Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 199)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸ்வர்க்க நரக ப்ரவேசாதி ஸர்வாவஸ்த்தைகளிலும் ஸகல சேதநர்க்கும் துணையாய், அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே சுபாச்ரயமான திருமேனியோடே கூடிக் கொண்டு அவர்களுக்கு த்யேயனாகைக்காகவும், அவர்களை ரக்ஷிக்கைக்காகவும், பந்து பூதனாய்க் கொண்டு ஹ்ருதய கமலத்திலேயெழுந்தருளியிருக்குமிருப்பு.

இதுதான் ஆத்மாவினுள்ளே தன் ஸ்வரூபத்தாலே வ்யாபித்து நின்று நியமிக்குமதும், ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஹ்ருதயத்திலே வ்யாபித்திருந்து நியமிக்குமதுமாய்க் கொண்டு, த்விவிதமாயிருக்கையாலே, உபயத்தையுமருளிச் செய்கிறார் (ஸ்வர்க்க நரக ப்ரவேசாதி என்று தொடங்கி).

இத்தகைய அந்தர்யாமி நிலை என்பது ஆத்மாவிற்குள் தனது ஸ்வரூபத்தால் பரவி நின்று நியமிப்பதாகவும், திருமேனியுடன் சேர்ந்தபடி நின்று அவர்களுடைய இதயத்தில் பரவி நின்று நியமிப்பதாகவும் உள்ளது. ஆக, இப்படி இரண்டுவிதமாக உள்ளதால், அவை இரண்டைக் குறித்தும் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச ஸர்வேஷாம் பந்துவத் ஸ்திதம்” என்று தொடங்கி, “ஸ்வர்க்க நரக ப்ரவேசேபி பந்துராத்மாஹி கேசவ:” என்று சொன்னபடியே, புண்ய நிபந்தநமாக ஸ்வர்க்கத்தை ப்ரவேசிக்கையும், பாப நிபந்தனமாக நரகத்தை ப்ரவேசிக்கையும், உபய நிபந்தநமாக கர்ப்பத்தை ப்ரவேசிக்கையும் முதலான எல்லா அவஸ்தைகளிலும், எல்லாச் சேதநர்க்கும் இராமட மூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே துணையாய், அவர்களை ஒருகாலும் விடாதே அந்தராத்மாவாய் நிற்கிற நிலைக்குமேலே “அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக” என்றும், “நீலதோயதமத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா” என்று மித்யாதிகளிற் சொல்லுகிறபடியே, ஜ்யோதீரூபமாய் ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும்படி “செம்பொனே” திகழுகிற புகராலே நீல தோயதத்தை விழுங்கின வித்யுலேகை போலேயிருக்கையாலே பாஹ்ய விஷய ப்ரவணமான மநஸ்ஸை அதில் நின்று பற்றறுத்துத் தன் பக்கலிலே ப்ரவணமாக்கிக் கொள்ளும்படி சுபாச்ரயமான திருமேனியோடே அந்த சேதநர்க்கு த்யான ருசி பிறந்தபோது த்யேயனாகைக்காகவும், புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு அவர்களை ரக்ஷிக்கைக்காகவும், நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் துடக்காலே பந்து பூதனாய்க் கொண்டு “பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ் சாப்யதோமுகம்” என்கிற ஹ்ருதயத்திலே யெழுந்தருளி யிருக்குமிருப்பென்கை. அந்தராத்மதையை முதலிற்சொல்லி அதுக்குமேலே ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஹ்ருதய கமலத்திலிருக்குமிருப்பைச் சொல்லித் தலைக்கட்டிற்று விக்ரஹ யோக ப்ரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற ப்ரகரணமாகையாலே.

அதாவது, “அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச ஸர்வேஷாம் பந்துவத் ஸ்திதம் - அந்தர்யாமி ஸ்வரூபமானது அனைத்திற்கும் உறவினர் போன்று உள்ளது” என்று தொடங்கி, “ஸ்வர்க்க நரக ப்ரவேசேபி பந்துராத்மாஹி கேசவ: - ஜீவாத்மாக்கள் ஸ்வர்கம் சென்றாலும், நரகம் புகுந்தாலும் அவர்களுக்குள் புகுந்து உறவினன் போன்று எப்போதும் கேசவன் உள்ளான்” என்று கூறுவதற்கு ஏற்ப, புண்ணியத்தின் விளைவாக ஸ்வர்க்கம் புகுதலும், பாபத்தின் காரணமாக நரகம் புகுதலும், அந்த இரண்டின் காரணமாக கர்ப்பத்தில் புகுதலும் என்பதான அனைத்து நிலைகளிலும், அனைத்து சேதநர்களுக்கும், தந்தையிடம் கோபித்துக்கொண்டு சத்திரம் சென்று தங்கியுள்ள புத்திரனுக்கு, அவன் அறியாமல் யார் மூலமாகவே தந்தை உணவு அனுப்புவது போன்று, ஒவ்வொரு சேதநர்க்கும் உள்ளே இருந்தபடி, அவர்களுடைய இருப்பு என்பதையே உறுதியாக நோக்கியபடி உள்ளதால் அவர்களுக்குத் துணையாக அந்தர்யாமி நிலை உள்ளது. இவ்விதம் அவர்களை ஒருபோதும் விடாமல் அந்தராத்மாவாக நிற்கும் நிலை மட்டும் அல்லாமல், கட. (2-4-13) – அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக - கட்டை விரல் அளவுள்ள புருஷன் அனைவருடைய இதயத்திலும், புகை இல்லாத ஜ்யோதியாக உள்ளான் – என்றும், தை. (2-11) - “நீலதோயதமத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா - அனைத்து ஜீவாத்மாக்களின் உள்ளிலும், நீல மேகம் போன்ற அவன், மின்னல் கொடி போன்று அமர்ந்துள்ளான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஜ்யோதி ரூபமாக, நீல நிறத்தில் உள்ள உள்ள தன்னை முழுவதுமாக நிறையும் விதத்தில், திருவாய்மொழி (1-10-9) – செம்பொனே - என்பதற்கு ஏற்ப உள்ள மகிழ்வு காரணமக, நீல இரத்தினத்தை விழுங்கிய மின்னல் போன்று உள்ளான். ஆகவே மற்ற விஷயங்களில் அலையும் மனத்தை, அவற்றிடம் உள்ள பற்றுதல்களை அறுத்து, தனது பக்கம் காதல் கொள்ளும்படியாக, மங்களகரமாக இருப்பிடமாக உள்ள திருமேனியுடன், அந்தச் சேநர்களுக்கு த்யான ருசி ஏற்படும்போது அவர்களால் த்யானிக்கப்படும் பொருளாக நிற்பதற்காகவும், அவர்களுடைய புத்தி போன்றவற்றை நியமிப்பவனாகவும் உள்ளதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்களுடைய உறவினன் என்பதை உணர்த்தவல்ல நாராயணன் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுபவனாக அவர்களுடைய உறவினனாக உள்ளதால், “பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ் சாப்யதோமுகம் - கவிழ்த்த தாமரை மொட்டு போன்றுள்ள இதயத்தில்” என்பதற்கு ஏற்ப, இதயத்தில் எழுந்தருளியுள்ள நிலையே அந்தர்யாமி நிலையாகும். அவன் தனது திருமேனியுடன கூடியுள்ள நிலையான பரத்வம் போன்ற பல நிலைகளைக் கூறும் இடமாக உள்ளதால், இங்கு அந்தர்யாமியாக உள்ளதை முதலில் உரைத்து, தொடர்ந்து திருமேனியுடன் உள்ளதை உரைத்து, இதயம் என்ற தாமரையில் உள்ளதைக் கூறி முடித்தார்.