Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 192)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
விதி சிவ பாவக வயாஸ ஜாமதக்ந்யார்ஜுந வித்தேசாதிகளாகிற கௌண ப்ராதுர்ப்பாவங்களெல்லாம் அஹங்கார யுக்த ஜீவர்களை யதிஷ்டித்து நிற்கையாலே, முமுக்ஷுக்களுக்கு அநுபாஸ்யங்கள்.
– அநந்தரம், கௌண விபவத்தினுடைய அநுபாஸ்யத்வத்தை ஸஹேதுகமாக வருளிச்செய்கிறார் (விதிசிவ) இத்யாதியாலே.
அடுத்து, முக்கியம் அல்லாத விபவங்களுடைய, உபாஸிக்கத்தகுந்ததாக இல்லாத தன்மையை, அவற்றின் காரணத்துடன் அருளிச்செய்கிறார்.
அதாவது, “அநர்ச்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராதுர்ப்பாவாந் யதாக்ரமம், சதுர்முகஸ் து பகவாந் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித:; சங்கராக்க்யோ மஹாருத்ரஸ் ஸம்ஹாரே விநியோஜித:, மோஹநாக்கயஸ் ததா புத்தோ வ்யாஸச்சைவ மஹாந்ருஷி:, வேதாநாம் வ்யஸநே தத்ர தேவேந விநியோஜித:, அர்ஜுநோ தந்விநாம் ச்ரேஷ்ட்டோ ஜாமதக்ந்யோ மஹாந்ருஷி:, வஸூநாம் பாவகச்சாபி வித்தேசச்ச ததைவ ச, ஏவமாத்யாஸ் து ஸேநேச! ப்ராதுர்ப்பாவைரதிஷ்டிநா:, ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ்திர் வைஷ்ணவீ ஹி ஸா, ஆவிஷ்டமாத்ராஸ் தே ஸர்வே கார்யார்த்தமமிதத்யுதே, அநர்ச்ச்யாஸ் ஸர்வ ஏவைதே விருத்தவாந் மஹாமதே, அஹங்க்ருதியுதாச் சேமே ஜீவமிச்ரா ஹ்யதிஷ்டிதா:” என்கிறபடியே, ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவும், ஸம்ஹார கர்த்தாக்களான சிவ பாவகர்களும், வேதங்களை வ்யஸித்த வ்யாஸனும், துஷ்ட க்ஷத்ரிய நிரஸநம் பண்ணின ஜமதக்நி புத்ரனான பரசுராமனும், “அகார்ய சிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவம் சாபதர: புரஸ்தாத்” என்கிறபடியே, சாபதரனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷித்துக் கொண்டு போந்த கார்த்தவீரியார்ஜுநனும், ஒளதார்ய ப்ரதாநனான வித்தேசனும், ஆதி சப்தத்தாலே க்ரோடீ க்ருதரான ககுத்ஸ்த முசுகுந்த ப்ரப்ருதிகளுமாகிற கௌண ப்ராதுர்ப்பாவங்களெல்லாம், ஸ்வாதந்த்ர்ய ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை கார்யார்த்தமாக ஆவேச முகேந அதிஷ்ட்டித்து நிற்கையாலே, புபுக்ஷுக்களாயிருப்பார்க்கொழிய முமுக்ஷுக்களுக்கு உபாஸ்யங்களன்றென்கை. (வ்யாஸ ஜாமதக்ந்யர்ஜுந) என்கிறவிடத்தில் அர்ஜுநனென்றது பாண்டு புத்ரனான அர்ஜுநனையாகவுமாம், அவனையும் ஆவேசாவதாரமாக இதிஹாஸாதிகளிலே சொல்லுகையாலே. இந்த கௌண ப்ராதுர்ப்பாவ அநுபாஸ்யத்வந்தான், “ப்ரஹ்ம ருத்ரரார்ஜுந வ்யாஸ ஸஹஸ்ரகர பார்க்கவா:, ககுத்ஸ்தாத்ரேய கபில புத்தாத்யா யே ஸஹஸ்ரச:, சக்த்யாவேசாவதாராஸ் து விஷ்ணோஸ் தத்கால விக்ரஹா:, அநுபாஸ்யா முமுக்ஷுணாம் யதேந்த்ராக்ந்யாதி தேவதா:” என்று ஸம்ஹிதாந்தரத்திலும் சொல்லப்பட்டதிறே. உபாத்த வசனங்களில் புத்தமுநியையும் ஆவேசாவதாரங்களில் ஒன்றாகச் சொன்னவிது, “மாவுருவில் கள்ளவேடம்” என்று ஸ்வேந ரூபேண அவதரித்ததாகச் சொன்ன நம் ஆசார்யர்கள் வசனத்தோடு விருத்தமன்றோவென்னில், கல்ப பேதத்தாலே அப்படியும் செய்யக் கூடுமாகையாலே விருத்தமன்று. ஜாமதக்ந்யன் ஸ்வரூபாவேசாவதாரமாயிருக்க, சக்த்யாவேசங்களோடே ஸஹபடித்தது, ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலேயாகையாலே என்று நியமித்துக் கொள்வது.
ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – அநர்ச்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராதுர்ப்பாவாந் யதாக்ரமம், சதுர்முகஸ் து பகவாந் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித:; சங்கராக்க்யோ மஹாருத்ரஸ் ஸம்ஹாரே விநியோஜித:, மோஹநாக்கயஸ் ததா புத்தோ வ்யாஸச்சைவ மஹாந்ருஷி:, வேதாநாம் வ்யஸநே தத்ர தேவேந விநியோஜித:, அர்ஜுநோ தந்விநாம் ச்ரேஷ்ட்டோ ஜாமதக்ந்யோ மஹாந்ருஷி:, வஸூநாம் பாவகச்சாபி வித்தேசச்ச ததைவ ச, ஏவமாத்யாஸ் து ஸேநேச! ப்ராதுர்ப்பாவைரதிஷ்டிநா:, ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ்திர் வைஷ்ணவீ ஹி ஸா, ஆவிஷ்டமாத்ராஸ் தே ஸர்வே கார்யார்த்தமமிதத்யுதே, அநர்ச்ச்யாஸ் ஸர்வ ஏவைதே விருத்தவாந் மஹாமதே, அஹங்க்ருதியுதாச் சேமே ஜீவமிச்ரா ஹ்யதிஷ்டிதா: – அர்ச்சனை செய்யத்தகாதபடி உள்ள அவதாரங்கள் குறித்து நான் (ஸர்வேச்வரன்) வரிசையாகக் கூறுகிறேன். ஸ்ருஷ்டிப்பதற்காக நியமிக்கப்பட்ட நான்முகன், அழிக்கும் பணியில் நியமிக்கப்பட்ட ருத்ரனாகிய சங்கரன், மயக்கும் தொழிலில் நியமிக்கப்பட்ட புத்தர், வேதங்களைச் சரியாகப் பிரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வ்யாஸர், வில் தொழிலில் சிறந்த கார்த்தவீர்யார்ஜுனன், ஜமதக்னியின் புத்திரனாகிய பரசுராமன், வஸுக்களில் அக்னி மற்றும் குபேரன் ஆகிய அனைவரும் ஆவேச அவதாரங்களால் அதிஷ்டானம் செய்யப்பட்டவர்கள் ஆவர். ஸேனை நாதரே! இவர்கள் அனைவருமே விஷ்ணுவாகிய என்னால் வ்யாபிக்கப்பட்ட ஜீவாத்மாக்கள் என்பதால், இவர்களை அர்ச்சிக்கக்கூடாது. சிறந்த புத்தி கொண்டவரே! இவர்கள் ஒரு குறிப்பிட்ட செயலுக்காக என்னால் ஆவேசிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அஹங்காரம் கொண்ட ஜீவர்களாக உள்ளதால், ஆராதிக்கத்தக்கவர்கள் அல்லர் – என்று கூறுவதற்கு ஏற்ப, நான்முகன் போன்றவர்களும், வேதங்களைப் பிரித்த வ்யாசரும், துஷ்ட அரசர்களை அழித்த பரசுராமனும், “அகார்ய சிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவம் சாபதர: புரஸ்தாத் - தகாத செயலைச் செய்யப் போகிறோம் என்று என்ணிய உடனேயே அவர்கள் முன்பாக வில்லை ஏந்தி அடக்குவதற்காகத் தோன்றுபவன் – என்பதற்கு ஏற்ப உள்ள இந்த ஜகத்தைக் காத்தபடி உள்ள கார்த்தவீர்யார்ஜுனன், தாராள குணம் கொண்ட குபேரனும், சூர்ணையில் உள்ள “ஆதி - தொடக்கமான” என்பதால் கூறப்பட்ட காகுத்தன் மற்றும் முசுகுந்தன் போன்ற முக்கியம் அல்லாத பல அவதாரங்கள் ஆவர்; இவ்விதமாக, தாங்கள் சுதந்திரமானவர்கள் என்ற சிந்தனை வடிவமாக உள்ள அஹங்காரத்தைக் கொண்ட ஜீவாத்மாக்களை, ஒரு செயலுக்காக ஆவேச முகமாக ஸர்வேச்வரன் வ்யாபித்து நிற்கிறான். ஆகவே இன்பத்தை நாடுபவர்கள் அல்லாமல் மோக்ஷத்தை விரும்புபவர்களால், இவர்கள் உபாசிக்கத் தக்கவர்கள் அல்லர். (வ்யாஸ ஜாமதக்நி அர்ஜுந) – இந்த இடத்தில் கூறப்பட்ட அர்ஜுனன், “பாண்டு புத்திரனாகிய அர்ஜுனன்” என்று கூறுவதாகவும் கொள்ளலாம்; காரணம், இதிஹாஸங்களில் அவனும் ஆவேச அவதாரமாகக் கூறப்படுவதால் ஆகும். இத்தகைய முக்கியம் அல்லாத அவதாரங்களை உபாஸனை செய்தல் கூடாது என்பதை, “ப்ரஹ்ம ருத்ர அர்ஜுந வ்யாஸ ஸஹஸ்ரகர பார்க்கவா:, ககுத்ஸ்த ஆத்ரேய கபில புத்தாத்யா யே ஸஹஸ்ரச:, சக்தி ஆவேச அவதாராஸ் து விஷ்ணோஸ் தத்கால விக்ரஹா:, அநுபாஸ்யா முமுக்ஷுணாம் யத் இந்த்ர அக்நி ஆதி தேவதா: - நான்முகன், ருத்ரன், அர்ஜுனன், வ்யாசர், சூரியன், பரசுராமன், காகுத்தன், ஆத்ரேயன், கபிலர், புத்தர் போன்ற பலரும்; சிறப்பான சக்தி கொண்ட பலரும்; அந்தந்த காலத்தில், அந்தந்த செயலுக்காக மட்டுமே விஷ்ணுவின் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அவதாரங்கள் ஆவர். இவர்கள், இந்த்ரன் மற்றும் அக்னி முதலான தேவர்களைப் போன்று, மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவர்களால் உபாஸிக்கத்தக்கவர்கள் அல்லர்” என்று மற்ற ஸம்ஹிதைகளில் கூறப்பட்டது. ஆனால், கடந்த வாக்கியத்தில் புத்த முனியை ஆவேச அவதாரங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது என்பது, ஆசார்யஹ்ருதயத்தில் (2-90) – மாவுருவில் கள்ளவேடம் - என்று ஸர்வேச்வரனே இப்படியாக அவதரித்ததாக நம்முடைய ஆசார்யர்கள் உரைத்த கருத்துடன் முரண்படும் அல்லவோ என்று கேட்கலாம். கல்ப வேற்றுமை காரணமாக இவ்விதம் செய்யக்கூடும் என்பதால் முரண்பாடு இல்லை. ஜமதக்னியின் புத்திரனாகிய பரசுராமன், ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தால் ஆவேசம் பெற்ற அவதாரமாக உள்ளபோதிலும், சக்தி ஆவேசத்துடன் சேர்த்துக் கூறப்பட்டது ஏனென்றால், “ஸ்வரூபத்தால் ஆவேசித்தல் என்பது, சக்தியின் சிறப்பு காரணமாகவே ஆகும்”, என்பதால் ஆகும்.