், “ஸர்வாந் காமாந் ததத் ஸ்வாம்யபி அசக்த இவ லக்ஷ்யதே, அபராதாநபிஜ்ஞஸ் ஸந் ஸதைவ குருதே தயாம்” என்று, எல்லா காமங்களையுங் கொடா நின்று, ஸ்வாமியாயிரா நிற்கச் செய்தேயும், அசக்தரைப் போலே காணப்படா நிற்கும். அபராதங்களில் அறிவிலனாகா நின்று கொண்டு எப்போதும் தயையைப் பண்ணா நிற்குமென்றும்; “அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேசதஸ் ததா, உக்தா குணா ந சக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி” என்று, அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்டவத்தனை, குணங்களானவை நூறு வர்ஷங் கூடினாலும் சொல்ல சக்யங்களல்லவென்றும்; “ருதே ச மத் ப்ரஸாதாத் வா ஸ்வதோ ஜ்ஞாநாகமேந வா” என்று என்னுடைய ப்ரஸாதமொழிந்தாலும் ஸ்வதஸ் ஸித்தமான ஜ்ஞானமில்லாதபோதும் சொல்லமுடியாதென்றும்; “ஏவம் பஞ்சப்ரகாரோஹம் ஆத்மநாம் பத்தாம் அத:, பூர்வஸ்மாதபி பூர்வஸ்மாத் ஜ்யாயாம்ச சைவோத்தரோத்தர:” என்றிப்படி பர வ்யூஹாதி பஞ்சப்ரகாரனான நான், அத:பதிக்கிற ஆத்மாக்களுக்குப் பூர்வ பூர்வ ப்ரகாரங்களிற் காட்டில் உத்தரோத்தர ப்ரகாரத்தில் ஸௌலப்யத்தாலே ச்ரேஷ்டனாயிருப்பேனென்றும்; “ஸௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸுலபோ ஹ்யுத்தரோத்தர:” என்று, ஜகத் ஸ்வாமியான நான் ஸௌலப்யத்தாலே மேலே மேலே ஸுலபனாயிருப்பனிறேயென்றும், “ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்தர பிம்பயோ:, மந்த்ரே வாச்யாத்மநா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம்” என்று ஸர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட்குண்ய ரூபமானது, மந்த்ர பிம்பங்களிலே நிற்குமென்றும், மந்த்ரத்திலே வாச்யாத்மநா நிற்கும், பிம்பத்திலே க்ருபையாலே நிற்குமென்றும், இப்படி அர்ச்சாவதாரத்தினுடைய குணாதிக்யம் விஷ்வகஸேந ஸம்ஹிதையிலே ஸர்வேச்வரன் தன்னாலே அருளிச செய்யப்பட்டதிறே. – “ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜந்மநாம் ஸங்க்யா பௌம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரங்கேச்வர! அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணு: அர்ச்சக பராதீந அகில ஆத்ம ஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி: தவ ததச் சீலாத் ஜடீபூயதே” என்றும் அவதாரங்களை யருளிச்செய்தவனந்தரத்திலே அர்ச்சாவதார வைபவத்தை ஸங்க்ரஹேண ஒரு ச்லோகத்தாலே யருளிச்செய்தாரிறே பட்டர். ஆக, ஈச்வரனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலக்ஷண்யத்தையும், அக்குணங்களடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வ்யாபாரங்களையும், அப்படி காரண பூதனானவவனுடைய ஸர்வ பல ப்ரதத்வத்தையும் காரணத்வாத்யுபயோகியான விலக்ஷண விக்ரஹ யோகத்தையும், அந்த விக்ரஹ வைலக்ஷண்யாநுரூபமான லக்ஷ்மீ பூமி நீளா நாயகத்வத்தையும், அந்த விக்ரஹயோக ப்ரயுக்தமான பரத்வாதி பஞ்ச ப்ரகாரத்வத்தையும அருளிச் செய்து ஈச்வர தத்வத்தை நிகமித்தாராயிற்று.
அதாவது விஷ்ணுதத்வத்தில் “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமி த்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் - உடைமையாக உள்ள தன்மையானது ஜீவாத்மாவிற்கும், ஸ்வாமியாக உள்ள தன்மையானது ப்ரஹ்மத்திற்கும் உள்ளது” என்பதற்கு ஏற்ப, மற்றவர்களின் சொத்தாக உள்ள தன்மை சேதநனுக்கும், ஸர்வேஸ்வரனாகிய தனக்கு எஜமானனாக உள்ள தன்மையும் உறுதியாக உள்ளபோதிலும், ஸர்வேச்வரன் தன்னுடைய அனைத்து உடைமைகள் மற்றும் தன்னையும் சேர்த்து உரைக்கும்படி, ஸ்வாமியாக உள்ள தன்மையானது ஜீவாத்மாவிற்கும், சொத்தாக உள்ள தன்மையானது தன்னிடம் உள்ளதாகவும், தனது விருப்பத்தால் மாற்றி அமைத்து நிற்கிறான். முண். (1-1-9) – ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் - அனைத்தையும் அறிந்தவன், அனைத்தையும் உணர்ந்தவன் - என்றும், ச்வே. (6-8) - பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயதே – அவனுடைய சக்தியானது பலவிதமாகவும் – என்றும், மஹா. நா. (1-8-10, 11) - ந தஸ்யேசே கச்சந - அவனை யாரும் கட்டுப்படுத்துவதில்லை - என்றும், ஸ்ரீவிபு. (6-5-86) - ஸர்வேச்வர: ஸர்வத்ருக் ஸர்வவேத்தா ஸமஸ்தசக்தி: பரமேச்வராக்ய: – அனைத்தையும் எப்போதும் அனைத்துவிதங்களிலும் ஆள்பவனாகவும், அனைத்து காலத்திலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் காண்பவனாகவும், அனைத்தும் பொருந்தியவனாகவும், அனைத்து சக்திகளும் கொண்டவனாகவும் உள்ளதால் பரமேச்வரன் என்று கூறப்படுகிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்தும் அறிந்தவனாக, அனைத்து சக்தியாக, யாரும் தடுக்காதபடி சுதந்திரமாக உள்ள தன்னை, இவ்விதம் மாற்றி அமைத்துக்கொண்டு, தனது செயல் மற்றும் அடுத்தவர் செயல் என எதனையும் அறியாதவன் போன்றும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள சக்தி இல்லாதவன் போன்றும், தனக்கென்று எந்த ஒரு முக்கியத்வமும் இல்லாத சுதந்திரமற்றவன் போன்றும் நிற்கிறான். ஆனால், தன்னிடம் வெறுப்பைக் காண்பிப்பவர்களிடமும் கூட, அவர்கள் விடாமல், தனது கருணையானது அவர்களிடம் கரைபுரண்டு ஓடும்படிச் செய்கிறான். கண்ணை அளித்தல், புத்திரப்பேறு அளித்தல், செல்வம் கொடுத்தல் என்பது தொடங்கி, மோக்ஷம் முடிய உள்ள அனைத்தையும் அந்தந்த அதிகாரிகளுக்கு ஏற்றபடி, சேதநர்களுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறான். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – அர்ச்சாவதாரஸ் ஸர்வேஷாம் பாந்தவோ பக்தவத்ஸல:, ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் - அர்ச்சாவதாரமானது அனைத்து பக்தர்களுக்கும் வாத்ஸல்யத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆத்மாவிடம் உடைமை என்ற தன்மையும், என்னிடம் எஜமானனாக உள்ள தன்னையும் இருக்கிறது - என்பதற்கு ஏற்ப, அர்ச்சாவதாரமானது அனைவருக்கும் உறவாக, வாத்ஸல்யத்தை பக்தர்களிடம் கொண்டதாக உள்ளதாகும். சொத்தாக உள்ள தன்மை ஆத்மாவிடமும், சொத்தை உடையவனாக இருக்கும் தன்மை என்னிடமும் நிச்சயமாக இருக்கும் என்றும் எண்ண வைக்கும். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை - இதி வ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவஸ் த்விதி, மமாயம் ராம இத்யேவ தேவ: பரசுலாஞ்சந: - இவ்விதம் சொத்தாக இருத்தல் மற்றும் சொத்தை உடையவனாக இருத்தல் என்ற வேறுபாடு உள்ளபோதிலும், கேசவன் என்ற சொத்து, கோடாலி ஏந்திய பரசுராமன் என்ற சொத்து - என்பதற்கு ஏற்ப எஜமானனாக உள்ள தன்மை பகவானிடம் நிலையாக உள்ளபோதிலும், “என்னுடைய கேசவன்” என்றும், “கோடாலியை அடையாளமாகக் கொண்ட தேவனாகிய பரசுராமன் என்னுடையவன்” என்றும் உரிமை கொண்டாட வைப்பதாகும். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – மமாயம் வாமநோ நாம நாரஸிம்ஹாக்ருதி வராஹவேஷோ பகவாந் நரோ நாராயணஸ் ததா - வாமனன், ப்ரபுவாகிய நரஸிம்ஹமூர்த்தி, வராக ரூபம் கொண்டவன், அது போன்றே நரநாராயணன் – என்று, “இந்த வாமநன், ப்ரபுவான நரஸிம்ஹ ரூபம் கொண்டவன், வராஹ வேஷம் பூண்ட பகவான், அது போன்றே நரநாராயணன் என்னுடையவர்கள்” என்னும் உரிமை கொண்டாட வைப்பதாகும். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை - ததா க்ருஷணச்ச ராமச்ச மமாயமிதி நிர்திசேத், மத்க்ராமவாஸீ பகவாந் மமைவேதி ச தீர் பவேத் - அது போன்றே க்ருஷ்ணனும், இராமனும் என்னுடையவர்கள் என்று கூறுவர், எனது ஊரில் உள்ள பகவான் என்னுடையவன் என்ற எண்ணம் ஏற்படும் – என்பதற்கு ஏற்ப “க்ருஷ்ணனும் இராமனும் என்னுடையவர்கள்” என்றும், “எனது கிராமத்தில் உள்ள பகவான் என்னுடையவன்” என்பதான “என்னுடையது” என்ற புத்தி ஏற்படும். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – சிந்தயேச்ச ஜகந்நாதம் ஸ்வாமிநம் பரமார்த்தத:, அசக்தம் அஸ்வதந்தரம் ச ரக்ஷ்யஞ்சாபி ஜநார்தநம் – இயல்பாகவே ப்ரபுவாக, இந்த ஜகத்திற்கு நாதனாக, துன்பத்தை விலக்குபவனாக உள்ள அவனை சக்தியற்றவனாகவும், மற்றவர்கள் வசப்பட்டவனாகவும், அனைவரையும் காப்பாற்றத்தக்கவனாகவும் எண்ண வைக்கும் – என்பதற்கு ஏற்ப உண்மையாகவே உலகின் நாதனாக உள்ளவனும், எஜமானனும், துன்பத்தைப் போக்குபவனும் ஆகிய அவனை சக்தி அற்றவன், மற்றவர்கள் வசப்பட்டவன், நம்மைப் பாதுகாப்பதற்கு ஏற்றவன் என்று எண்ண வைக்கும். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – தத் இச்சயா மஹாதேஜா புங்க்தே வை பக்தவத்ஸல:, ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி - மிகுந்த தேஜஸ் கொண்டவனும், பக்தர்களிடம் வாத்ஸல்யம் கொண்டவனும், ஜகத்தின் பதியாக உள்ளவனும் ஆகிய பகவான், பக்தனுடைய விருப்பத்தால் உணவு ஏற்றல், நீராடுதல், நீர் பருகுதல், யாத்திரை செய்தல் ஆகியவற்றைச் செய்கிறான் - என்பதற்கு ஏற்ப, மிகுந்த தேஜஸ் கொண்ட ஜகத்பதியான அவன் பக்தர்களுக்கு வாத்ஸல்யத்தைக் காண்பித்தபடி, அவன் விருப்பத்திற்கு ஏற்ப உணவு உட்கொண்டு, நீராடி, பானம் பருகி, யாத்திரையும் செய்கிறான் என்பதாக அர்ச்சாவதாரம் உள்ளது. ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை - ஸ்வதந்த்ரஸ் ஸ ஜகந்நாதோபி அஸ்வதந்த்ரோ யதா ததா ஸர்வ சக்திர் ஜகத்தாதாபி அசக்த இவ சேஷ்ட தே - அந்த ஜகந்நாதன் ஸ்வதந்த்ரமானவன் என்றாலும், பக்தர்கள் விஷயத்தில் ஸ்வதந்த்ரம் இல்லாதவனாக உள்ளதைப் போன்று, அனைத்து சக்திகளையும் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானும் சக்தியற்றவனாக நடப்பான் - என்பதற்கு ஏற்ப, ஸ்வதந்த்ரனாகவும் இந்த ஜகத்தின் நாதனாகவும் உள்ளபோதிலும், அவன் எவ்விதம் ஸ்வதந்த்ரம் அற்றவன் போன்று உள்ளானோ; அனைத்து சக்திகளையும் கொண்டவனாக, இந்த ஜகத்தைப் படைத்தவனாக உள்ளபோதிலும், சக்தியற்றவன் போன்று உள்ளானோ, அது போன்ற அர்ச்சையும் உள்ளது. மேலும் அடியார்களுடைய அபராதங்கள் குறித்து அறியாதவன் போன்று எப்போதும் தயை செய்தபடியே அர்ச்சாவதாரம் உள்ளது. ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேசதஸ் ததா, உக்தா குணா ந சக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி - அர்ச்சாவதாரம் குறித்து என்னால் இவ்விதமாகக் கூறப்பட்டது. இது போன்று நூறு வருடங்கள் கூறினாலும் அர்ச்சை குறித்து முழுவதும் கூறி முடிக்கும் சக்தி இல்லை - என்பதற்கு ஏற்ப, அர்ச்சாவதாரம் குறித்து என்னால் சுருக்கமாக உரைக்கப்பட்டது, அர்ச்சையின் குணங்கள் குறித்து நூறு வருடங்கள் உரைத்தாலும் கூறி முடிக்க இயலாது என்பதாக அர்ச்சை உள்ளது. ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ருதே ச மத் ப்ரஸாதாத் வா ஸ்வதோ ஜ்ஞாநாகமேந வா - எனது கருணை இல்லை என்றாலும் இயல்பாகவே உள்ள ஞானத்தை விட்டு - என்பதற்கு ஏற்ப, எனது அருள் இல்லாது போனாலும் இயல்பாகவே ஏற்படும் ஞானம் இல்லாதபோது, அர்ச்சை குறித்து உரைக்க இயலாது. ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஏவம் பஞ்சப்ரகாரோஹம் ஆத்மநாம் பத்தாம் அத:, பூர்வஸ்மாதபி பூர்வஸ்மாத் ஜ்யாயாம்ச சைவோத்தரோத்தர: – இவ்விதம் ஐந்து நிலைகளில் உள்ள நான், பிறவி என்பதான ஸம்ஸாரத்தில் விழும் ஆத்மாக்களுக்கு, முன்னர் முன்னர் உள்ள நிலைகளைக் காட்டிலும், அடுத்த அடுத்த நிலைகளில் மேன்மேலும் சிறப்பாக உள்ளவன் -என்பதற்கு ஏற்ப, பரம் வ்யூஹம் என்பதான ஐந்து விதங்களில் உள்ள நான், ஸம்ஸாரத்தில் விழுந்தபடி உள்ள ஆத்மாக்களுக்கு, முன்பு முன்பு உள்ள நிலைகளைக் காட்டிலும், அடுத்து அடுத்து வருகின்ற நிலைகளில் ஸௌலப்யத்தால் உயர்ந்து உயர்ந்து நிற்பேன் என்பதாக அர்ச்சை உயர்ந்து உள்ளது. ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜந்மநாம் ஸங்க்யா பௌம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரங்கேச்வர! அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணு: அர்ச்சக பராதீந அகில ஆத்ம ஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி: தவ ததச் சீலாத் ஜடீபூயதே - திருவரங்கனே! உன்னுடைய குணங்களின் எண்ணிக்கை எல்லையற்று உள்ளது. அந்தக் குணங்களை வெளிப்படுத்தும் விதமாக உள்ள உனது திருஅவதாரங்களின் எண்ணிக்கையும் எல்லையற்று உள்ளது. இவை ஒரு புறம் இருக்கட்டும் (இவற்றை நான் பெரிதாக எண்ணவில்லை). ஆனால் – இந்தப் பூமியில் உள்ள கோயில்கள், வீடுகள், ஆச்ரமங்கள் ஆகியவற்றில் ஆராதனை செய்யும்படியான அர்ச்சா விக்ரஹமாக, அனைத்தையும் பொறுத்துக் கொள்பவனாக, அர்ச்சகரால் ஸமர்பிக்கப்படும் அனைத்து நிலைகளையும் ஏற்றுக் கொள்பவனாக மகிழ்வுடன் உள்ளாயே (இதுவல்லவா சிறப்பு)! இப்படியாக உள்ள உனது சீல குணத்தில் ஈடுபடாதவர்களே இல்லை, அனைவரும் மயங்குகின்றனர் – என்று அனைத்து அவதாரங்களையும் அருளிச்செய்த பின்னர், அர்ச்சாவதாரத்தின் வைபவத்தை சுருக்கமாக ஒரு ச்லோகத்தில் ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தார். ஆகவே ஈச்வரனுடைய ஸ்வரூப மேன்மையையும், அந்த ஸ்வரூபத்தையும் உயர்த்தியாக்கும் குணஙளின் மேன்மையையும், அந்தக் குணங்களின் காரணமாக அவன் செய்யும் ஸ்ருஷ்டி போன்ற செயல்களையும், இவ்விதம் அனைத்திற்கும் கரணமாக உள்ள அவனுடைய அனைத்து பலன்களையும் அளிக்கும் இயல்பையும், அந்தக் காரணத்தால் உபயோகப்படுகின்ற மேன்மையான திருமேனியின் சேர்க்கையையும், அந்தத் திருமேனியின் மேன்மைக்கு ஏற்றபடியான ரூபம் கொண்ட மஹாலக்ஷ்மி, பூதேவி, நீளாதேவி ஆகியோருடைய தன்மைகளையும், அந்தந்த திருமேனியுடன் சேர்தல் என்பதால் உண்டாகின்ற பரம் தொடக்கமான ஐந்து விதங்களையும் அருளிச்செய்தார். இப்படியாக ஈச்வர தத்த்வம் குறித்து உரைத்து முடித்தார்.