Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 177)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸம்ஹாரத்தில் ருத்ரனுக்கும் அக்ந்யந்தகாதிகளுக்கும், காலத்துக்கும் ஸகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய், தமோகுணத்தோடே கூடி ஸம்ஹரிக்கும்.

(ஸம்ஹாரத்தில் இத்யாதி) அதாவது, ஸம்ஹாரத்தில் வந்தால் ஸம்ஹர்த்தாக்களில் தலையான ருத்ரனுக்கும், அவாந்தர ஸம்ஹர்த்தாக்களான அக்நி அந்தகாதிகளுக்கும், ஸம்ஹார உபயோகியான காலத்துக்கும், ஒன்றுக்கொன்று நாசகமான ஸகல பூதங்களுக்கும், தத் தத் ப்ரவ்ருத்திகளெல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய், கண்பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோகுண விசிஷ்டனாய்க் கொண்டு ஸம்ஹரிக்குமென்கை. “ஆச்ரித்ய தமஸோ வ்ருத்திமந்தகாலே ததா ப்ரபு:, ருத்ர ஸ்வரூபோ பகவாதேகாம்சேந பவத்யஜ:; அக்ந்யந்தகாதி ரூபேண பாகேநாந்யேந வர்த்ததே, காலஸ்வரூபோ பாகோந்யஸ் ஸர்வபூதாநி சாபர:, விநாசம் குர்வதஸ் தஸ்ய சதுர்த்தைவ மஹாத்மந:” என்னக்கடவதிறே. ஸ்ருஷ்ட்யாதிகளில், சதுர்விபாகஞ் சொல்லுகிறவிடத்தில் அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச சொல்லிற்று; அவர்கள் அவனுககு ப்ரகாரபூதராகையாலே யென்னுமிடத்தை அநந்தரம் “ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ் ததைவாகில ஜந்தவ:, விபூதயோ ஹரேரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ:, விஷ்ணுர் மந்வாதய: காலஸ் ஸர்வபூதாநி ச த்விஜ, ஸ்த்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய: ருத்ர: காலாந்தகாத்யாச்ச ஸமஸ்தாச்சைவ ஜந்தவ:, சதுர்த்தா ப்ரளயே ஹ்யேதா ஜநார்தந விபூதய:” என்று மூன்று ச்லோகத்திலே ஸ்புடமாக ப்ரதிபாதித்தானிறே ஸ்ரீபராசரபகவான். இத்தை நினைத்திறே இவரும் (அந்தர்யாமியாய்) என்று அருளிச்செய்தது. “விஷ்ணுமந்வாதய:” என்கிற ச்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாகச் சொன்னவிது, அவதார ப்ரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது.

ஸம்ஹாரம் என்ற நிலையில், அழிப்பவர்களில் தலைவனாக உள்ள ருத்ரன், நடுவில் அழிப்பவர்களாக உள்ள அக்னி மற்றும் யமன் போன்றவர்கள், ஸம்ஹாரத்தில் பயன்படும் காலம், ஒன்றுக்கொன்று அழித்துக்கொள்ளும் அனைத்து உயிர்கள் என்றுள்ள அனைவருடைய செயல்பாடுகளும் ஸர்வேச்வரனாகிய தன்னுடையதே ஆகும் என்று கூறலாம்படியாக அவர்களுக்கு அந்தர்யாமியாக நிற்கிறான். கண்பாராமல் செய்யும் செயல்களுக்குக் காரணமாக உள்ள தேஜோ குணத்தைக் கைக்கொண்டு ஸம்ஸாரம் செய்கிறான். ஸ்ரீவிபு. (1-22, 31) - ஆச்ரித்ய தமஸோ வ்ருத்திம் அந்தகாலே ததா ப்ரபு:, ருத்ர ஸ்வரூபோ பகவாத் ஏக அம்சேந பவத்யஜ:; அக்நி அந்தகாதி ரூபேண பாகேந அந்யேந வர்த்ததே, காலஸ்வரூபோ பாகோந்யஸ் ஸர்வபூதாநி ச அபர:, விநாசம் குர்வதஸ் தஸ்ய சதுர்த்தைவ மஹாத்மந: – ஜகத்தை அழிக்கும் நேரத்தில் மஹாவிஷ்ணு தமோகுணத்தின் செயலை அடைந்து, தனது ஒரு அம்சத்தால் ருத்ரன் ஆகிறான். ஒரு அம்சத்தால் அக்னியாக மாறுகிறான். ஒரு அம்சத்தால் காலம் ஆகிறான். மற்றொரு அம்சத்தால் அனைத்து உயிர்களிலும் நின்று அழிக்கிறான். இப்படியாக நான்கு வகையான அழித்தல் என்பதைப் பரமாத்மா செய்கிறான் - என்பது காண்க. ஸ்ருஷ்டி காலத்தில் நான்கு விதங்கள் கூறியபோது, “அம்சம்” என்பதன் மூலம் நான்முகன் போன்றவர்களைக் கூறினார். அவர்கள் அனைவரும் அவனுடைய சரீரங்களாக உள்ளதால், இவ்விதம் ஸ்ருஷ்டிப்பதை ஸ்ரீவிபு, “ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ் ததைவாகில ஜந்தவ:, விபூதயோ ஹரேரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ:, விஷ்ணுர் மந்வாதய: காலஸ் ஸர்வபூதாநி ச த்விஜ, ஸ்த்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய: ருத்ர: காலாந்தகாத்யாச்ச ஸமஸ்தாச்சைவ ஜந்தவ:, சதுர்த்தா ப்ரளயே ஹ்யேதா ஜநார்தந விபூதய: - ஜகத்தின் ஸ்ருஷ்டிக்குக் காரணமாக உள்ள நான்முகனும், தக்ஷ ப்ரஜாபதிகளும், காலமும், அனைத்து உயிர்களும் என்ற பலவும் ஸ்ரீஹரியின் விபூதிகள் ஆகும். அந்தணரே! விஷ்ணு, மனு, காலம், அனைத்து உயிர்கள் என்ற இவை அனைத்தும் காக்கும் தொழிலில் ஈடுபடும்போது, அவற்றுக்குக் காரணமாக உள்ள விஷ்ணுவின் விபூதிகளாகத் திகழ்கின்றன. ருத்ரன், காலம், யமன், அனைத்து உயிர்கள் போன்றவை ப்ரளய காலத்தில் ஸர்வேச்வரனுடைய விபூதி ஆகும்” என்றுள்ள மூன்று ச்லோகங்களில் ஸ்ரீபராசரர் தெளிவாக அருளிச்செய்தார். இதனைக் கருத்தில் கொண்டுதான் இவரும் “அந்தர்யாமியாய்” என்று அருளிச்செய்தார். மேலே உள்ல ச்லோகத்தில், “விஷ்ணு மந்வாதய: – விஷ்ணு, மனு தொடக்கமாக” என்று விஷ்ணுவையும் விபூதியாகக் கூறியது ஏனென்றால், அவதாரத்தில் விஷ்ணுவாக நின்றதால் ஆகும்.