Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 179)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

கர்மமடியாகச் செய்கையாலும், மண் தின்ற ப்ரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப்போலே ஹித பரனாய்ச் செய்கையாலும் வாராது.

அத்தைப் பரிஹரிக்கிறார் (கர்மமடியாக) என்று தொடங்கி.

அந்த ஐயத்தை நீக்குகிறார்.

– அதாவது, சிலரை ஸுகிகளாகவும், சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டிக்கிறவிது, விஷம ஸ்ருஷ்டிக்குறுப்பான சேதநருடைய கர்மமடியாகச் செய்கையாலும்; துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிறவிது, தனக்கு ரோககரமான மண்ணை விரும்பித் தின்ற ப்ரஜையை, மேலே தின்னாதபடி நாக்கிலே குறியிட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும் ஹிதபரையான மாதாவைப் போலே இவர்கள் மேல் துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி ஹிதபரனாய்ச் செய்கையாலும், வைஷம்ய நைர்க்க்ருண்யங்களிரண்டும் இவனுக்கு வாராதென்கை. இத்தால், “வைஷம்ய நைர்க்ருண்யே ந ஸாபேக்ஷத்வாத்” என்கிற வேதாந்தஸூத்ரார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று. “நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேக்ஷ்ய ஸ்ருஜத: தவ ரங்கசேஷிந் வைஷம்ய நிர்க்ருணதயோ: ந கலு ப்ரஸக்தி: தத் ப்ரஹ்மஸூத்ர ஸசிவா: ச்ருதய: க்ருணந்தி” என்று இதுதன்னை பட்டரும் அருளிச் செய்தாரிறே.

ஒரு சிலரை சுகம் உள்ளவர்களாகவும், ஒரு சிலரை துக்கம் நிறைந்தவர்களாகவும் ஸ்ருஷ்டித்தல் என்பது, அந்தந்த ஸ்ருஷ்டிக்கு ஏற்றபடியான அவரவர்களுடைய கர்மத்தின் அடிப்படையில் உள்ளது. தனக்கு நோய் உண்டாக்கவல்ல மண்ணை விரும்பி உண்கின்ற சிறு குழந்தையானது மீண்டும் அவ்விதம் மண்ணை உண்பதில் அச்சம் கொள்ளும்விதமாக தாயானவள் அதன் நாக்கில் சிறிய சூடு வைக்கிறாள். அதனைப் போன்றே, சேதநர்கள் தங்களுக்கு துக்கம் ஏற்படக் காரணமாக உள்ள கர்மங்களை செய்ய அச்சம் கொள்ளும்படியாக அவர்களுக்கு நன்மையைச் செய்பவனாக, துக்கத்தை அளிக்கிறான். ஆகவே, ஏற்றத்தாழ்வு கொண்டவன் மற்றும் க்ருபை இல்லாதவன் என்ற இரண்டு தோஷங்களும் இவனுக்கு ஏற்படுவதில்லை. இதன் மூலம், ப்ர. ஸூ. (2-1-34) - வைஷம்ய நைர்க்ருண்யே ந ஸாபேக்ஷத்வாத் - என்ற வேதாந்தஸூத்ரத்தின் பொருளை அருளிச்செய்தார் என்றானது. இதனை ஸ்வாமி பராசர பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-42) – நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேக்ஷ்ய ஸ்ருஜத: தவ ரங்கசேஷிந் வைஷம்ய நிர்க்ருணதயோ: ந கலு ப்ரஸக்தி: தத் ப்ரஹ்மஸூத்ர ஸசிவா: ச்ருதய: க்ருணந்தி - திருவரங்கனே! ஜீவன்களின் பலவகையான கர்ம பலன்களுக்கு ஏற்றபடி, இந்த உலகத்தில் உள்ளவற்றை ஏற்றத்தாழ்வுகளுடன் நீ ஸ்ருஷ்டிக்கிறாய். இதனைப் பார்க்கும்போது நீ பாரபட்சமாக நடப்பதாகவும், கருணை இல்லாமல் இருப்பதாகவும் சந்தேகம் எழக்கூடும். இந்த ஐயத்திற்கு அவசியமே இல்லை என்னும் கருத்தை, ப்ரஹ்மஸூத்திரத்தைத் துணையாக உடைய உபநிஷத்துக்கள் தெளிவாகவே கூறுகின்றன - என்று அருளிச்செய்தார்.