Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 200)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
அர்ச்சாவதாரமாவது, “தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம்” என்கிறபடியே சேதநர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவ விசேஷங்கள் போலன்றிக்கே, தேச காலாதிகாரி நியமமில்லாதபடி ஸந்நிதி பண்ணி, அபராதங்களைக் காணாக்கண்ணிட்டு, அர்ச்சக பரதந்த்ரமான ஸமஸ்த வ்யாபாரங்களையு முடையனாய்க் கொண்டு, கோயில்களிலும் க்ருஹங்களிலும் எழுந்ததருளி நிற்கும் நிலை.
ஆக அந்தர்யாமித்வத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்; அனந்தரம் அர்ச்சாவதாரத்தையுபபாதிக்கிறார் (அர்ச்சாவதாரமாவது) என்று தொடங்கி.
இதுவரை அந்தர்யாமியாக உள்ள தன்மையை விவரித்தார். அடுத்து, அர்ச்சாவதாரமாக உள்ள நிலையை விளக்குகிறார்.
அதாவது, “தமருகந்ததெவ்வுருவமவ்வுருவந்தானே” என்கிறபடியே, ஆச்ரிதர் யாதொன்றைத் தனக்குத் திருமேனியாகக கோலினார்கள் அத்தையே தனக்கு வடிவாகக் கொள்ளுமென்கிறபடியே, ஆச்ரிதரான சேதநர்க்கு அபிமதமான ஸ்வர்ண ரஜதாதி சிலா பர்யந்தமான ஏதேனுமொரு த்ரவ்யத்திலே, அயோத்யா மதுராதி தேச நியமமென்ன, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் நூறு ஸம்வத்ஸரமென்ன றாப் போலேயுண்டான கால நியமமென்ன, தசரத வஸுதேவாதிகளென்றாப்போலே சில அதிகாரி நியமமென்ன, இவற்றையுடைத்தாய்க் கொண்டு ஸந்நிதி பண்ணின ராம க்ருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போலன்றிக்கே, “பௌம நிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு” என்கிறபடியே ஒரு தேச நியமமில்லாதபடியாகவும், அர்ச்சகனுடைய அபேக்ஷா காலமொழியத் தனக்கென்றொரு கால நியமமில்லாதபடியாகவும், ருசியுடையாரெல்லார்க்குமாகையாலே இன்னாரென்பதொரு அதிகாரி நியமமில்லாதபடியாகவும் ஸந்நிதி பண்ணி, “ஸர்வஸஹிஷ்ணு:” என்கிறபடியே ஸஹிஷ்ணுவாகையாலே அவர்கள் செய்யுமபராதங்களைக் காணாக்கண்ணிட்டு, “அர்ச்சக பராதீநாகிலாத்ம ஸ்திதி:” என்கிறபடியே அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நாநாசநாதிகளான ஸமஸ்த வ்யாபாரங்களையுமுடையனாய்க் கொண்டு எழுந்தருளி நிற்கும் நிலை அர்ச்சாவதாரமாவதென்கை. “அர்ச்சா பூஜா ப்ரதிமயோ:” என்கையாலே, அர்ச்சா சப்தம் ப்ரதிமாவாசி.
முதல் திருவந்தாதி (44) – தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே - என்பதற்கு ஏற்ப, எந்த ஒன்றைத் தனது அடியார்கள் தனக்குத் திருமேனியாக இருக்கவேண்டும் என்று விரும்பிக் கேட்கிறார்களோ, அதனையே தன்னுடைய வடிவமாகக் கொள்கிறான். அதாவது தனக்கு அடியார்களாக உள்ள சேதநர்களுக்கு விருப்பமான தங்கம், வெள்ளி, கல் போன்ற ஏதேனும் ஒரு பொருளில் நிலைக்கிறான்; அயோத்தி மற்றும் மதுரா என்பது போன்ற இடங்களில், பதினோராயிரம் அல்லது நூறு வருடம் என்பது போன்ற கால அளவுகளில், தசரதன் மற்றும் வஸுதேவன் என்பது போன்ற அதிகாரிகளிடத்தில் வந்து தோன்றிய இராமன் மற்றும் க்ருஷ்ணன் என்பதான விபவங்கள் போன்று அல்லாமல், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-74) - பௌம நிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு – இந்தப் பூமியில் உள்ள கோயில்கள், வீடுகள், ஆச்ரமங்கள் - என்பதற்கு ஏற்ப எந்த ஒரு இடக் கட்டுப்பாடுகளும் இன்றி; அர்ச்சகர் விரும்பும் காலம் அல்லாமல் தனக்கென்று எந்த ஒரு காலக் கட்டுபாடும் இன்றி; தன் மீது ருசி கொண்ட அனைவருக்கும் தன்னை அமைத்துக் கொள்வதால், இன்ன அதிகாரி என்பது போன்று கட்டுப்பாடுகள் இன்றி அர்ச்சையில் அருகில் வந்து நிற்கிறான். “ஸர்வஸஹிஷ்ணு: - அனைத்தையும் பொறுப்பவன்” என்பதற்கு ஏற்ப, அனைத்தையும் பொறுப்பதால், அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விடுகிறான். “அர்ச்சக பராதீநாகிலாத்ம ஸ்திதி: – அர்ச்சகர்களுடைய வசப்பட்டு நிற்கிறான்” என்பதற்கு ஏற்ப, அர்ச்சகர்களுக்கு வசப்பட்டவனாக நீராடிக் கொள்ளுதல் மற்றும் உணவை ஏற்றல் என்பது போன்ற அனைத்துவிதமான செயல்களையும் செய்தபடி எழுந்தருளியுள்ளான். இதுவே அர்ச்சாவதார நிலையாகும். “அர்ச்சா பூஜா ப்ரதிமயோ: - அர்ச்சை என்பது பூஜை மற்றும் விக்ரஹம் ஆகியவற்றைக் குறிக்கும்” என்பதால், அர்ச்சையானது விக்ரஹ ரூபமாகிறது.