Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 187)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ப்ரத்யும்நர், ஐச்வர்ய வீர்யங்களிரண்டோடும் கூடி மனஸ் தத்வத்தையதிஷ்டித்து, தர்மோபதேசத்தையும், மநு சதுஷ்டயம் தொடக்கமான சுத்தவர்க்க ஸ்ருஷ்டியையும் பண்ணக்கடவராயிருப்பர்.

அநந்தரம் ப்ரத்யும்நர் படியை அருளிச்செய்கிறார் (ப்ரத்யும்நர்) என்று தொடங்கி.

அடுத்து ப்ரத்யும்நனுடைய விதத்தை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ப்ரத்யும்நர் “ஐச்வர்ய வீர்ய ஸம்பேதாத் ரூபம் ப்ராத்யுமந முச்யதே” என்றும், “பூர்ண ஷட்குண ஏவாயம அச்யுதோபி மஹாமுநே, குணவைச்வர்ய வீர்யாக்க்யெள ஸ்புடௌ தஸ்ய விசேஷத:” என்றும் சொல்லுகிறபடியே, ஸகல குணங்களுமுண்டாயிருக்கச் செய்தேயும், கார்யாநுகுணமாக விசேஷேண ஸ்ப்புடங்களா யிருக்கிற ஐச்வர்ய வீர்யங்களோடே கூடி, “மநஸோயமதிஷ்ட்டாதா மநோமய இதீரித:” என்கிறபடியே, ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மநஸ் தத்வத்தை அதிஷ்டித்து, “ஐச்வர்யேண குணேநாஸௌ ஸ்ருஜதே தச்சராசரம், வீர்யேண ஸர்வதர்மாணி ப்ரவர்த்தயதி ஸர்வச:” என்கிறபடியே, சாஸ்த்ரார்த்தாநுஷ்ட்டாந ரூபமான தர்மங்களினுடைய உபதேசத்தையும், “மநூநாம் ஸர்கமகரோத் முக பாஹூருபாதத:, சதுர்ணாம் ப்ராஹ்மணாதீநாம் ஸர்க த்வாரம் ஜகத்பதி:, த்விஜ யுக்மம் க்ஷத்ர யுக்மம் வைச்ய யுக்மம் ததைவ ச, மிதுநஞ்ச சதுர்த்தஸ்ய ஏதந்மநு சதுஷ்டயம்; மநுப்யோ மாநவசதம் ஸ்த்ரீபும் மிதுநதோ பவேத்; ஏகைகம் வர்ண பேதேநதேப்யோ மாநவ மாநவா ஸஹஸா:, ஸம்பபூவுச்ச ஸ்த்ரீபும் மிதுநதஸ் ததா; மநுஷ்யாச்ச ததஸ் தேப்ய: ப்ராதுஷ்யுர் வீதமத்ஸரா: ஏதே ஹி சுத்தஸத்வஸ்தா: தேஹாந்தம் நாந்யயாஜிந:, நிராசீ: கர்மகரணாந் மாமேவ ப்ராப்நுவந்தி தே; த்ரய்யந்தேஷு ச நிஷ்ணாதா த்வாதசாத்யாத்ம சித்தகா:, வ்யூஹா நிவ்ருத்திம் ஸததம் குர்வதே தே ஜகத்பதே: த்ருதீயேந ஜகத் தாத்ரா நிர்மிதா மநஸா ஸ்வயம், குண ப்ரதாந யோகே ச நிஷ்ட்டிதா: புருஷர்ஷப: இத்யேஷ சுத்த ஸர்கோயம் கணேச தவ கீர்த்தித:” என்று விஷ்வக்ஸேந ஸம்ஹிதையிற் சொல்லுகிறபடியே முக பாஹூருபாதஜராய், மிதுநமாயிருக்கிற ப்ராஹ்மணாதி மநு சதுஷ்டயம் தொடக்கமாக இந்த மநுக்கள் பக்கலிலே நின்றும் மிதுநங்களாய்க் கொண்டு, தனித்தனியே வர்ண பேதேந உண்டான மாநவ சதமும், அப்படியே ஸ்த்ரீபும் மிதுனங்களாய்க் கொண்டு அந்த மாநவா பக்கலிலே நின்றும உண்டான மாநவரும், அவர்கள் பக்கலிலே நின்றுமுண்டான மநுஷ்யருமாய்க் கொண்டு, நிர்மத்ஸரராய், சுத்தஸத்வஸ்த்தராய், தேஹாந்த மந்யயாஜிகளன்றிக்கே, பலாபிஸந்தி ரஹிதராய்க் கொண்டு, பகவத் ஸமாராதந ரூபமான கர்மத்தை அநுஷ்ட்டியா நிற்பாராய், வேதாந்தத்திலே நிஷ்ணாதராய், த்வாதசாக்ஷரமுகேந அத்யாத்ம சிந்தகராய், ஸர்வேச்வரனுடைய வ்யூஹாநுவ்ருத்தியை எப்போதும் பண்ணா நின்றுகொண்டு, பகவத் ப்ராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தினுடைய ஸ்ருஷ்டியையும் பண்ணக் கடவராயிருப்பரென்கை.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – ஐச்வர்ய வீர்ய ஸம்பேதாத் ரூபம் ப்ராத்யுமந முச்யதே - ஐச்வர்யம் மற்றும் வீர்யம் ஆகியவற்றின் சேர்க்கையுடன் கூடிய ரூபமானது ப்ரத்யும்நம் என்று கூறப்படுகிறது - என்றும், பூர்ண ஷட்குண ஏவாயம அச்யுதோபி மஹாமுநே, குணவைச்வர்ய வீர்யாக்க்யெள ஸ்புடௌ தஸ்ய விசேஷத: - அச்சுதனாகிய ப்ரத்யும்நன் ஆறு குணங்களைப் பரிபூர்ணமாகக் கொண்டபோதிலும், ஐச்வர்யம் மற்றும் வீர்யம் ஆகியவை சிறப்பாக உள்ளன - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ப்ரத்யும்நன் அனைத்து குணங்களுடன் கூடியவனாக உள்ளபோதிலும், தனது கார்யங்களுக்கு ஏற்றபடியாக உள்ள சிறப்பான குணங்களாகிய ஐச்வர்யம் மற்றும் வீர்யம் ஆகியவற்றுடன் உள்ளான். மநஸோயமதிஷ்ட்டாதா மநோமய இதீரித: - ஜீவாத்மாவின் மனதில் நிற்பவன் – என்பதற்கு ஏற்ப, ஞானமானது ஸஞ்சாரம் செய்கின்ற வாசலாக உள்ள மனதின் உள்ளே புகுந்து நிற்கிறான். அடுத்து, ஐச்வர்யேண குணேநாஸௌ ஸ்ருஜதே தச்சராசரம், வீர்யேண ஸர்வதர்மாணி ப்ரவர்த்தயதி ஸர்வச: - அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் நிறைந்த இந்த அனைத்தையும் ஐச்வர்யம் என்னும் குணத்துடன் கூடி நின்று ஸ்ருஷ்டித்து, வீர்யம் என்ற குணத்தின் மூலம் அனைத்து தர்மங்களையும் உபதேசிக்கிறான் - என்பதற்கு ஏற்ப, சாஸ்த்ரங்களைக் கடைப்பிடிப்பதற்கு ஏற்றபடி உள்ளதான தர்மங்களை உபதேசிக்கிறான். அடுத்து விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் - மநூநாம் ஸர்கமகரோத் முக பாஹூருபாதத:, சதுர்ணாம் ப்ராஹ்மணாதீநாம் ஸர்க த்வாரம் ஜகத்பதி:, த்விஜ யுக்மம் க்ஷத்ர யுக்மம் வைச்ய யுக்மம் ததைவ ச, மிதுநஞ்ச சதுர்த்தஸ்ய ஏதந்மநு சதுஷ்டயம்; மநுப்யோ மாநவசதம் ஸ்த்ரீபும் மிதுநதோ பவேத்; ஏகைகம் வர்ண பேதேநதேப்யோ மாநவ மாநவா ஸஹஸா:, ஸம்பபூவுச்ச ஸ்த்ரீபும் மிதுநதஸ் ததா; மநுஷ்யாச்ச ததஸ் தேப்ய: ப்ராதுஷ்யுர் வீதமத்ஸரா: ஏதே ஹி சுத்தஸத்வஸ்தா: தேஹாந்தம் நாந்யயாஜிந:, நிராசீ: கர்மகரணாந் மாமேவ ப்ராப்நுவந்தி தே; த்ரய்யந்தேஷு ச நிஷ்ணாதா த்வாதசாத்யாத்ம சித்தகா:, வ்யூஹா நிவ்ருத்திம் ஸததம் குர்வதே தே ஜகத்பதே: த்ருதீயேந ஜகத் தாத்ரா நிர்மிதா மநஸா ஸ்வயம், குண ப்ரதாந யோகே ச நிஷ்ட்டிதா: புருஷர்ஷப: இத்யேஷ சுத்த ஸர்கோயம் கணேச தவ கீர்த்தித: – நான்காக உள்ள அந்தணர்கள் போன்றவர்களுடைய ஸ்ருஷ்டிக்குக் காரணமாக உள்ளவனும், ஜகத்தின் பதியாக உள்ளவனும் (ஆகிய ப்ரத்யும்நன்), தனது “முகம், தோள், தொடை, கால்கள்” ஆகியவற்றிலிருந்து மனுக்களைப் படைத்தான்; இந்த ஆண் பெண் என்பதான மனுக்களிலிருந்து, நூறு மனுக்கள் ஏற்பட்டனர். அந்தந்த மனுக்களிலிருந்து தனித்தனியான பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் என்பதாகப் பல மனுக்கள் தோன்றினர். அந்த மனுக்களிலிருந்து மனிதர்கள் தோன்றினர். அந்த மனிதர்கள் சுத்தஸத்வ குணம் கொண்டவர்களாக, சரீரம் விழும் காலம் முடிய வேறு யாரையும் குறித்து யாகம் செய்யாதவர்களாக, பலனில் விருப்பம் இல்லாத ஸத் கர்மங்களை மட்டுமே செய்வதில் நோக்கம் கொண்டவர்களாக உள்ளதால் என்னையே அடைகிறார்கள். பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” என்பதன் மூலம் பரமாத்மாவைக் கூறும் சாஸ்த்ரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர்கள், அனைத்து காலங்களிலும் மஹாலக்ஷ்மியின் நாயகனும், ஜகத் பதியுமாகிற வ்யூஹங்களுக்கு அடிமையாக உள்ளனர். உலகைத் தாங்கி நிற்கும் நான்கு வ்யூஹங்களில், மூன்றாவதாக உள்ள ப்ரத்யும்நனால் யோக நிஷ்டையில் ஈடுபடுத்தப்பட்டு, இவர்கள் அனைவரும் அவனால் தனது மனம் மூலம் படைக்கப்பட்டனர். இப்படியாக ஸ்ருஷ்டி குறித்து உனக்கு உரைக்கப்பட்டது - என்று கூறப்பட்டபடி, பகவானுடைய “முகம் தோள், தொடை” ஆகியவற்றில் பிறந்தவர்கலாக, ஆண் மற்றும் பெண் என்பதாக உள்ள அந்தணன் முதலான நான்கு பிறவிகளில் தோன்றிய மனுக்கள்; அந்த மனுக்களிடமிருந்து ஆண் பெண் என நான்கு வர்ணபேதங்களுடன் கூடிய மனுக்கள்; அந்த மனுக்களிடமிருந்து தோன்றிய மனிதர்கள்; அந்த மனிதர்கள் அனைவரும் எந்தவிதமான சச்சரவுகளும் இன்றி, சுத்தஸத்வ குணம் கொண்டவர்களாக, தேகம் விழும்வரை வேறு யாருக்கும் யாகம் செய்யாதவர்களாக, பலனில் விருப்பம் இன்றி பகவத் ஆராதனை என்பதாகவே கர்மங்களை இயற்றி, வேதாந்தத்தில் நிலை நின்று, பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்டு பரமாத்மாவை த்யானித்து, ஸர்வேச்வரனுடைய வ்யூஹங்களை எப்போதும் எண்ணியபடி, பகவானை அடைகிறார்கள் என்பதாக ஸ்ருஷ்டியைச் செய்பவன் ப்ரத்யும்நன் ஆவான்.