Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 178)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
சிலரை ஸுகிகளாகவும் சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால் ஈச்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோவென்னில்;
இனி, விஷம ஸ்ருஷ்டியடியாக மந்தமதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையைப் பரிஹரிக்கைக்காக ப்ரதமம் தத் விஷய சங்கையை அநுவதிக்கிறார் (சிலரை) என்று தொடங்கி.
அடுத்து, ஸ்ருஷ்டியில் சில குறைகள் உள்ளதாகத் தாழ்ந்த புத்தி கொண்டவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகத்தை நீக்குவதற்காக, முதலில், அந்த விஷயத்தில் ஏற்படக்கூடிய சந்தேகத்தை உரைக்கிறார்.
– அதாவது, ஸ்ருஷ்டிக்கிறவளவில் ஸர்வ ஆத்மாக்களையும் ஏகப்ரகாரமாக வன்றிக்கே, தேவமநுஷ்யாதி விபாகேந, சிலவாத்மாக்களை ஸுகிகளாகவும், சிலவாத்மாக்களை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால், ஸர்வஸமனாய், பரமதயாவானா யிருக்கும் ஈச்வரனுக்கு, எல்லாரளவிலும் ஒத்திராமையாகிற வைஷம்யமும், துக்கிகளாக ஸ்ருஷடிக்கையாலே பரதுக்காஸஹிஷ்ணுத்வ ரூபையான க்ருபையில்லாமையும் வாராதோ? என்கிறதாகில் என்கை.
ஸ்ருஷ்டியின்போது அனைத்து உயிர்களையும் ஒரே போன்று அல்லாமல், தேவர்கள் மனிதர்கள் என்பதான வேறுபாடுகளுடன் கூடியதாக, ஒரு சிலரை சுகம் உள்ளவர்களாகவும், ஒரு சிலரை துக்கம் கொண்டவர்களாகவும் ஸ்ருஷ்டித்தால், “அனைவருக்கும் சமமாக உள்ளவன், மிகுந்த தயை கொண்டவன்” என்பவனாக உள்ள ஸர்வேச்வரனுக்கு, “அனைவருடைய விஷயத்திலும் ஒரே போன்று இல்லாத தன்மை” என்பதான ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். அல்லது, துக்கம் நிறைந்தவர்களை ஸ்ருஷ்டிப்பதால் “மற்றவர்கள் அடையும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமை என்பதான க்ருபை இல்லாதவன்” என்னும் நிலையும் ஏற்படலாம் அல்லவோ?