Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 180)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

இவன்தான், “முந்நீர் ஞாலம் படைத்த என் முகில்வண்ணன்” என்கிறபடியே ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணும்.

ஆக, “ஸகல ஜகத் ஸ்ர்க்க ஸ்த்திதி ஸம்ஹார கர்த்தாவாய்” என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ். அநந்தரம், “விலக்ஷண விக்ரஹ யுக்தனாய்” என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமிக்கிறார் (இவன்றான்) என்று தொடங்கி.

ஆக, சூர்ணை (141) - ஸகல ஜகத் ஸ்ர்க்க ஸ்த்திதி ஸம்ஹார கர்த்தாவாய் - என்பதை இதுவரை விளக்கினார். அடுத்து சூர்ணை (141) – விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் – என்பதை விளக்கத் திருவுள்ளம் கொண்டவராகத் தொடங்குகிறார்.

நடுவு சொன்ன, ஆர்த்தாதி சதுர்வித புருஷ ஸமாச்ரயணீயத்வமும், தர்மாதி சதுர்வித பலப்ரதத்வமுமாகிற இவையிரண்டையும் உபபாதியாதொழிவானென்? என்னில்; “காரணந்து த்யேய:”, “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்” இத்யாதியிற் சொல்லுகிறபடியே காரணவஸ்துவே உபாஸ்யமும் ஆச்ரயணீயமுமாகையாலே காரணத்வம சொன்னபோதே “சதுர்விதா பஜந்தே மாம்” என்கிற சதுர்வித புருஷ ஸமாச்ரயணீயத்வமும், “பலமத உபபத்தே” என்கிறபடியே பல ப்ரதத்வ ஹேதுவான ஸர்வ சக்தி யோகம் கீழே உக்தமாகையாலே, தர்மாதி சதுர்வித பலப்ரதத்வமும் அர்த்தாத் உக்தமென்னும் நினைவாலும், அவற்றில் உபபாதநீயாம்சம் மிகவுமில்லாமையாலும் ததுபபாதநம் பண்ணிற்றிலர்; ஆகையாலே கீழ்ச்சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோகத்துக்கு அந்வயத்தைச் சொல்லிக்கொண்டு கிளருகிறார். இவன்றான் “முந்நீர் ஞாலம் படைத்தவென் முகில்வண்ணனே” என்கிறபடியே, ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணும் என்று. அதாவது, இப்படி ஜகத் ஸர்காதி கர்த்தாவாகச் சொல்லப்பட்டவிவன்தான் எனக்காக, ஆற்றுநீர் ஊற்றுநீர் வர்ஷ ஜலமென்று மூன்று வகைப்பட்ட நீரையுடைத்தான ஸமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த வர்ஷுக வலாஹகம் போலேயிருக்கிற வடிவையுடையவனேயென்று ஆழ்வாருடைய திவ்ய ப்ரபந்தத்திற் சொல்லுகிறபடியே விக்ரஹ ஸஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணுமென்கை. “முகில்வண்ணன்” என்கிறவிது, ஒளதார்ய குண பரமாக வ்யாக்க்யாதாக்கள் பலரும் வ்யாக்க்யாநம் பண்ணினார்களேயாகிலும், விக்ரஹபரமாக இவரருளிச்செய்கையாலே இங்ஙனுமொரு யோஜனையுண்டென்று கொள்ளவேணும். ஒன்றுக்குப் பல யோஜனையுமுண்டாயிறே இருப்பது.

சூர்ணை (141) என்பதன் நடுவில் கூறப்பட்டதான “ஆர்த்தர்கள் என்னும் நான்குவிதமான புருஷர்கள் தன்னை வந்தடையும் தன்மை கொண்டவனாக உள்ளான்” என்பதையும், “தர்மம் போன்றதான நான்குவிதமான பலனை அளிப்பவனாக உள்ளான்” என்பதையும் விரிவாக உரைக்காமல் விடுத்தது ஏன்? இதற்கு விடை அளிக்கிறார். தைத்திரீயத்தில், “காரணம் து த்யேய: – காரணப்பொருளே த்யானிக்கத்தக்கது” என்றும், ச்வேதாஸ்வதர உபநிஷத்தில் “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் – எந்த நான்முகனை அனைத்திற்கும் முன்பாகப் படைத்தானோ” என்றும் கூறுவதற்கு ஏற்ப, காரணப்பொருள் என்பதே ஆராதிக்கத்தக்கதாகவும் அடையத்தக்க இடமாகவும் உள்ளதால் ஆகும். அனைத்திற்கும் காரணமாக உள்ள தன்மையைக் கூறிய நேரத்திலேயே, கீதை (7-16) - சதுர்விதா பஜந்தே மாம் - நான்குவிதமான புருஷர்கள் என்னை ஆராதிக்கிறார்கள் – என்பதற்கு ஏற்ப, “தன்னை வந்தடையும் தன்மை” என்பது கூறப்பட்டதாகிறது. ப்ர. ஸூ. (3-2-27) – பலமத உபபத்தே - அவனிடமிருந்தே பலன் கிட்டுகிறது – என்பதாகக் கூறப்பட்ட, தர்மம் காரணமாக உள்ள “அனைத்து சக்திகளும் கொண்டவன்” என்பதும் முன்பே கூறப்படுகிறது. ஆகவே இவற்றை விரிவாக உரைப்பதற்கு ஏதும் இல்லை என்பதால், விரிவாகக் கூறவில்லை. எனவே முதலில் கூறப்பட்ட “காரணப் பொருளாக உள்ளான்” என்பதுடன், “அழகான திருமேனியின் சேர்க்கை” என்பதைச் சேர்த்துக் கொண்டு உரைக்கிறார். அதாவது இவன், திருவாய்மொழி (3-2-1) - முந்நீர் ஞாலம் படைத்த என் முகில்வண்ணனே - என்பதற்கு ஏற்ப, திருமேனியுடன் கூடியவனாக நின்று ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்கிறான். அதாவது, “இவ்விதம் ஜகத் முதலானவற்றைப் படைக்கிறான் என்று கூறப்படும் இந்த ஸர்வேச்வரன், ஆற்று நீர் ஊற்றுநீர் மழைநீர் என்பதான மூன்றுவிதமான நீரைக் கொண்ட ஸமுத்திரத்துடன் கூடிய இந்த ஜகத்தை, மழைமேகம் போன்ற திருமேனியுடன் கூடியவனாக, எனக்காகப் படைத்தான்” என்பதே நம்மாழ்வாருடைய திருவுள்ளமாக இருக்கிறது. இதில் கூறப்பட்டபடி திருமேனியுடன் கூடியவனாக, “ஸ்ருஷ்டி , ஸ்திதி, ஸம்ஹாரம்” ஆகியவற்றைச் செய்கிறான் என்று கருத்து. திருவாய்மொழி (3-2-1) – முகில்வண்ணன் – என்பதற்கு, “தாராள குணம் கொண்டவன்” என்பதாகப் பலர் வ்யாக்யானம் செய்தபோதிலும், திருமேனியை உணர்த்துவதாக நம்மாழ்வார் கொள்வதால், இப்படியும் ஒரு கருத்து உள்ளதாகவே ஏற்கவேண்டும். ஒரு சொல்லிற்குப் பல பயன்கள் உள்ளது அல்லவோ?