Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 189)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

விபவம், அநந்தமாய் கௌண முக்க்ய பேதத்தாலே பேதித்திருக்கும்.

ஆக, வ்யூஹத்தின்படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ், அநந்தரம் விபவத்தின்படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் (விபவம் அனந்தமாய் என்று தொடங்கி).

இதுவரை வ்யூஹத்தின் விதங்களை விளக்கினார். அடுத்து விபவங்களின் விதங்களை விரிவாக உரைக்கிறார்.

– அதாவது, “விபவோபி ததா அனந்தோ த்விதைவ பரிகீர்த்யதே, கௌண முக்க்யவிபாகேந சாஸ்த்ரேஷு ச ஹரேர் முநே” என்றும், “ப்ராதுர்ப்பாவோ த்விதா ப்ரோக்தோ கௌண முக்க்ய விபேதத:” என்றும் சொலலுகிறபடியே, விபவமானது, பரிகணித்துத் தலைக்கட்டப் போகாதபடி அனந்தமாய், கௌண முக்க்யமாகிற பேதத்தாலே இரண்டு வகையாகப் பிரிந்திருக்குமென்கை விபவமாவது, இதர ஸஜாதீயமாய்க் கொண்டு ஆவிர்ப்பவிக்கை. இதில் கௌணமென்றது அவரமென்றபடி; முக்க்யமென்றது ச்ரேஷ்டமென்றபடி. கௌணமாவது, ஆவேசாவதாரம்; முக்க்யமாவது, ஸாக்ஷாதவதாரம். ஆவேசந்தான் ஸ்வரூபாவேசமென்றும், சக்த்யாவேசமென்றும் த்விவிதமாயிருக்கும். அதில் ஸ்வரூபாவேசமாவது, ஸ்வம்மான ரூபத்தாலே ஆவேசிக்கை. அதாவது பரசுராமாதிகளான சேதநருடைய சரீரங்களிலே தன்னுடைய அஸாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை. சக்த்யாவேசமாவது, காரிய காலத்திலே விதிசிவாதிகளான சேதநர் பக்கலிலே சக்தி மாத்ரத்தாலே ஸ்புரித்து நிற்கை.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – விபவோபி ததா அனந்தோ த்விதைவ பரிகீர்த்யதே, கௌண முக்க்யவிபாகேந சாஸ்த்ரேஷு ச ஹரேர் முநே – முனிவரே! எண்ணற்ற விபவங்களானவை, இரண்டுவிதமாக உள்ளன; ஸ்ரீஹரியின் விபவங்கள் இவ்விதம் மறைமுகமான முக்கியம் கொண்டவை மற்றும் நேரடியான முக்கியமானவை என்று சாஸ்த்ரங்களில் கூறப்பட்டன - என்றும், ப்ராதுர்ப்பாவோ த்விதா ப்ரோக்தோ கௌண முக்க்ய விபேதத: - நேரடியான முக்கியமானவை மற்றும் மறைமுகமான முக்கியம் கொண்டவை என்னும் இரண்டு விதமாக உள்ளன - என்றும் கூறுவதற்கு ஏற்ப, விபவம் என்பது, எண்ணி முடிக்க இயலாதபடி எண்ணற்றதாக, நேரடியான முக்கியமானவை மற்றும் மறைமுகமான முக்கியம் கொண்டவை என்பதாக இரண்டு விதமாக உள்ளது. விபவம் என்பது இந்த உலகில் உள்ள உயிரினங்களுடைய குலங்களில் தோன்றுதல் ஆகும். இதில், மறைமுகமான முக்கியம் கொண்டவை என்பது தாழ்ந்தது, நேரடியான முக்கியம் என்பது உயர்ந்தது ஆகும். மறைமுகமான முக்கியம் கொண்டவை என்பது ஆவேசம், நேரடியான முக்கியமானது நேரடியாக உள்ளது ஆகும். ஆவேசம் என்பது ஸ்வரூபம் மற்றும் சக்தி என்ற இரண்டு விதமாக உள்ளதாகும். ஸ்வரூப ஆவேசம் என்பது, தனது ரூபத்துடன் சேர்ந்து ஆவேசிப்பது ஆகும். சக்தி ஆவேசம் என்பது, அந்தந்த காரியம் நடப்பதற்காக நான்முகன், சிவன் போன்ற சேதநர்களிடம் தனது சக்தியை மட்டும் செலுத்தி வெளிப்படுத்தல் ஆகும்.