Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 196)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
பல ப்ரமாணங்களிலும் ப்ருகு சாபாதிகளாலே பிறந்தானென்கையாலே, அவதாரங்களுக்கு ஹேது கர்மமாக வேண்டாவோ வென்னில்.
அவதாரம் ஐச்சமென்றறியாதே கர்மநிபந்தநமாக நினைத்து மந்த மதிகள் பண்ணும ப்ரச்நத்தை யநுவதிக்கிறார் (பல ப்ரமாணங்களிலும்) என்று தொடங்கி.
அவதாரங்கள் அனைத்தும் அவனுடைய இச்சையால் ஏற்படுகிறது என்பதை அறியாமல், கர்மம் காரணமாகவே அவை அவனுக்கு ஏற்படுகிறது என்று சில மந்த புத்தி கொண்டவர்கள் எழுப்பும் கேள்வியை தானே எழுப்பிக்கொள்கிறார்.
அதாவது இதிஹாஸ புராண ரூபமான பல ப்ரமாணங்களிலும் “பதி வ்ரதா தர்ம பரா ஹதா யே ந மம ப்ரியா, ஸ து ப்ரியா விரஹித: சிர காலம் பவிஷ்யதி” என்றாப்போலே யுண்டான ப்ருகு சாபம் முதலானவற்றாலே பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சையன்றிக்கே கர்மமாக வேண்டாவோ? என்னிலென்கை.
இதிகாசம் மற்றும் புராணம் என்னும் வடிவில் உள்ள ப்ரமாணங்களில், “பதி வ்ரதா தர்ம பரா ஹதா யே ந மம ப்ரியா, ஸ து ப்ரியா விரஹித: சிர காலம் பவிஷ்யதி - (ப்ருகு முனிவர் உத்தரகாண்டத்தில் கூறுவது) – பதி வ்ரதையாகவும், தர்ம வழியில் நின்றவளும் ஆகிய எனது ப்ரியமான மனைவி யாரால் கொல்லப்பட்டானோ, அவன் பல காலம் தனது மனைவியைப் பிரிந்து நிற்பான்” என்று கூறப்பட்டது போன்று, ப்ருகு முனிவருடைய சாபம் முதலானவை மூல்மே இராமன் பிறந்தான் என்றே ஆகிறது; இதனால், அவதாரங்களுக்குக் காரணம் கர்மம் அன்றி அவனுடைய இச்சை அல்ல என்று கூறவேண்டாமா?