Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 183)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அதில் பரத்வமாவது, அகாலகால்யமான “நலமந்தமில்லதோர் நாட்”டிலே  நித்யமுக்தர்க்கு போக்யனாய்க் கொண்டெழுந்தருளியிருக்குமிருப்பு.

இனி, இந்த அஞ்சு ப்ரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக்கோலி, ப்ரதமம் பரத்வத்தை உபபாதிக்கிறார் (அதில் பரத்வமாவது) என்று தொடங்கி.

அடுத்த இந்த ஐந்து விதங்களையும் முறையாக விளக்க எண்ணி, முதலில் பரத்வத்தை விளக்குகிறார்.

– அதாவது, அவையைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வமாவது “ந காலஸ் தத்ரவை ப்ரபு” என்றும், “கலாமுஹூர்த்தாதி மயச்ச கால: ந யத் விபூதே: பரிணாம ஹேது:” என்றும், “யா வை நஜாது பரிணாம பதாஸ்பதம் ஸா காலாதிகாதவ பரா மஹதீ விபூதி:” என்றும், “யத் காலாத் அபசேளிமம்” என்றும் சொல்லுகிறபடியே, காலக்ருத பரிணாமமில்லாத தேசமாகையாலே, கால கால்யமன்றிக்கேயிருப்பதாய், “நலமந்தமில்ல தோர் நாடு” என்னும்படி ஆநந்தம் அளவிறந்து அத்விதீயமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டத்திலே “யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா:”, “யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா:” என்றும், “அயர்வருமமரர்கள்” என்றும் சொல்லுகிறபடியே, நித்யாஸங்குசித ஜ்ஞாநராயிருந்துள்ள அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகளான நித்யஸூரிகளுக்கும், “ஸூர்யகோடி ப்ரதீகாசா: பூர்ணேந்த்வயுத ஸந்நிபா:, யஸ்மிந் பதே விராஜந்தே முக்தாஸ் ஸம்ஸார பந்த்தனை” என்கிறபடியே நிவ்ருத்த ஸம்ஸாரராய், அஸங்குசித ஜ்ஞாநரான முக்தர்க்கும் அநுபவ விஷயபூதனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பென்கை. “வைகுண்ட்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம், பச்யந்திச் ஸதாதேவம் நேத்ரைர் ஜ்ஞாநேந வாமரா:” என்னக்கடவதிறே.

அவை ஐந்தில் பரத்வம் என்பது மஹாபாரதம் - ந காலஸ் தத்ரவை ப்ரபு - அங்கு காலம் ஆட்சி செய்வதில்லை – என்றும், கலாமுஹூர்த்தாதி மயச்ச கால: ந யத் விபூதே: பரிணாம ஹேது: – கலை, முஹூர்த்தம் என்பதாக உரைக்கவல்ல காலமானது அந்த விபூதியில் மாற்றங்களுக்கான காரணமாக இருப்பதில்லை - என்றும், யா வை நஜாது பரிணாம பதாஸ்பதம் ஸா காலாதிகாதவ பரா மஹதீ விபூதி: – எந்த ஒரு இடமானது பரிணாமங்களுக்கு இடம் அல்லாமல் உள்ளதோ, எந்த உனது உயர்ந்த விபூதியானது காலத்தைக் கடந்து உள்ளதோ – என்றும், யத் காலாத் அபசேளிமம் - எது காலத்தால் மாற்றம் அடையாததோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப, மாற்றங்கள் ஏதும் இல்லாத இடமாக உள்ளதால், காலத்தால் ஏதும் செய்ய இயலாதபடி உள்ளதாகவும்; திருவாய்மொழி (2-8-4) - நலம் அந்தம் இல்லதோர் நாடு - என்பதற்கு ஏற்ப ஆனந்தமானது அளவில்லாமல், இதனைப் போன்று வேறு ஒன்று இல்லாமல் உள்ளதாகவும்; இப்படியாக உள்ள ஸ்ரீவைகுண்டத்தில், புருஷஸூக்தம் – யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: - எங்கு தொடக்கம் முதலாகவே நித்யஸூரீகள் கைங்கர்யம் செய்தபடி உள்ளனரோ – என்றும், யஜுர்வேதம் - யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா: - எங்கு ருஷிகளும் நித்யஸூரிகளும் தொடக்கம் முதலாகவே – என்றும், திருவாய்மொழி (1-1-1) – அயர்வருமமரர்கள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, எப்போதும் சுருக்கம் அற்ற ஞானம் கொண்ட ஆதிசேஷன் கருடன் விஷ்வக்ஸேநர் போன்ற நித்யஸூரிகளுக்கும், லக்ஷ்மீதந்த்ரம் - ஸூர்யகோடி ப்ரதீகாசா: பூர்ணேந்த்வயுத ஸந்நிபா:, யஸ்மிந் பதே விராஜந்தே முக்தாஸ் ஸம்ஸார பந்த்தனை – கோடி சூரியர்கள் போன்றவர்களும் முழு நிலவைப் போன்றவர்களும் ஆகிய முக்தர்கள் வெகு ப்ரகாசத்துடன் உள்ளனரோ - என்று கூறுவதற்கு ஏற்ப ஸம்ஸாரத்தை விட்டவர்களாக சுருக்கம் அற்ற ஞானம் கொன்டவர்களாக உள்ள முக்தர்களுக்கும் எப்போதும் அனுபவிக்கத்தக்கபடியாக எழுந்தருளியுள்ள நிலை ஆகும். வைகுண்ட்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம், பச்யந்திச் ஸதாதேவம் நேத்ரைர் ஜ்ஞாநேந வாமரா: - ஸ்ரீவைகுண்டம் என்ற பெயர் கொண்ட உயர்ந்த இடத்தில் எப்போதும் உள்ளவனாகிய அவனை, நித்யஸூரிகள் தங்கள் கண்கள் மற்றும் ஞானக்கண் கொண்டு எப்போதும் நோக்கியபடி உள்ளனர் – என்பது காண்க.