Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 194)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
அவதாரஙகளுக்கு ஹேது இச்சை.
லோகத்தில் ஜன்மங்களுக்கு ஹேது கர்மமாயன்றே இருப்பது; இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏதென்னவருளிச் செய்கிறார் (அவதாரங்களுக்கு ஹேது இச்சை) என்று.
இந்த லோகத்தில் ஒரு பிறவி எடுத்தல் என்பதற்குக் காரணமாக, கர்மமே உள்ளது. இவனுடைய அவதாரங்களுக்குக் காரணமாக உள்ளது என்ன என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “பஹுதா விஜாயதே”, “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி”, “பல பிறப்பாய்”, “எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்”, “மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப்பிறவி பிறந்த” என்னும்படி பஹுவிதமாகச் சொல்லப்படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது, “இப்படியவதரிப்போம்” என்னும் ஸ்வேச்சையொழிய ஹேத்வந்தரமில்லை யென்கை. “ஸம்பவாமி ஆத்மமாயயா” என்று தானே யருளிச் செய்தானிறே; “ஆத்மமாயயா” என்றது, “ஆத்மேச்சயா” என்றபடி; “மாயா வயுநம் ஜ்ஞாநம்” என்று மாயா சப்தம் ஜ்ஞாந வாசியாகையாலே, இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்லுகிறது; “இச்சா க்ருஹீதாபிமதோரு தேஹ” என்னக் கடவதிறே. – “இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சாவிஹ்ருதயே விபூதீநாம் மத்யே ஸுர நர திரச்சாம் அவதரந், ஸஜாதீயஸ் தேஷாமிதிது விபவாக்க்யாமபி பஜந் கரீச! த்வம் பூர்ணோ வரகுணகணைஸ் தாந ஸ்தகயஸி” என்றும், “ஏவம் ஸ்திதே த்வதுபஸம்ச்ரயணாப்யுபாயோ மாநேந கேநசித அலப்ஸ்யத நோப லப்தும், நோசேத் அமர்த்ய மநுஜாதிஷு யோநிஷு த்வம் இச்சா விஹார விதிநா ஸமவாதரிஷ்ய:” என்றும் அவதார ஹேது இச்சையென்னுமிடத்தை ஆழ்வான் விசதமாகவருளிச் செய்தாரிறே.
“பஹுதா விஜாயதே – பலவிதமாகப் பிறக்கிறான்” என்றும், கீதை (4-5) – பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி - எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்தன – என்றும், திருவாய்மொழி (1-3-2) – பல பிறப்பாய் - என்றும், திருவிருத்தம் (1) - எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் – என்றும், திருவாய்மொழி (3-5-6) – மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப்பிறவி பிறந்த - என்றும் பலவிதமாகக் கூறப்படுவதான இவனுடைய அவதாரங்களுக்கான காரணம், “இப்படியாக நான் அவதரிப்பேன்” என்ற இச்சை அல்லாமல், வேறு ஏதும் இல்லை. கீதை (4-6) - ஸம்பவாமி ஆத்மமாயயா - எனது இச்சையால் அவதரிக்கிறேன் - என்று தானே உரைத்தான் அல்லவோ? இங்கு “ஆத்ம மாயயா” என்றால் “ஆத்ம இச்சயா” என்று பொருள்; அதாவது “மாயா வயுநம் ஜ்ஞாநம் - மாயா, வயுநம், ஞானம் ஆகிய சொற்கள் ஞானத்தைக் குறிக்கும்” என்பதற்கு ஏற்ப “மாயா” என்ற பதமானது ஞானத்தைக் குறிப்பதால், இச்சை என்ற வடிவில் உள்ள ஞானம் என்று கருத்து. “இச்சா க்ருஹீதாபிமதோரு தேஹ - எனது இச்சையால் நான் பல சரீரங்களை எடுக்கிறேன்” என்பது காண்க. ஸ்ரீவரதராஜஸ்தவத்தில் - இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சாவிஹ்ருதயே விபூதீநாம் மத்யே ஸுர நர திரச்சாம் அவதரந், ஸஜாதீயஸ் தேஷாமிதிது விபவாக்க்யாமபி பஜந் கரீச! த்வம் பூர்ணோ வரகுணகணைஸ் தாந ஸ்தகயஸி - வரதா! உனது இந்த நிலையானது வ்யூஹத்தைப் பற்றியே உள்ளது. நீ விரும்பும் விதமாக, உனது விளையாட்டின் காரணமாக, உனது லோகத்தில் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் ஆகியோருடைய நடுவில் அவதரிக்கும் நீ, விபவ அவதாரம் என்ற பெயர் பெறுகிறாய். பூர்ணமான குணங்கள் கொண்டவனாக நீ உள்ளபோதிலும், அந்த மனிதர் விலங்குகள் ஆகியவற்றின் நடுவில் உள்ளதால், அத்தகைய உயர்ந்த குணங்களை மறைத்துக் கொள்கிறாய் - என்றும், அதிமாநிஷஸ்தவத்தில் - ஏவம் ஸ்திதே த்வதுபஸம்ச்ரயணாப்யுபாயோ மாநேந கேநசித அலப்ஸ்யத நோப லப்தும், நோசேத் அமர்த்ய மநுஜாதிஷு யோநிஷு த்வம் இச்சா விஹார விதிநா ஸமவாதரிஷ்ய: - நீ இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவன் ஆவாய். ஆனால் உனது இச்சையால் இங்கு ஸஞ்சரிக்கும்போது தேவர்கள், மனிதர்கள், தாவரங்கள் என்பது போன்று பிறவிகளில் நீ அவதரிக்காமல் இருந்திருந்தால், உன்னை அடையும் வழியை அறிதல் என்பது இயலாமல் போகும் – என்றும் உள்ள இடங்களில், அவனுடைய அவதாரத்திற்கான காரணம் என்பது, அவனுடைய இச்சையே ஆகும் என்று கூரத்தாழ்வான் விரிவாக அருளிச்செய்தார்.