Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 186)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
அதில் ஸங்கர்ஷணர், ஜ்ஞாந பலங்களிரண்டோடுங்கூடி ஜீவ தத்வத்தை யதிஷ்டித்து, அத்தை ப்ரக்ருதியில நின்றும் விவேகித்து, ப்ரத்யும்நாவஸ்த்தையையும் பஜித்து, சாஸ்த்ர ப்ரவர்த்தநத்தையும் ஜகத் ஸம்ஹாரத்தையும் பண்ணக் கடவராயிருப்பர்.
இனி இந்த ஸங்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் ப்ரகாசிக்கிற குண விசேஷங்களையும், இவர்கள்தான் இன்ன க்ருத்யங்களுக்குக் கடவராயிருப்பர்க ளென்னுமத்தையும் தனித்தனியே அருளிச் செய்யவேணுமென்று திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் ஸங்கர்ஷணர்படியை அருளிச் செய்கிறார் (அதில் ஸங்கர்ஷணர்) என்று தொடங்கி.
அடுத்து, ஸங்கர்ஷணன் முதலான மூவரிடத்திலும் வெளிப்படும் குணச் சிறப்புக்களையும், இவர்கள் இத்தகைய செயல்கள் செய்யக்கடவர்களாக உள்ளனர் என்பதையும் தனித்தனியே அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆகவே முதலில் ஸங்கர்ஷணனுடைய விதத்தை அருளிச்செய்கிறார்.
– அதாவது, வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக்கொண்டு ஸங்கர்ஷணர் “தத்ர ஜ்ஞாந பலத்வந்த்வாத் ரூபம் ஸாங்கர்ஷணம் ஹரே” என்றும், “பகவாநச்யுதோபீத்தம் ஷட்குணேந ஸமேதித:; பல ஜ்ஞாநௌ குணௌ தஸ்ய ஸ்ப்புடௌ கார்ய வசாந் முநே” என்றும் சொல்லுகிறபடியே, ஸர்வ குணங்களுமுண்டாயிருக்கச் செய்தேயும் கார்யாநு குணமாக ஜ்ஞாந பலங்களிரண்டோடுங் கூடி, “ஸோயம் ஸமஸ்த ஜீவாநாம் அதிஷ்ட்டா த்ருதயா ஸ்த்தித:” என்றும், “ஸங்கர்ஷணஸ் து தேவேசோ ஜகத் ஸ்ரஷ்டுமநாஸ் தத:, ஜீவ தத்வமதிஷ்ட்டாய ப்ரக்ருதேஸ்து விவிச்ய தத்” என்றும் சொல்லுகிறபடியே, ப்ரக்ருதிக்குள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து, அந்த அதிஷ்ட்டாந விசேஷத்தாலே இத்தை ப்ரக்ருதியில் நின்றும், நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து, “விவேகாநந்தரம் தேவ: ப்ரத்யும்நத்வமவாப ஸ:” என்றும், “ஸோயம் ப்ரத்யும்ந நாமாபூத் ததேகாந்தவபுர்த்தர:” என்றும் சொல்லுகிறபடியே ப்ரத்யும்நாவஸ்த் தையையும் பஜித்து, “சாஸ்த்ர ப்ரவர்த்தநஞ்சாபி ஸம்ஹாரஞ்சைவ தேஹிநாம்” என்றும், “பலேந ஹரதீதம் ஸகுணேந நிகிலம் முநே, ஜ்ஞாநேந தநுதே சாஸ்த்ரம் ஸர்வஸித்தாந்த கோசரம்; வேதசாஸ்த்ரமிதிக்க்யாதம் பாஞ்சராத்ரம் விசேஷத:” என்றும் சொல்லுகிறபடியே, வேதாதி சாஸ்த்ர ப்ரவர்த்தநத்தையும், ஜகத் ஸம்ஹாரத்தையும் பண்ணக் கடவராயிருப்பரென்கை.
மூன்று வ்யூஹங்களில் உள்ள ஸங்கர்ஷணன், விஷ்வக்ஸேந ஸம்ஹிதை - தத்ர ஜ்ஞாந பலத்வந்த்வாத் ரூபம் ஸாங்கர்ஷணம் ஹரே - ஸ்ரீஹரியின் ரூபமாகிய ஸங்கர்ஷண வடிவமானது, ஞானம் மற்றும் பலம் ஆகியவற்றைக் கொண்டது - என்றும், பாஞ்சராத்ரம் – பகவாந் அச்யுதோபீத்தம் ஷட்குணேந ஸமேதித:; பல ஜ்ஞாநௌ குணௌ தஸ்ய ஸ்ப்புடௌ கார்ய வசாந் முநே - பகவானாகிய அச்சுதன் ஆறு குணங்கள் கொண்டவனாக உள்ளபோதிலும், ஸங்கர்ஷணனாக உள்ளபோது ஞானம் மற்றும் பலம் ஆகிய குணங்கள் கொண்டு செயலாற்றுகிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, பகவானுக்கு அனைத்து குணங்களும் உள்ளபோதிலும், கார்யங்கள் செய்வதற்கு ஏற்றபடி ஞானம் மற்றும் பலம் ஆகிய இரண்டு குணங்களும் கூடியவனாக ஸங்கர்ஷணனாக உள்ளான். மேலும், ஸோயம் ஸமஸ்த ஜீவாநாம் அதிஷ்ட்டா த்ருதயா ஸ்த்தித: – இத்தகைய ஸங்கர்ஷணன், அனைத்து ஜீவர்களுக்கும் இருப்பிடமாக உள்ளான் - என்றும், ஸங்கர்ஷணஸ் து தேவேசோ ஜகத் ஸ்ரஷ்டுமநாஸ் தத:, ஜீவ தத்வமதிஷ்ட்டாய ப்ரக்ருதேஸ்து விவிச்ய தத் - தேவர்களை ஆண்டபடி உள்ள ஸங்கர்ஷணன், இந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கவேண்டும் என்று தீர்மானித்து, ஜீவாத்மாக்களில் புகுந்து, ப்ரக்ருதியில் மயங்கியபடி உள்ள ஜீவாத்மாக்களுக்கு பெயர் மற்றும் ரூபம் அளித்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ப்ரக்ருதிக்குள் மயங்கிக் கிடக்கும் ஜீவாத்மாக்களில் புகுந்து, அத்தகைய சிறப்பால் அவர்கள் ப்ரக்ருதியிலிருந்து பிரித்து எடுத்து, அவர்களுக்குத் தனித்தனி பெயர் மற்றும் ரூபம் ஆகிய சிறப்புகள் தோன்றும்படிச் செய்கிறான். மேலும், விவேகாநந்தரம் தேவ: ப்ரத்யும்நத்வமவாப ஸ: – இவ்விதம் பிரித்த பின்னர் ஸங்கர்ஷணனாகிய அவன், ப்ரத்யும்நன் ரூபத்தை அடைகிறான் - என்றும், ஸோயம் ப்ரத்யும்ந நாமாபூத் ததேகாந்தவபுர்த்தர: - இப்படியாக ப்ரத்யும்ந நாமத்தை அடைந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ப்ரத்யும்நன் நிலையை அடைகிறான். அடுத்து, சாஸ்த்ர ப்ரவர்த்தநஞ்சாபி ஸம்ஹாரஞ்சைவ தேஹிநாம் – சாஸ்த்ரங்களை வெளிப்படுத்தல் மற்றும் ஸம்ஹாரம் என்பதைச் செய்தல் - என்றும், பலேந ஹரதீதம் ஸகுணேந நிகிலம் முநே, ஜ்ஞாநேந தநுதே சாஸ்த்ரம் ஸர்வ ஸித்தாந்த கோசரம்; வேதசாஸ்த்ரம் இதிக்க்யாதம் பாஞ்சராத்ரம் விசேஷத: - பலம் என்பதைக் கொண்டு ஸம்ஹாரம் செய்கிறான், சாஸ்த்ரம் என்பதான அனைத்து வேதாந்தங்களையும் தன்னுள் அடக்கிய பாஞ்சராத்ரத்தை ஞானம் மூலம் வெளியிடுகிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, வேதம் தொடங்கியுள்ள அனைத்து சாஸ்த்ரங்களையும் வெளியிடுதல் மற்றும் ஜகத்தை ஸம்ஹாரம் செய்தல் ஆகியவற்றை ஸங்கர்ஷணன் செய்கிறான்.