Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 182)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஈச்வர ஸ்வரூபந்தான், பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரமென்று அஞ்சு ப்ரகாரத்தோடே கூடியிருக்கும்.

– ஆக, (விலக்ஷண விக்ரஹ யுக்தனாய்) என்றத்தையுபபாதித்தார் கீழ். அநந்தரம் இந்த விக்ரஹயோக ப்ரயுக்தமான ஈச்வரனுடைய பரத்வாதி பஞ்ச ப்ரகாரத்தையும் தனித்தனியே ஸுவ்யக்தமாக தர்சிப்பிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி ப்ரதமம் அது தன்னையுத்க்ஷேபிக்கிறார். – “லக்ஷ்மீ பூமீ நிளா நாயகனாய்” என்றத்தையும் உபபாதித்துவிட்டு, பின்னையிது சொல்லாதொழிவானென்? என்னில், அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும், “வைகுண்டேது பரேலோகே ஸ்ரீ ஸஹாயோ ஜநார்தந:, உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேச்வர:” என்கையாலே, மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்தாதுக்தமாம் என்னுமத்தைப் பற்றவும் தனித்து உபபாதித்திலர். ஆகையால் விரோதமில்லை. (ஈச்வர ஸ்வரூபம்) என்கிறவிடத்தில், ஸ்வரூப சப்தத்தாலே சொல்லுகிறது ஸ்வாஸாதாரண விக்ரஹத்தையாதல், விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபந் தன்னையாதல், ஸங்க்ரஹேண இட்டருளின மற்றையிரண்டு தத்வத்ரயப்படியிலும் ஒரு படியிலே, “திருமேனியும் அஞ்சுபடியாயிருக்கும். அதாவது பரத்வமும், வ்யூஹமும், அந்தர்யாமித்வமும், விபவமும், அர்ச்சாவதாரமும்” என்றும், மற்றைப்படியிலே, “ஈச்வர ஸ்வரூபம் ஹேய ப்ரதிபடமாய்” என்று தொடங்கி “பத்நீ பரிஜந விசிஷ்டமாய் இருக்கும்” என்றத்தை யுபபாதித்த வநந்தரம், “இதுதான் அஞ்சுபடியாயிருக்கும்” என்றும், “இதம்” சப்தத்தாலே ப்ரக்ருதமான ஈச்வர ஸ்வரூபத்தைப் பராமர்சித்து, அதுதான் பரத்வாதி ரூபேண பஞ்ச ப்ரகாரமாயிருக்குமென்றும் இவர் தாமேயருளிச் செய்கையாலே. இப்படி, பரத்வாதி பஞ்சப்ரகார விசிஷ்டனாயிருப்பன் என்னுமிடத்தை, “மம ப்ரகாரா: பஞ்சேதி ப்ராஹுர் வேதாந்த பாரகா:, பரோ வ்யூஹச்ச விபவோ நியந்தா ஸர்வதேஹிநாம், அர்ச்சாவதாரச்ச ததா தயாலு: புருஷாக்ருதி:, இத்யேவம் பஞ்சதா ப்ராஹுர் மாம் வேதாந்தவிதோஜநா:” என்று விஷ்வக்ஸேன ஸம்ஹிதையிலே தானே அருளிச் செய்தானிறே.

சூர்ணை (141) - விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் - என்று கூறியதை கடந்த சூர்ணையில் விரிவாக அருளிச்செய்தார். அடுத்து, இத்தகைய திருமேனியுடன் சேர்வதால் வெளிப்படுவதான ஈச்வரனுடைய பரம் முதலான ஐந்து விதங்களையும், தனித்தனியாக விரிவாக அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு, அதனைத் தொடங்குகிறார். சூர்ணை (141) - லக்ஷ்மீ பூமீ நிளா நாயகனாய் - என்று கூறினார். ஆனால் அதனை ஏன் விளக்கவில்லை என்று கேட்கலாம். அதனை விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதாலும்; “வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜநார்த்தந:, உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித: பரமேச்வர: – ஸ்ரீவைகுண்டம் என்ற உயர்ந்த இடத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடியவனாக உள்ளான்; இங்கு பூமாதேவி மற்றும் நீளாதேவியுடன் சேர்ந்தபடி உள்ள அந்த பரமேச்வரன் வணங்கப்படுகிறான்” என்று கூறப்படுவதால், அடுத்து உரைக்கவுள்ள பரத்வம் குறித்த விளக்கத்தில் இதுவும் அடங்கி உள்ளதாலும், “லக்ஷ்மீ பூமீ நிளா நாயகனாய்” என்பது குறித்து தனியாக விளக்கவில்லை. ஆகவே இங்கு முரண்பாடு ஏதும் இல்லை. (ஈச்வர ஸ்வரூபம்) - இங்குள்ள “ஸ்வரூபம்” என்பதன் மூலம், அவனுக்கே உரிய திருமேனியை உரைப்பதாகவும் கொள்ளலாம் அல்லது திருமேனியால் சிறப்புற்ற ஸ்வரூபத்தைக் கூறுவதாகவும் கொள்ளலாம். இதற்கு முன்பு சுருக்கமாக இரண்டு நூல்களை இவரே அருளிச்செய்தார். அவற்றில் ஒன்றில், “திருமேனியும் அஞ்சுபடியாயிருக்கும். அதாவது பரத்வமும், வ்யூஹமும், அந்தர்யாமித்வமும், விபவமும், அர்ச்சாவதாரமும் - திருமேனியானது பரத்வம், வ்யூஹம், அந்தர்யாமி, விபவம், அர்ச்சாவதாரம் என ஐந்துவிதமாக உள்ளது” என்றும், மற்றொன்றில் “ஈச்வர ஸ்வரூபம் ஹேய ப்ரதிபடமாய் - ஈச்வர ஸ்வரூபமானது அனைத்து தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாக” என்று தொடங்கி, “பத்நீ பரிஜந விசிஷ்டமாய் இருக்கும் - பத்னி மற்றும் மற்ற பரிவாரங்களால் சிறப்புற்று இருக்கும்” என்றும் அருளிச்செய்தார்; இவ்விதம் தொடங்கி, “இதுதான் - இது ஐந்துவிதமாக உள்ளது” என்றார். இங்குள்ள “இது” என்பதன் மூலம், அடுத்துள்ள ஈச்வர ஸ்வரூபத்தை உணர்த்தி, அத்தகைய ஸ்வருபமானது பரத்வம் என்பதாக உள்ளதை இவரே அருளிச்செய்தார். இவ்விதம் அவன் ஐந்துவிதமாக உள்ளதை விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – மம ப்ரகாரா: பஞ்சேதி ப்ராஹுர் வேதாந்த பாரகா:, பரோ வ்யூஹச்ச விபவோ நியந்தா ஸர்வதேஹிநாம், அர்ச்சாவதாரச்ச ததா தயாலு: புருஷாக்ருதி:, இத்யேவம் பஞ்சதா ப்ராஹுர் மாம் வேதாந்தவிதோஜநா: - எனது நிலைகள் ஐந்தாக உள்ளதாக வேதாந்தம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வேதாந்தம் அறிந்த சான்றோர்கள் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை என்று உரைக்கிறார்கள் - என்று அவனே அருளிச்செய்தான் அல்லவோ?