Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 193)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
நித்யோதித சாந்தோதிதாதி பேதமும், ஜாக்ரத் ஸம்ஜ்ஞாதியான சாதுராத்ம்யமும், கேசவாதி மூர்த்யந்தரமும், ஷட்த்ரிம்சத் பேத பிந்நமான பத்மநாபாதி விபவமும், உபேந்த்ர த்ரிவிக்ரம ததிபக்த ஹயக்ரீவ நரநாராயண ஹரி க்ருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாத்யவதார விசேஷங்களும, அவற்றினுடைய புஜாயுத வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்களும், துர்வதரங்களுமாய், குஹ்யதமங்களுமாயிருக்கையாலே சொல்லுகிறிலோம்.
– ஆக, விபவங்களினுடைய ஆநந்த்யத்தையும், அதில் கௌண முக்க்ய விபாகத்தையும், அந்த கௌணமுக்க்யங்களுக்குண்டான பரஸ்பர விசேஷத்தையும் அருளிச் செய்தார் கீழ். அநந்தரம், கீழ்ச் சொன்ன பரவ்யூஹங்களிலும் முக்க்ய விபவங்களிலுமுண்டான அவாந்தரபிதைகளும், அவற்றினுடைய புஜாயுத வர்ணாதி பேதங்களும் சொல்லவேண்டியிருக்கச் செய்தேயும் சொல்லாமைக்கு ஹேதுவையருளிச் செய்கிறார் (நித்யோதித) இத்யாதியாலே.
விபவங்களுடைய எண்ணற்ற தன்மைகள், அவற்றில் உள்ள முக்கியம் மற்றும் முக்கியம் அல்லாத வேறுபாடுகள், முக்கியம் மற்றும் முக்கியம் அல்லாதவை குறித்துள்ள சிறப்புகள் போன்ற பலவற்றையும் இதுவரை அருளிச்செய்தார். அடுத்து, இதுவரை கூறப்பட்ட பரம், வ்யூஹங்கள் மற்றும் முக்கியமான விபவங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பிரிவுகள், அவற்றில் காணப்படும் “திருக்கரங்கள், ஆயுதங்கள், நிறம்” போன்ற வேறுபாடுகள் முதலியவற்றைக் கூறவேண்டும் என்றாலூம், அவற்றைக் கூறாமல் விடுத்தமைக்கான காரணத்தை அருளிச்செய்கிறார்.
நித்யோதித சாந்தோதிதாதி பேதமாவது, “நித்யோதிதாத் ஸம்பபூவ ததா சாந்தோதிதோ ஹரி:” இத்யாதியிற் சொல்லுகிறபடியே நித்யமுக்தாநுபாவ்யராய் நித்யோதித ஸம்ஜ்ஞகராயிருக்கிற பரவாஸுதேவரும், அவர்பக்கலில் நின்றும் உத்பந்நராய், ஸங்கர்ஷண வ்யூஹ காரணமாய், சாந்தோதித ஸம்ஜ்ஞகராயிருக்கிற வ்யூஹ வாஸுதேவரும் முதலான வாஸுதேவ மூர்த்தியில் பேதமும். வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும். “நாலுமுண்டாயிருக்க மூன்றென்கிறது, வ்யூஹ வாஸுதேவ ரூபத்துக்குப் பரரூபத்திற் காட்டில் அநுஸந்தேய குண பேதமில்லாமையாலே” என்று அபியுக்தர் சொல்லுகையாலே, இவர் கீழ் வ்யூஹ த்ரயமென்றருளிச் செய்ததுக்கும் இங்கு வ்யூஹ வாஸுதேவருண்டாக வருளிச் செய்ததுக்கும் விரோதமில்லை. (ஜாக்ரத் ஸம்ஜ்ஞாதியான சாதுராத்ம்யம்) ஆவது, சாந்தோதிதோத்பத்தி சொன்னவநந்தரம், “சாதுராத்ம்யம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்ட்டிந:, உபாஸகாநுக்ரஹார்த்தம் ய: பரச்சேதி கீர்த்யதே; சாந்தோதிதாத் ப்ரவ்ருத்தஞ்ச சாதுராத்ம்ய த்ரயம் ததா உபாஸகாநுக்ரஹார்த்தம் ஸேநேச மம ததபுந:; ஸுஷுப்தி ஸ்வப்ந ஸம்ஜ்ஞம் யத் ஜாக்ரத் ஸம்ஜ்ஞம் ததாபரம்; சாதுர்மாஸ்யம் மஹாபாக பஞ்சமம் பாரமேச்வரம்” என்றும், “ஆத்யோ வ்யூஹோ மயா ப்ரோக்தோ ஹ்யபரம் த்ரிதயம் ச்ருணு, உபாஸகாநுக்ரஹார்த்தம் ஸ்வப்நாதிபத ஸம்ஸ்திதம்; ஸ்வபநாத்யவஸ்தா பேதஸ் து த்யாயிநாம் கேதசாந்தயே, தத் தத் பதஸ்த தேவாநாம் தந்நிவ்ருத்த்யர்த்தமேவ ச, ஸ்வப்நாத்யவஸ்த ஜீவாநாம் அதிஷ்ட்டாதார ஏவ தே; கர்மாத்மநாஞ்ச ஸேநேச! தத் பதஸ்தோ மமேச்சய:, உபாஸ்யோஹம் மஹாபாக பத பேத ப்ரயோஜநம்” என்றுஞ் சொல்லுகிறபடியே, உபாஸகாநுக்ரஹார்த்தமாகத் தன் க்ருபையாலே பணணினதாய், த்யாயிகளுடைய கேதசாந்தியின் பொருட்டும், தத் தத் பதஸ்த ஜீவர்களுக்கு தந்நிவ்ருத்தியின் பொருட்டுமாய், தத்ததவஸ்த ஜீவர்களுக்கு அதிஷ்டாத்ருதவேந தத் பதஸ்தனாய்க் கொண்டு, கர்மவச்யரான சேநர்க்கு உபாஸ்யனாகையே பத பேத ப்ரயோஜனமுமாய்க் கொண்டு வ்யூஹ சதுஷ்டயத்திலும் ப்ரத்யேகமுண்டான ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி துரீய ஸம்ஜ்ஞகமான நாலுவடிவையுமுடையனாயிருக்கை. – (கேசவாதி மூர்த்யந்தரம்) ஆவது, “ஏததந்தர்க்கதாஸ் ஸர்வே மூர்த்யந்த ரஸமாஹ்வயா:, கேசவாத்யா த்வாதச ச லலாடாதிஷு நிஷ்டிதா:, சரீர ரக்ஷகாஸ் ஸர்வே த்யாயிநாம் தாபசாந்தயே” என்றும், “கேசவாத்யம் த்ரயம் தத்ர வாஸுதேவாத் விபாவ்யதே, ஸங்கர்ஷணாச்ச கோவிந்த பூர்வம் த்ரிதயமத்புதம் த்ரிவிக்ரமாத்யம் த்ரிதயம் ப்ரத்யும்நாத் உதிதம் முநே! ஹ்ருஷீகேசாதிகம் தத்வத அநிருத்தாந் மஹாமுநே” என்றும் சொல்லுகிறபடியே, லலாடாதிகளிலே நின்று சரீர ரக்ஷணத்தைப் பண்ணா நின்று கொண்டு, த்யாயிகளினுடைய தாபசாந்தியின் பொருட்டாயிருப்பதாய், வ்யூஹ சதுஷ்டயத்திலும் ஓரொன்றிலே மும்மூன்றாக உத்பந்நமாய், மூர்த்யந்தர ஸமாஹ்வயமாயிருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம். (ஷட்த்ரிம்சத் பேத பிந்நமான பத்மநாபாதி விபவம்) ஆவது, “பத்மநாபாதிகாஸ் ஸர்வே வைபவீயாஸ் ததைவ ச, ஷட்தரிம்சத் ஸங்க்யா ஸங்க்யாதா: ப்ராதாந்யேந கணேச்வர!, ஷட்த்ரிம்சத் பேத பிந்நாஸ் தே பத்மநாபாதிகாஸ் ஸுரா:, அநிருத்தாத் ஸமுத்பந்நா தீபாத் தீப இவேச்வரா:” என்கிறபடியே தீபாத் தீபாந்தரம்போலே, அநிருத்தாத் உத்பந்நங்களாய், ப்ரதாநங்களாய், ஷட்த்ரிம்சத் பேதத்தாலே பிந்நங்களாயிருக்கிற பத்மநாபாத்யவதார விசேஷங்கள். இந்த பத்மநாபாதிகள்தான், “விபவா: பத்மநாபாத்யா: த்ரிம்சச்ச நவசைவ ஹி பத்மநாபோ த்ருவோநந்த: சக்த்யாத்மா மதுஸூதந:, வித்யாதிதேவ: கபிலோ விச்வரூபோ விஹங்கம:, க்ரோடாத்மா படபாவக்த்ரோ தர்மோ வாகீச்வரஸ் ததா, ஏகாம்போநிதிசாயீ ச பகவாந் கமலேச்வர:, வராஹோ நரஸிம்ஹச்ச பீயூஷாஹரணஸ் ததா, ஸ்ரீபதிர்பகவாந் தேவ: காந்தாத்மா அம்ருத தாரக:; ராஹுஜித் காலநேமிக்ந: பாரிஜாதஹரஸ் ததா, லோகநாதஸ் து சாந்தாத்மா தத்தாத்ரேயோ மஹாப்ரபு:, ந்யக்ரோதசாயீ பகவாந் ஏகச்ருங்க தநுஸ் ததா, தேவோ வாமந தேஹஸ் து ஸர்வவ்யாபீ த்ரிவிக்ரம:, நரோ நாராயணச்சைவ ஹரி: க்ருஷணஸ் ததைவச, ஜ்வலத் பரசுத்ர்க் ராமோ ராமச்சாந்யச் சதுர்க்கதி:, வேதவித் பகவாந் கல்கீ பாதாளசயித: ப்ரபு:, த்ரிம்சச்ச நவசைவைதே பத்மநாபாதயோ மதா:” என்று முப்பத்தொன்பதாக அஹிர்புத்ந்ய ஸம்ஹிதாதிகளிலே சொல்லிற்றேயாகிலும், விஷ்வக்ஸேந ஸம்ஹிதையிலே முப்பத்தாறாகச் சொல்லியிருக்கையாலே, இவர் ஷட்த்ரிம்சத் பேத பிந்நமென்றதில் குறையில்லை. இனி அந்த முப்பத்தொன்பதிலே மூன்றைக் குறைத்துக் கொள்ளுகையிறேயுள்ளது; அவையாவன கபில தத்தாத்ரேய பரசுராம ரூபமான ஆவேசாவதாரங்கள். (உபேந்த்ர த்ரிவிக்ரம ததிபக்த ஹயக்ரீவ நரநாராயண ஹரிக்ருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாத்யவதார விசேஷங்கள்) ஆவன, அவதார கந்தமாகையாலே ஸர்வாவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றேயாகிலும், முன்பு சொன்ன பத்மநாபாதிகளிலே ஸஹபடிதங்களானவற்றிலே பூர்வோத்பந்ந விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத்பந்நங்க ளானவையுமுண்டென்னு மிடத்தை தர்சிப்பிக்கை முதலான சில ப்ரயோஜனங்களைப் பற்ற “பூர்வோத்பந்நாத் வைபவீயாத் ப்ராதுர்ப்பூதா மஹேச்வரா:, ப்ராதுர்ப்பாவாந்தராந் வித்திதாந் கணேச்வர! முக்க்யத:, உபேந்த்ராச்ச யதா முக்க்யா: த்ரிவிக்ரம தநுர் ஹரி:, ததிபக்தச்ச தேவேசோ தர்வீஹஸ்தோம்ருதப்ரத:, க்ருஷ்ணாச்ச மத்ஸ்யரூபஸ் ஸ்யாத் மத்ஸ்யாத் ஹயசிரோ யதா, நரோ நாராயணச்சைவ ஹரி க்ருஷ்ணஸ் ததைவச” என்று பிரித்தெடுத்துச் சொல்லப்பட்ட இந்திரனுக்குத் துணையாயிருந்து ஜகத் ரக்ஷணம் பண்ணுகிற உபேந்த்ராவதாரமும், எல்லை நடப்பாரைப் போலே லோகத்தையளந்து அவனிழந்த ஐச்வர்யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரமாவதாரமும், அவனுக்கு அம்ருத ப்ரதாநார்த்தமாகக் கொண்ட ததிபக்தாவ தாரமும், வேத ப்ரதாநார்த்தமாகக் கொண்ட ஹயக்ரீவாவதாரமும், சிஷ்யாச்சார்ய ரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளின நரநாராயணாவதாரங்களும், அவர்களோடொக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோகரக்ஷணம் பண்ணின ஹரியும் க்ருஷ்ணனுமான அவதாரங்களும், ப்ரளயரக்ஷணம் மந்தராதாரத்வம் பூம்யுத்தரணமாகிற இவற்றோடே வித்யாப்ரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹாவதாரங்களும். ஆதி சப்தத்தாலே க்ரோடீ க்ருதங்களான நரஸிம்ஹ கல்க்யவதாரம் தொடக்கமானவையும். (அவற்றினுடைய புஜாயுத வர்ண க்ருதய ஸ்தாநாதி பேதங்கள்) ஆவன, கீழ்ச் சொல்லப்பட்ட பர வ்யூஹ விபவங்களாகிற அவற்றினுடைய “புஜாயுதாநாம் நியமஸ் தத்ரதத்ரேச்சயா மம, ஜாக்ரத் ஸம்ஜ்ஞே சாதுராத்ம்யே ததத் புஜச்சதுஷ்டயம். சாந்தோதிதாஸ்து த்விபுஜா: ஸ்வப்நாத்யா கணநாயக! தேவோ ஜகந்நாதோ வாஸுதேவோ ஜகத்பதி:. சதுர்ப்புஜச் ச்யாமளாங்க: பரமே வ்யோம்நி நிஷ்டித:. நித்யோதிதச் சாந்ததநுராஸ்தே வ்யோம்நி ஷட் குண:. சாந்தோதிதச் சாந்தவபுர் த்விபுஜ: புருஷாக்ருதி:” என்றும், “கேசவாத்யா குணாத்யக்ஷ மூர்த்யந்தர ஸமாஹ்வயா:, உபாஸகாநாம் ஸேநேச! புக்தி முக்தி பல ப்ரதா:; ஸர்வே சதுர்ப்புஜா ஜ்ஞேயா: பத்ம சங்காதி தாரகா:, தத்தச் சாஸ்த்ரேஷு ச ஜ்ஞேயா லாஞ்சநாபரணாதய:. சதுச்சக்ரதரம் மாம் து ஸ்ம்ருத்வா ஜாம்பூநத ப்ரபம், சதுச் சங்கதரம் தேவம் நீல ஜீமூத ஸந்நிபம் இந்த்ர நீல நிபச்யாமம் சதுர்ஹஸ்தைர் கதாதரம், சதுர்ப்புஜ தநுஷ்மந்தம் சந்த்ரபா ஸத்ருசத்யுதிம். சதுர்ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம். முஸலாஸ்த்ரம் மஹாவிஷ்ணும் அரவிந்தாபமேவ ச, கட்கபாணிம் சதுர்ஹஸ்தம் அக்நி ஸந்நிப தேஜஸம், சதுர்வஜ்ரதரம் தேவம் தருணாதித்ய ஸந்நிபம், பட்டஸாயுத ஹஸ்தஞ்ச புண்டரீகாபமேவ ச. சதுர்ப்பிர் முத்கரதரம் புஜைர் வித்யுத ஸமத்யுதிம் பஞ்சாயுததரம் மாஞ்ச ஸஹஸ்ராம்சு ஸமப்ரபம். பாச ஹஸ்ததரம் தேவம் பாலார்க்கசத ஸந்நிபம்” என்றுமித்யாதிகளாலே சொல்லப்படுகிற புஜ பேதங்களும், வர்ண பேதங்களும், இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கெல்லாம் ப்ரத்யேகமுண்டான க்ருத்ய பேதங்களும், ஆமோதாதிகளும் அயோத்யா மதுராதிகளுமாய்க் கொண்டு வ்யூஹ விபவங்களுக்கு ப்ரத்யேகமுண்டான ஸ்தாந பேதங்களும், ஆதி சப்தத்தாலே க்ரோடீ க்ருதங்களான பூஷண வஸ்தராதி பேதங்களும். (துரவதரங்களுமாய் குஹ்யதமங்களுமாயிருக்கையாலே சொல்லுகிறிலோம்) என்றது, இவையெல்லாம் சொன்னாலும் ஒருவர்க்கு புத்தி பண்ணவுமரிதாய் அவதார ரஹஸ்யங்களாகையாலே, மிகவும் குஹ்யமுமாயிருக்கையாலே, சொல்லுகிறோமில்லை யென்கை.
(நித்யோதித சாந்தோதிதாதி பேதமும்) – இந்த வேறுபாடு என்ன? ஸம்ஹிதையில், “நித்யோதிதாத் ஸம்பபூவ ததா சாந்தோதிதோ ஹரி: - நித்யோதிதர் என்ற திருநாமம் கொண்ட பரவாஸுதேவரிடமிருந்து சாந்தோதிதர் என்னும் வ்யூஹ ஸ்ரீஹரி தோன்றினார்” என்பது போன்ற வரியில் கூறப்பட்டபடி, முக்தர்களால் எப்போதும் அனுபவிக்கப்பட்டபடி உள்ள நித்யோதிதர் என்று அறியப்படும் பரவாஸுதேவரும்; அவரிடமிருந்து தோன்றிய ஸங்கர்ஷணன் என்னும் வ்யூஹத்திற்குக் காரணமாக உள்ளவரும், சாந்தோதிதர் என்று அறியப்படும் வ்யூஹ வாஸுதேவரும்; இப்படியாக வாஸுதேவ மூர்த்தியில் உள்ள வேறுபாடு இங்கு கூறப்படுகிறது. வ்யூஹங்களானவை நான்கு என்றும், மூன்று என்றும் சாஸ்த்ரங்களில் கூறப்பட்டது. “நாலும் உண்டாயிருக்க மூன்றென்கிறது, வ்யூஹ வாஸுதேவ ரூபத்துக்குப் பரரூபத்திற் காட்டில் அநுஸந்தேய குண பேதமில்லாமையாலே - வ்யூஹங்கள் நான்கு உள்ளபோது, மூன்று எனக் கூறப்பட்டது ஏனென்றால், வ்யூஹ வாஸுதேவ ரூபத்திற்கு, பரவாஸுதேவ ரூபத்தைக் காட்டிலும் தனித்து எண்ணியபடி உபாஸிக்கக் குண வேறுபாடு இல்லை என்பதால் ஆகும்” என்று கூறுவது போன்று, இவர் மூன்று வ்யூஹங்கள் என்று அருளிச் செய்ததற்கும், வ்யூஹ வாஸுதேவன் என்று அருளிச்செய்ததற்கும் விரோதம் இல்லை. (ஜாக்ரத் ஸம்ஜ்ஞாதியான சாதுராத்ம்யம்) – ஜாக்ரத் முதலானவை நான்காக அறியப்படுவது எப்படி, ஏன்? சாந்தோதித உற்பத்தி குறித்து உரைத்த பின்னர், “சாதுராத்ம்யம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்ட்டிந:, உபாஸக அநுக்ரஹார்த்தம் ய: பரச்சேதி கீர்த்யதே; சாந்தோதிதாத் ப்ரவ்ருத்தஞ்ச சாதுராத்ம்ய த்ரயம் ததா உபாஸக அநுக்ரஹார்த்தம் ஸேநேச மம ததபுந:; ஸுஷுப்தி ஸ்வப்ந ஸம்ஜ்ஞம் யத் ஜாக்ரத் ஸம்ஜ்ஞம் ததாபரம்; சாதுர்மாஸ்யம் மஹாபாக பஞ்சமம் பாரமேச்வரம் - இப்படி உள்ளபோதிலும் பரமபுருஷனுடைய க்ருபையால் நான்கு விதமாயிற்று. எந்த ஒன்று, தன்னை த்யானம் செய்பவர்களுடைய விஷயத்தில் ஏற்பட்ட கருணையைக் காரணமாகக் கொண்டு ஆயிற்றோ அதுவே பரம் என்று கூறப்பட்டது. என்னுடைய நான்காக உள்ள தன்மை எதுவென்றால், சாந்தோதிதம் என்பதிலிருந்து உண்டான மூன்று முன்றாக உள்ள நான்குவிதமான வ்யூஹங்கள் ஆகும். எவை ஆழ்ந்த உறக்கம், கனவு போன்ற பெயர்கள் கொண்டதாக, விழிப்பு என்ற நிலையைக் கொண்டதாக, துரீயம் என்ற நான்காவது நிலையையும் கொண்டதாக உள்ளனவோ அவை சாதுராத்ம்யம் ஆகின்றன. இப்படியாக பரமேச்வரனுடைய தொடர்பு என்பது ஐந்தாக உள்ளன” என்றும், “ஆத்யோ வ்யூஹோ மயா ப்ரோக்தோ ஹ்யபரம் த்ரிதயம் ச்ருணு, உபாஸக அநுக்ரஹார்த்தம் ஸ்வப்நாதிபத ஸம்ஸ்திதம்; ஸ்வபநாதி அவஸ்தா பேதஸ் து த்யாயிநாம் கேதசாந்தயே, தத் தத் பதஸ்த தேவாநாம் தந்நிவ்ருத்த்யர்த்தம் ஏவ ச, ஸ்வப்நாதி அவஸ்த ஜீவாநாம் அதிஷ்ட்டாதார ஏவ தே; கர்மாத்மநாம் ச ஸேநேச! தத் பதஸ்தோ மமேச்சய:, உபாஸ்யோஹம் மஹாபாக பத பேத ப்ரயோஜநம் - தொடக்கத்தில் உள்ள வ்யூஹம் குறித்து உமக்கு என்னால் கூறப்பட்டது. அடுத்த மூன்று குறித்துக் கூறக் கேட்பாயாக. உபாஸகர்களுக்கு அனுக்ரஹம் செய்வதன் காரணமாக கனவு முதலான பதத்தில் உள்ள வேறுபாடுகள் எவை என்றால், கனவு முதலான நிலைகளானவை த்யானம் செய்பவர்களுடைய சாந்திக்காகவும், அந்தந்த நிலைகளில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்தந்த நிலைகளை நீங்குவதற்காகவும் உள்ளவை ஆகிறது. அத்தகைய நான்கு நிலைகளில் உள்ள மூன்று, கனவு போன்ற நிலைகளில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடமாக உள்ளன. அந்தந்த நிலைகளில் உள்ள வேறுபாடுக்களுக்குப் பயன் என்னவென்றால், கர்மத்தையே இயல்பாகக் கொண்டுள்ள ஜீவாத்மாக்களுக்கு, எனது விருப்பத்தின் விளைவாக அந்தந்த நிலையில் நான் உபாஸிக்கத்தக்கவனாக இருத்தலே ஆகும்” என்றும் கூறுவதற்கு ஏற்ப, உபாஸகர்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்காகத் தனது க்ருபையால் செய்ததாய்; தன்னைத் த்யானம் செய்பவர்களுடைய அமைதியின் பொருட்டும், அந்தந்த நிலைகலில் உள்ள ஜீவாத்மாக்கள் அந்தந்த நிலையிலிருந்து வெளியே வருவதற்கு என்பதாய்; அந்தந்த நிலைகளில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்தந்த நிலையில் புகுந்து அவரவர்களுக்கு இருப்பிடமாக இருந்தபடி, கர்மத்தின் வழி நடக்கும் சேதநர்களுக்கு உபாஸித்தபடி உள்ளதால் அந்தந்த நிலைகளுக்கு பயன் ஏற்படும்படியாக இருத்தல் என்பதே நான்காகிறது. (கேசவாதி மூர்த்யந்தரம்) - “ஏதத் அந்தர்க்கதாஸ் ஸர்வே மூர்த்யந்த ரஸமாஹ்வயா:, கேசவாத்யா த்வாதச ச லலாடாதிஷு நிஷ்டிதா:, சரீர ரக்ஷகாஸ் ஸர்வே த்யாயிநாம் தாபசாந்தயே – கேசவன் தொடக்கமாக உள்ள பன்னிரண்டு வ்யூஹ மூர்த்திகள், நெற்றி தொடக்கமாக பின் கழுத்து முடிய உள்ள இடங்களில் உள்ள வ்யூஹ மூர்த்திகள் ஆவர். அவர்கள் அனைவரும் தங்களை த்யானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவர்களுடைய சரீரங்களைக் காக்கிறார்கள்” என்றும், “கேசவாத்யம் த்ரயம் தத்ர வாஸுதேவாத் விபாவ்யதே, ஸங்கர்ஷணாச்ச கோவிந்த பூர்வம் த்ரிதயமத்புதம் த்ரிவிக்ரமாத்யம் த்ரிதயம் ப்ரத்யும்நாத் உதிதம் முநே! ஹ்ருஷீகேசாதிகம் தத்வத அநிருத்தாந் மஹாமுநே - கேசவன், மாதவன், நாராயணன் ஆகிய மூவரும் வாஸுதேவனிடமிருந்தும்; கோவிந்தன், விஷ்ணு, மதுஸூதனன் ஆகிய மூவரும் ஸங்கர்ஷணனிடமிருந்தும்; த்ரிவிக்ரமன், மாதவன், ஸ்ரீதரன் ஆகிய மூவரும் ப்ரத்யும்நனிடமிருந்தும்; இருடீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய மூவரும் அநிருத்தனிடமிருந்தும் உண்டானவர்கள்” என்றும் கூறுவதற்கு ஏற்ப, நெற்றி முதலான இடங்களில் இருந்தபடி தங்களை த்யானிப்பவர்களுடைய சரீரங்களைக் காப்பாற்றிக் கொண்டு, அவர்களுடைய துன்பங்களைப் போக்குவதற்காக உள்ளவர்களும், நான்கு வ்யூஹங்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுமூன்றாக உற்பத்தி ஆனவர்களும், கேசவன் தொடக்கமாக உள்ள வ்யூஹங்கள் ஆவார். “ஷட்த்ரிம்சத் பேத பிந்நமான பத்மநாபாதி விபவம் - பத்மநாபன் தொடக்கமாக உள்ள முப்பத்து ஆறு பிரிவுகளுடன் கூடிய விபவங்கள் எவை?”. இதற்கு விடை அருளிச்செய்கிறார். விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில், “பத்மநாபாதிகாஸ் ஸர்வே வைபவீயாஸ் ததைவ ச, ஷட்தரிம்சத் ஸங்க்யா ஸங்க்யாதா: ப்ராதாந்யேந கணேச்வர!, ஷட்த்ரிம்சத் பேத பிந்நாஸ் தே பத்மநாபாதிகாஸ் ஸுரா:, அநிருத்தாத் ஸமுத்பந்நா தீபாத் தீப இவேச்வரா: - பத்மநாபன் தொடக்கமாக உள்ளவையும், முப்பத்து ஆறு என்று கணக்கிடும்படி உள்ளவையும் ஆகிய அனைத்தும் விபவங்களுடைய ஸம்பந்தம் கொண்டவை ஆகும். விஷ்வக்ஸேனரே! முப்பத்து ஆறு பிரிவுகளில் வேறுபட்டுள்ள பத்மநாபன் தொடக்கமாக உள்ள அந்த மூர்த்திகள், ஒரு தீபத்திலிருந்து வெளிவரும் மற்றும் தீபங்கள் போன்று, அநிருத்தனிடமிருந்து வெளிப்பட்டவை ஆகும்” என்பதற்கு ஏற்ப, ஒரு தீபத்திலிருந்து உற்பத்தி ஆன மற்ற தீபங்கள் போன்று, அநிருத்தனிடமிருந்து உற்பத்தி ஆனவையாக, முதன்மையானவையாக, முப்பது ஆறு விதங்களில் வேறுபட்டுள்ள பத்மநாபன் போன்ற அவதாரச் சிறப்புகள் ஆகும். இந்தப் பத்மநாபன் முதலான மூர்த்திகள் குறித்து உரைக்கிறார். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் – விபவா: பத்மநாபாத்யா: த்ரிம்சச்ச நவசைவ ஹி பத்மநாபோ த்ருவோநந்த: சக்த்யாத்மா மதுஸூதந:, வித்யாதிதேவ: கபிலோ விச்வரூபோ விஹங்கம:, க்ரோடாத்மா படபாவக்த்ரோ தர்மோ வாகீச்வரஸ் ததா, ஏகாம்போநிதிசாயீ ச பகவாந் கமலேச்வர:, வராஹோ நரஸிம்ஹச்ச பீயூஷாஹரணஸ் ததா, ஸ்ரீபதிர்பகவாந் தேவ: காந்தாத்மா அம்ருத தாரக:; ராஹுஜித் காலநேமிக்ந: பாரிஜாதஹரஸ் ததா, லோகநாதஸ் து சாந்தாத்மா தத்தாத்ரேயோ மஹாப்ரபு:, ந்யக்ரோதசாயீ பகவாந் ஏகச்ருங்க தநுஸ் ததா, தேவோ வாமந தேஹஸ் து ஸர்வவ்யாபீ த்ரிவிக்ரம:, நரோ நாராயணச்சைவ ஹரி: க்ருஷணஸ் ததைவச, ஜ்வலத் பரசுத்ர்க் ராமோ ராமச்சாந்யச் சதுர்க்கதி:, வேதவித் பகவாந் கல்கீ பாதாளசயித: ப்ரபு:, த்ரிம்சச்ச நவசைவைதே பத்மநாபாதயோ மதா: - பத்மநாபன் முதலான விபவங்கள் முப்பது ஒன்பது உள்ளன. இவை பத்மநாபன், துருவன், அநந்தன், சக்தி கொண்ட மதுஸூதனன், வித்யைகளுக்கு அதிதேவதையான கபிலன், விச்வரூபன், க்ரோடாத்மன், படபாவக்த்ரன், தர்மன், வாகீசன், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனும் பகவானும் ஆகிய மஹாலக்ஷ்மியின் நாயகன், வராஹன், நரஸிம்ஹன், அம்ருதத்தைக் கொண்டவன், ஸ்ரீயின் நாதன், மனதைக் கவருபவனும் அமிருதம் ஏந்தியவனும் ஆகிய தந்வந்திரி, ராகுவை வென்றவன், காலநேமியை அழித்தவன், பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தவன், லோகநாதன், சாந்தமாக உள்ளவன், தத்தாத்ரேயன், ஆலிலையில் துயில்பவன், பகவானான ஒற்றைக் கொம்பு கொண்டவன், தேவனாகிய வாமநன், எங்கும் வ்யாபித்துள்ள த்ரிவிக்ரமன், நரன், நாராயணன், ஸ்ரீஹரி, க்ருஷ்ணன், ஒளி வீசும் கோடாலியைக் கொண்ட இராமன், நான்குவிதமான நடை கொண்ட இராமன், வேதங்களை அறிந்த பகவான் கல்கி, பாதாளத்தில் சயனிக்கும் பகவான் என்பதாக, பத்மநாபன் தொடக்கமாக உள்ளவர்கள் முப்பது ஒன்பது - என்று முப்பத்து ஒன்பதாக கூறப்பட்டது. இவ்விதம் இங்கு முப்பத்து ஒன்பது என்று இருந்தாலும், விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் முப்பத்து ஆறு என்பதாகவே கூறப்பட்டதால், இவை முப்பத்து ஆறு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்று கூறுவதில் தவறில்லை. அப்படியானால் அந்த முப்பத்து ஒன்பதில், மூன்றைக் குறைக்கவேண்டும் என்றாகிறது. அவையாவன கபிலர், தத்தாத்ரேயர் மற்றும் பரசுராமன் என்பதான ஆவேச ரூபங்கள் ஆகின்றன. (உபேந்த்ர த்ரிவிக்ரம ததிபக்த ஹயக்ரீவ நரநாராயண ஹரிக்ருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாத்யவதார விசேஷங்கள்) “உபேந்த்ரன், த்ரிவிக்ரமன் போன்ற அவதாரச் சிறப்புகள் என்ன?” என்பதற்கு விடை அளிக்கிறார். அவதாரங்கள் அனைத்திற்கும் மூலமாக உள்ளதால், அனைத்து அவதாரங்களுக்கும் காரணமாக அநிருத்தனே கூறப்பட்ட போதிலும், முன்பு உரைக்கப்பட்ட பத்மநாபன் போன்றவற்றுடன் சேர்த்துப் படிக்கப்பட்டவற்றில், “முதலில் உண்டான விபவங்களிலிருந்து வேறு விபவங்கள் உற்பத்தி ஆயின என்பதை உணர்த்துவதற்காக” என்பது போன்று சில பயன்களுக்காக இவை கூறப்பட்டன என்று கொள்ளவேண்டும். விஷ்வக்ஸேன ஸம்ஹிதையில், “பூர்வ் உத்பந்நாத் வைபவீயாத் ப்ராதுர்ப்பூதா மஹேச்வரா:, ப்ராதுர்ப்பாவாந்தராந் வித்திதாந் கணேச்வர! முக்க்யத:, உபேந்த்ராச்ச யதா முக்க்யா: த்ரிவிக்ரம தநுர் ஹரி:, ததிபக்தச்ச தேவேசோ தர்வீஹஸ்த அம்ருதப்ரத:, க்ருஷ்ணாச்ச மத்ஸ்யரூபஸ் ஸ்யாத் மத்ஸ்யாத் ஹயசிரோ யதா, நரோ நாராயணச்சைவ ஹரி க்ருஷ்ணஸ் ததைவச – முதலில் உண்டான விபவத்திலிருந்து எந்த மஹேச்வரர்கள் உண்டானார்களோ அத்தகைய முக்கியமான அவதாரங்களை, நித்யஸூரியின் கூட்டத் தலைவரான நீவிர் அறிவீராக. உபேந்த்ரனுடமிருந்து த்ரிவிக்ரமனாகிய ஸ்ரீஹரியும், தேவனாகவும் அகப்பையைக் கையில் கொண்டவனும், அமிர்தத்தை அளிப்பவனும் ஆகிய ததிபக்தன்; க்ருஷ்ணனிடமிருந்து மீனாக அவதரித்தவன் ஆகியோர் எவ்விதம் முக்கியமாக ஆகிறார்களோ, மீன் அவதாரத்தைக் காட்டிலும் ஹயக்ரீவ அவதாரம் எவ்விதம் முக்கியமாக ஆகிறதோ, அது போன்று நரனும், நாராயணனும், ஸ்ரீஹரியும் , க்ருஷ்ணனும் முக்கியமாக ஆகிறார்கள்”, என்று கூறப்பட்டது. இப்படியாகப் பிரித்து எடுத்து உரைக்கப்பட்ட இந்த்ரனுக்கும் துணையாக இருந்தபடி இந்த ஜகத்தைக் காப்பாற்றும் உபேந்த்ர அவதாரம்; எல்லையில் நடப்பவர்கள் போன்று இந்த லோகத்தை அளந்து, அவன் இழந்த ஐச்வர்யங்ளைப் பெற்றுக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரம்; இந்த்ரனுக்கு அமிர்தம் அளிப்பதற்காக எடுத்துக் கொண்ட ததிபக்தன் என்ற அவதாரம்; வேதங்களை வெளியிடுவதற்காக எடுத்த ஹயக்ரீவ அவதாரம்; சிஷ்யன் மற்றும் ஆசார்யன் என்பதான ரூபங்களில் நின்று திருமந்திரம் வெளியிட்டு அருளிய நரநாராயண அவதாரங்கள்; அவர்களுடன் தர்மதேவதையின் பக்கம் பிறந்து, லோகத்தைக் காத்தல் என்பதைச் செய்தருளிய ஸ்ரீஹரி மற்றும் க்ருஷ்ண அவதாரங்கள்; ப்ரளயத்திலிருந்து காப்பாற்றியது, மந்தார மலையை நிலை நிறுத்தியது, பூமியை வெளிக் கொணர்ந்தது ஆகிய செய்கைகளுடன் வித்யைகளை அளித்த மத்ஸ்யம், கூர்மம், மற்றும் வராஹ அவதாரங்கள் இங்கு கூறப்பட்டன. இங்குள்ள “ஆதி” என்பதன் மூலம் நரஸிம்ஹன் மற்றும் கல்கி போன்ற அவதாரங்களும் கூறப்படுகின்றன. (அவற்றினுடைய புஜாயுத வர்ண க்ருதய ஸ்தாநாதி பேதங்கள்) - அந்த விபவங்களின் திருத்தோள்கள், ஆயுதங்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் எவை என்பதற்கு அடுத்து விடை அளிக்கிறார். ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை - புஜாயுதாநாம் நியமஸ் தத்ரதத்ரேச்சயா மம, ஜாக்ரத் ஸம்ஜ்ஞே சாதுராத்ம்யே ததத் புஜச்சதுஷ்டயம். சாந்தோதிதாஸ்து த்விபுஜா: ஸ்வப்நாத்யா கணநாயக! தேவோ ஜகந்நாதோ வாஸுதேவோ ஜகத்பதி:. சதுர்ப்புஜச் ச்யாமளாங்க: பரமே வ்யோம்நி நிஷ்டித:. நித்யோதிதச் சாந்ததநுராஸ்தே வ்யோம்நி ஷட் குண:. சாந்தோதிதச் சாந்தவபுர் த்விபுஜ: புருஷாக்ருதி: – அந்த விபவங்களுடைய புஜங்கள், ஆயுதங்கள், அவற்றின் செயல்பாடுகள் போன்ற பலவும் எனது விருப்பத்தால் நிகழ்கின்றன. விழிப்பு நிலை என்பதாக உள்ள நான்கு நிலைகளாக, நான்கு விதமாக உள்ள மூர்த்திகளுக்கு நான்கு தோள்கள் உள்ளன. கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்பதாக உள்ள நிலைகளுக்குத் தேவதையாக உள்ள வாஸுதேவன் போன்றவர்களுக்கு இரண்டு திருத்தோள்கள் உள்ளன. ஆதிதேவனாகவும், ஜகத்தின் பதியாகவும், வாஸுதேவனாகவும் உள்ள ஜகத்பதிக்கு நான்கு திருத்தோள்கள் மற்றும் நீலநிறம் ஆகியவை உள்ளன; இவன் பரமபதத்தில் உள்ளான்; ஆறு குணங்கள் கொண்ட அவன் சாந்தமான திருமேனியுடன் அந்த இடத்தில் உள்ளான். சாந்தோதிதன் எனப்படும் வ்யூஹ வாஸுதேவன், சாந்தமான திருமேனியுடன் இரண்டு திருத்தோள்கள் கொண்டவனாக உள்ளான் - என்றும், ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – கேசவாத்யா குணாத்யக்ஷ மூர்த்யந்தர ஸமாஹ்வயா:, உபாஸகாநாம் ஸேநேச! புக்தி முக்தி பல ப்ரதா:; ஸர்வே சதுர்ப்புஜா ஜ்ஞேயா: பத்ம சங்காதி தாரகா:, தத்தச் சாஸ்த்ரேஷு ச ஜ்ஞேயா லாஞ்சநாபரணாதய:. சதுச்சக்ரதரம் மாம் து ஸ்ம்ருத்வா ஜாம்பூநத ப்ரபம், சதுச் சங்கதரம் தேவம் நீல ஜீமூத ஸந்நிபம் இந்த்ர நீல நிபச்யாமம் சதுர்ஹஸ்தைர் கதாதரம், சதுர்ப்புஜ தநுஷ்மந்தம் சந்த்ரபா ஸத்ருசத்யுதிம். சதுர்ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம். முஸலாஸ்த்ரம் மஹாவிஷ்ணும் அரவிந்தாபமேவ ச, கட்கபாணிம் சதுர்ஹஸ்தம் அக்நி ஸந்நிப தேஜஸம், சதுர்வஜ்ரதரம் தேவம் தருணாதித்ய ஸந்நிபம், பட்டஸாயுத ஹஸ்தஞ்ச புண்டரீகாபமேவ ச. சதுர்ப்பிர் முத்கரதரம் புஜைர் வித்யுத ஸமத்யுதிம் பஞ்சாயுததரம் மாஞ்ச ஸஹஸ்ராம்சு ஸமப்ரபம். பாச ஹஸ்ததரம் தேவம் பாலார்க்கசத ஸந்நிபம் - மூர்த்யந்தரம் என்று கூறப்படும் கேசவன் முதலான பன்னிரண்டு வ்யூஹங்கள், தங்களை உபாஸிப்பவர்களுக்கு புத்தியும் மோக்ஷமும் அளிப்பார்கள். அனைத்து மூர்த்திகளும் நான்கு திருக்கரங்களுடன், தாமரை சங்கு முதலானவற்றைக் கொண்டவர்களாக உள்ளதை அறியவேண்டும். இவர்களுடைய அடையாளம் மற்றும் ஆபரணம் குறித்து அந்தந்த சாஸ்த்ரங்களில் அறியலாம். நான்கு சக்கரங்கள் கொண்டவராக, பொன்னிற ஒளியுடன் உள்ளவராகவும் (கேசவன்), நான்கு சங்குகள் ஏந்தி, ஒளிவீசும் கருமையான மேகம் போன்று உள்ளவராகவும் (நாராயணன்); நான்கு கதைகள் ஏந்தி, இந்த்ர நீலக்கல் போன்று உள்ளவராகவும் (மாதவன்); நான்கு திருக்கரங்களில் வில்லை ஏந்தி, சந்த்ரன் போன்று ஒளி வீசுபவராகவும் (விஷ்ணு); நான்கு உலக்கைகள் ஏந்தி, தாமரையின் ஒளியை வீசுபவராகவும் (மதுஸூதனன்); நான்கு திருக்கரங்களிலும் வாளை ஏந்தி அக்னியின் ஒளியுடன் நிற்பவராகவும் (த்ரிவிக்ரமன்); நான்கு திருக்கரங்களிலும் வஜ்ராயுதம் ஏந்தி, இளஞ்சூரியன் போன்று ஒளிர்பவராகவும் (வாமநன்); நான்கு திருக்கரங்களிலும் ஈட்டிகளை ஏந்தி, வெண்மையான தாமரை நிறம் கொண்டவராகவும் (ஸ்ரீதரன்); நான்கு திருக்கரங்களிலும் சாட்டைகளை ஏந்தியவராகவும் (ஹ்ருஷீகேசன்); நான்கு திருக்கரங்களிலும் பட்டஸம் என்ற ஆயுதம் ஏந்தி, மின்னல் போன்று ஒளிர்பவராகவும் (பத்மநாபன்); நான்கு திருத்தோள்களிலும் பாசக்கயிற்றை ஏந்தி, இளஞ்சூரிய நிறம் கொண்டவராகவும் (தாமோதரன்) என்னை எண்ணுவீராக - என்றும் உள்ள வாக்கியங்களில் கூறப்படும் திருத்தோள்களில் உள்ள வேறுபாடுகள், நிறங்களில் உள்ள வேறுபாடுகள், இத்தகைய வ்யூஹ வேறுபாடுகள் மற்றும் விபவ வேறுபாடுகள் ஆகிய ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியாக உள்ளதான செயல்பாடு வேறுபாடுகள் மற்றும் அயோத்யா மதுரா முதலானவை தொடக்கமாக உள்ளதான வ்யூஹ விபவங்களுடைய இருப்பிட வேறுபாடுகளும் இங்கு கூறப்பட்டதாகவே கொள்ள வேண்டும். இங்குள்ள “ஆதி” என்பதன் மூலம் ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகிய வேறுபாடுகள் கூறபட்டன. (துரவதரங்களுமாய் குஹ்யதமங்களுமா யிருக்கையாலே சொல்லுகிறிலோம்) - என்பதன் மூலம், இவை அனைத்தும் கூறப்பட்ட போதிலும், யாராலும் எண்ணுவதற்கு அரிதாக உள்ள அவதார ரஹஸ்யங்களாக இவை உள்ளதால், மிகவும் இரகசியமாக உள்ளதால், கூறப்படவில்லை என்கிறார்.