Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 191)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அதில், அப்ராக்ருத விக்ரஹங்களுமாய், அஜஹத் ஸ்வபாவ விபவங்களுமாய், தீபாதுத்பந்ந ப்ரதீபம் போலேயிருக்கக் கடவதான முக்ய ப்ராதுர்ப்பாவங்களெல்லாம் முமுக்ஷுக்களுக்கு உபாஸ்யங்களாயிருக்கும்.

– இன்னமும், உபாஸ்யத்வ அநுபாஸ்யத்வ கதநமுகத்தாலும், உபயத்துக்குமுண்டான விசேஷத்தை தர்சிப்பிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் முக்க்ய விபவத்தினுடைய உபாஸ்யத்வத்தை ஸஹேதுகமாக அருளிச்செய்கிறார் (அதில்) என்று தொடங்கி.

மேலும், உபாஸிக்கத்தக்கவை மற்றும் உபாஸிக்கத்தகாதவை என்பதைக் கூறுவதன் மூலமும், முக்கியமான விபவம் மற்றும் முக்கியம் அல்லாத விபவம் என்ற இரண்டிற்கும் உள்ள சிறப்புகளை உணர்த்துவதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலில் முக்கியமாக உள்ள விபவங்களுடைய உபாஸிக்கத்தக்க தன்மையை காரணத்துடன் கூறுகிறார்.

– அதாவது, உபயவிதமான விபவத்திலும் வைத்துக்கொண்டு, “ப்ராதுர்ப்பா வாஸ்து முக்க்யாயே மதம்சத்வாத் விசேஷத:, அஜஹத் ஸ்வபாவ விபவா திவ்யா: ப்ராக்ருத விக்ரஹா, தீபாத் தீபா இவோத்பந்நா ஜகதோ ரக்ஷணாய தே, அர்ச்சயா ஏவஹி ஸேநேச ஸம்ஸ்ருத்யுத்தரணாயதே, முக்க்யா உபாஸ்யாஸ் ஸேநேச, அநர்ச்ச்யாந் இதராந் விது:” என்கிறபடியே, “ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த”தாகையாலே அப்ராக்ருத விக்ரஹங்களுமாய், “அஜோபி ஸந் அவ்யயாத்மா பூதாநாமீச்வரோபி ஸந்” என்கையாலே விடாதேயிருந்துள்ள அஜத்வ அவயயத்வ ஸர்வேச்வரத்வாதியான ஸ்வபாவ விபவங்களையுடையவையுமாய், அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பந்நமான ப்ரதீபம், ஸ்வகாரணமான தீபத்தினுடைய ஸ்வபாவத்தையுடையதா யிருக்குமாப்போலே, ஸ்வகாரண துல்ய ஸ்வபாவமாயிருக்கிற முக்க்ய ப்ராதுர்ப்பாவங்களெல்லாம் முமுக்ஷுக்களுக்கு உபாஸ்யங்களாயிருக்குமென்கை.

அதாவது, முக்கியமான விபவம் மற்றும் முக்கியம் அல்லாத விபவம் என்ற இரண்டையும் நோக்கும்போது, ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதை - ப்ராதுர்ப்பா வாஸ்து முக்க்யாயே மதம்சத்வாத் விசேஷத:, அஜஹத் ஸ்வபாவ விபவா திவ்யா: ப்ராக்ருத விக்ரஹா, தீபாத் தீபா இவோத்பந்நா ஜகதோ ரக்ஷணாய தே, அர்ச்சயா ஏவஹி ஸேநேச ஸம்ஸ்ருத்யுத்தரணாயதே, முக்க்யா உபாஸ்யாஸ் ஸேநேச, அநர்ச்ச்யாந் இதராந் விது: - எந்தெந்த அவதாரம் சிறப்பான எனது அம்சத்தைப் பெற்றுள்ளனவோ அவை முக்கியமானவையே ஆகும். விட இயலாத இயல்புகள், வைபவங்கள், திவ்யமான சிறப்புகள், இந்த உலகில் காண இயலாத திருமேனி போன்றவற்றுடன் கூடியபடி, தூபத்திலிருந்து எழுகின்ற தீபம் போன்று ப்ரகாசிக்கும் அத்தகைய அவதாரங்கள், இந்த ஜகத்தின் காத்தலுக்காக ஆகின்றன. ஸேநைநாதனே! ஸம்ஸாரம் என்ற ஸமுத்ரத்தைத் தாண்டுவதற்காக, அவை ஆராதிக்கத்தக்கவை ஆகும். முக்கியமான அவதாரங்கள் ஆராதிக்கத்தக்கவை, மற்றவை ஆராதிக்கத்தக்கவை அல்ல - என்பதற்கு ஏற்ப, திருவாய்மொழி (3-5-3) - ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த - என்பதாக இங்கு அவதரிப்பதால், கீதை (4-6) – அஜோபி ஸந் அவ்யயாத்மா பூதாநாமீச்வரோபி ஸந் - பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், அனைத்திற்கும் ஈச்வரனாக இருந்தாலும், நான் இங்கு அவதரிக்கிறேன் - என்பதால், கைவிட இயலாத பிறப்பற்ற தன்மை, அழிவற்ற தன்மை, ஸர்வேச்வரனாக உள்ள இயல்பு போன்றவற்றைக் கொண்டவையாக, தீபத்திலிருந்து புறப்பட்ட ஒளியானது தனக்குக் காரணமான தீப ரூபத்தின் தன்மைகளை விடாமல் உள்ளது போன்று, தனக்குக் காரணமான பரம்பொருளுடைய தன்மையை ஒட்டியபடியே உள்ள முக்கிய விபவங்கள் அனைத்தும், மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவர்களால் உபாஸிக்கப்பட வேண்டியவை ஆகும்.