Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 201)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ருசி ஜநகத்வமும், சுபாச்ரயத்வமும், அசேஷ லோக சரண்யத்வமும், அநுபாவ்யத்வமு மெல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரிபூர்ணம்.

இவ்வர்ச்சாவதாரத்தினுடைய ருசி ஜநகத்வாதி குண பூர்த்தியை யருளிச்செய்கிறார் (ருசி ஜநகத்வமும்) என்று தொடங்கி.

அர்ச்சாவதாரமானது ருசியை ஏற்படுத்துதல் என்பது போன்று குணங்களைக் கொண்டுள்ளதை அடுத்து அருளிச்செய்கிறார்.

– அதாவது, சாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப் போரும் சேதநருக்குத் தன்னுடைய ரூபௌதார்ய குணங்களாலே வைமுக்க்யத்தை மாற்றித் தன்பக்கலிலே ருசியை ஜநிப்பிக்கையும், ருசி பிறந்தவனந்தரம் தன்னை பஜிக்குமவர்களுக்குக் கண்ணுக்கும் நெஞ்சுக்குமினிதாம்படி சுபாச்ரயமா யிருக்கையும, அவ்வளவன்றிக்கே தன்னையே உபாயமாக ஸ்வீகரிக்குமளவில் குணாகுண நிரூபணம் பண்ணாதே ஸகல லோகங்களிலுள்ளவர்களுக்கும் சரணவரணார்ஹமாயிருக்கையும், உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால் அநுபாவ்யமாம்படி யிருக்கையன்றிக்கே வைலக்ஷண்யத்தில் வாசியறிந்தவர்களுக்கு “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்னும்படி அநுபாவ்யமாம்படியிருக்கையுமாகிற இவையெல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரிபூர்ணமாயிருக்குமென்கை. “ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்நவதநேக்ஷணாம், க்ருத்வாத்மந: ப்ரீதிகரீம் ஸுவர்ண ரஜதாதிபி:, தாமர்ச்சயேத் தாம் ப்ரணமேத் தாம் பஜேத் தாம் விசிந்தயேத், விசத்யபாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம்” என்று இவ்வர்ச்சாவதாரத்தில் ஆச்ரிதர் உகந்ததொரு த்ரவயத்தைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு அவர்களுக்கு உபாஸ்யனுமாய் ப்ராப்யனுமாயிருக்கு மென்னுமிடம் ஸ்ரீசௌநக பகவானாலும் சொல்லப்பட்டதிறே.

சாஸ்த்ரங்களில் உள்ள விதிகள் மூலம் திருத்த இயலாமல் சேதநர்கள், தாழ்ந்த உலக விஷயங்களில் ஆழமான ஈடுபாடு கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த தனது திருமேனி அழகு மற்றும் தாராள குணம் ஆகியவற்றின் மூலம், அந்த விஷயங்களில் வெறுப்பு ஏற்படும்படியாக மாற்றி, தன்னிடம் ஆழ்ந்த ருசியை ஏற்படுத்துகிறான். அத்தகைய ருசி பிறந்தவுடன் தன்னை வணங்கியபடி உள்ள அவர்களுக்கு, அவர்களுடைய கண்ணிற்கும் நெஞ்சத்திற்கும் இனியவனாக உள்ள விதத்தில் மங்களகரமான இடமாக உள்ளான். அது மட்டும் அல்லாமல், தன்னை மட்டுமே உபாயமாகக் கொள்பவர்களை ஏற்கும்போது, அவர்களுடைய குணம் மற்றும் குணம் அற்ற தன்மை ஆகியவற்றை ஆராயாமல், அனைத்து லோகத்தில் உள்ளவர்களும் தனது திருவடியைப் பற்றும் விதத்தில் உள்ளான். உபாயமாக உள்ளபோது, பரமபதம் சென்றால் மட்டுமே தன்னை அனுபவிக்க இயலும் என்ற நிலை இல்லாமல், தனது மேன்மையை அறிந்தவர்களுக்கு அமலனாதிபிரான் (10) - என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே - என்பதற்கு ஏற்ப இங்கேயே அனுபவிக்கும்படிச் செய்கிறான். இவை அனைத்தும் அர்ச்சாவதாரத்தில் பரிபூர்ணமாக இருக்கும்படியாக உள்ளான். சௌநக ஸ்ம்ருதியில் - ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்நவதநேக்ஷணாம், க்ருத்வாத்மந: ப்ரீதிகரீம் ஸுவர்ண ரஜதாதிபி:, தாமர்ச்சயேத் தாம் ப்ரணமேத் தாம் பஜேத் தாம் விசிந்தயேத், விசத்யபாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் - தனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் விஷ்ணுவின் விக்ரஹத்தை தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு, மலர்ந்த முகம் மற்றும் அழகான கண்கள் கொண்டதாக அமைக்கவேண்டும். அதனையே எப்போதும் வணங்கி பூஜிக்கவேண்டும். அதனையே எப்போதும் சிந்திக்கவேண்டும். இவ்விதம் செய்பவன் தனது அனைத்து தோஷங்களையும் விட்டவனாக ப்ரஹ்மத்தை அடைகிறான் - என்பதாக, இந்த அர்ச்சாவதாரத்தில், தனது அடியார்கள் விரும்பியபடி உள்ள ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அவர்களால் உபாஸிக்கப்படுபவனாகவும் அடையப்படுபவனாகவும் உள்ளான் என்பதை ஸ்ரீசௌநக பகவானும் அருளிச்செய்தார்.