Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 195)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

பலம் ஸாது பரித்ராணாதி த்ரயம்.

– அதாவது, “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்று அவன் தானருளிச் செய்தபடியே, தன் பக்கல் ப்ரேம யுக்தராய், தன்னுடைய அநுபவமொழிய க்ஷணகாலமும் செல்லாதே, தன்னைக் காணவேணுமென்று ஆசைப்பட்டிருக்கும் ஸாது ஜநங்களைத் தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகந ஆலாபந்தாந முகேந ரக்ஷிக்கையும், தத் விரோதிகளான துஷ்க்ருத்துக்களை நசிப்பிக்கையும், தன்னுடைய ஆராதந ரூபமாய் க்ஷீணமாய்க் கிடக்கிற வைதிக தர்மத்தை ஆராத்யனான தன் ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையுமாகிற இம்மூன்றுமே பலமென்கை. “ஸாதவ உக்த லக்ஷண தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாச்ரயணே ப்ரவ்ருத்தா: மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மநஸா கோசரதயா மத் தர்சநேந விநா ஆத்மதாரண போஷணாதிகம் அல்பமாநா: க்ஷணமாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா: பரசிதில ஸர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவ லோகந ஆலாபநாதி தாநேந தேஷாம் பரித்ராணாய தத் விபரீதாநாம் விநாசாய ச க்ஷீணஸ்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப தர்சநேந ஸ்தாபநாய ச யுகே யுகே ஸம்பவாமி; க்ருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாஸ்தீத்யர்த்த:” என்றிறே இந்த ச்லோகத்துக்கு அர்த்தம் பாஷ்யகாரர் அருளிச்செய்தது. “யே பக்தா பவதேக போக மநஸோ நந்யாத்ம ஸஞ்ஜீவநா: தத் ஸம்ச்லேஷண தத் விரோதி நிதநாத்யர்த்தம் வநாத்ரீச்வர!, யதவாதரஸ் ஸுர நராத் யாகார திவ்யாக்ருதிஸ் தேநைவ த்ரிதசைர் நரைச்ச ஸுகரம் ஸ்வப்ரார்த்தித ப்ரார்த்தநம்” என்றிறே ஆழ்வானுமருளிச் செய்தது.

அவதாரங்களுடைய பலன் என்ன என்பதை, கீதை (4-8) – பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே - ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் - என்று அவனே அருளிச்செய்கிறான். தன்னிடம் எப்போதும் காதல் கொண்டு, தன்னுடைய அனுபவம் என்பது இல்லாமல் ஒரு நொடிப்பொழுது கூட கழிக்க இயலாமல், தன்னைக் காணவேண்டும் என்ற ஆசை கொண்டுள்ள ஸாதுக்களை, தன்னுடைய “ரூபம், லீலைகள் கடாக்ஷம், இனிய பேச்சு” என்பதன் மூலம் காப்பாற்றுதல்; தனது அடியார்களுடைய விரோதிகளாக உள்ளவர்களை அழித்தல்; தனது ஆராதனை என்பதாக உள்ளவையும், அழிந்து போகும் நிலையில் உள்ளவையும் ஆகிய வேதமார்க்கத்தை, அவற்றால் ஆராதிக்கப்படுபவனாகிய தனது ஸ்வரூபத்தைக் காண்பித்து மீண்டும் நிலை நாட்டுதல் என்பதான மூன்றுமே அவதாரங்களுடைய பயன் ஆகும். இந்த ச்லோகத்திற்கு பாஷ்யகாரர், “ஸாதவ உக்த லக்ஷண தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாச்ரயணே ப்ரவ்ருத்தா: மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மநஸா கோசரதயா மத் தர்சநேந விநா ஆத்மதாரண போஷணாதிகம் அல்பமாநா: க்ஷணமாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா: பரசிதில ஸர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவ லோகந ஆலாபநாதி தாநேந தேஷாம் பரித்ராணாய தத் விபரீதாநாம் விநாசாய ச க்ஷீணஸ்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப தர்சநேந ஸ்தாபநாய ச யுகே யுகே ஸம்பவாமி; க்ருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாஸ்தீத்யர்த்த: - ஸாது என்பது நல்லவர்கள், தர்ம சீலர்கள் ஆகியோரைக் குறிக்கும். அப்பதமானது, என்னைச் சரணம் புகுந்த வைஷ்ணவர்களைக் குறிக்கும். என்னுடைய திருநாமம், லீலைகள் மற்றும் ரூபம் போன்றவை வாக்கிற்கு மனதிற்கும் எட்டாதவை ஆகும். ஆயினும் இவர்கள் அனைத்திலும் என்னைக் காண்பவர்களாக, என்னைக் காணாமல் உள்ளபோது மனம் வருந்தி இருப்பவர்கள் ஆவர். நான் இல்லாத ஒரு நொடிப்பொழுதும் கூட இவர்களுக்கு ஆயிரம் கல்பகாலம் போன்றதாகும். என்னை விட்டுப் பிரிய நேரிடும் என்றால், தங்களுடைய ஒவ்வொரு உடல் உறுப்பும் சோர்வதாகவே எண்ணுவார்கள். ஆகவே இவர்களுக்கு எனது உருவத்தைக் காண்பிப்பதற்காகவும், என்னுடன் இவர்கள் பழகுவதற்காகவும், இவர்களைக் காப்பதற்காகவும் நான் தேவனாகவும் மனிதர்களாகவும் பிறவி எடுக்கிறேன். மிகவும் பாபம் நிறைந்த செயலாகிய, எனது அடியார்களை அவமதித்தல் போன்றவற்றைச் செய்யும் விரோதிகளை அழிப்பதற்காகவும், எனது உபாஸனையாகிய வேத தர்மங்களைக் காப்பாற்றவும் நான் அவதரிக்கிறேன். மேலும் என்னைக் கண்டு அனைவரும் வணங்குவதற்காகவும் நான் தோன்றுகிறேன். நான் பிறப்பதற்கு க்ருதயுகம், த்ரேதாயுகம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை” என்று அருளிச்செய்தார். ஸ்வாமி கூரத்தாழ்வானும் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் (86) – யே பக்தா பவதேக போக மநஸோ நந்யாத்ம ஸஞ்ஜீவநா: தத் ஸம்ச்லேஷண தத் விரோதி நிதநாத்யர்த்தம் வநாத்ரீச்வர!, யதவாதரஸ் ஸுர நராத் யாகார திவ்யாக்ருதிஸ் தேநைவ த்ரிதசைர் நரைச்ச ஸுகரம் ஸ்வப்ரார்த்தித ப்ரார்த்தநம் - திருமாலிருஞ்சோலை என்ற வனத்தின் ஈச்வரனே! தங்களுடைய ஆத்ம நலத்தைப் பெரிதும் பொருட்படுத்தாமல், உன்னுடைய சேர்த்தி மற்றும் அணைத்தல் ஆகியவற்றை மட்டுமே விரும்பும் மனம் கொண்ட அடியார்கள் யார் உள்ளனரோ, அந்தப் பக்தர்களுடன் சேர்ந்து இருத்தல், அவர்களுடைய விரோதிகளை அழித்தல் போன்ற காரணங்களுக்காக, அண்டத்தின் நடுவில் தேவன் மனிதன் விலங்கு என்பது போன்ற திவ்யமான திருமேனியுடன் நீ அவதரித்தாய்; இந்தக் காரணத்தால், தேவர்களாலும் மனிதர்களாலும் செய்யவேண்டிய ப்ரார்த்தனையானது சுலபமாக உள்ளது- என்றதும் காண்க.