Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 176)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஸ்திதியில், விஷ்ணவாதி ரூபேண அவதரித்து, மந்வாதிமுகேந சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்து, நல்வழி காட்டி, காலத்துக்கும் ஸகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய், ஸத்வகுணத்தோடே கூடி ஸ்திதிப்பிக்கும்.
(ஸ்த்திதியில்) இத்யாதி. அதாவது, ஸ்த்திதியில் வந்தால், “மத்யே விரிஞ்ச கிரிசம் ப்ரதமாவதார:” என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக, “ஸுர நர திரச்சாமவதரந்”, “எந்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அநேக அவதாரங்களைப் பண்ணி, “யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம்” என்று ஆப்ததமனாக ச்ருதி ப்ரஸித்தனான மநு முதலான யாஜ்ஞவல்க்ய பராசர வால்மீகி சௌநகாதிகள் முகேந ஸ்ம்ருதீதிஹாஸ புராண ரூப சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்து, சேதநர் அபதே ப்ரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல்வழிகளை தர்சிப்பித்து, ரக்ஷணோபயோகியான காலத்துக்கும்; லோகத்தில் ஒன்றுக்கொன்று ரக்ஷகமான ஸர்வ பூதங்களுக்கும்; தத் தத் ப்ரவ்ருத்திகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய், ஜ்ஞாந ப்ரகாசாதி ஹேதுவான ஸத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்த்திதிப்பிக்கும் என்கை. “ஏகாம்சேந ஸ்த்திதோ விஷ்ணு: கரோதி பரிபாலநம், மந்வாதி ரூபீ சாந்யேந காலரூபோபரேண ச ஸர்வ பூதேஷு சாந்யேந ஸம்ஸ்த்தித: குருதே ஸ்த்திதிம், ஸத்வம் குணம் ஸமாச்ரித்ய ஜகத: புருஷோத்தம:” என்னக்கடவதிறே. புராணத்தில் “ஏகாம்சேந ஸ்த்திதோ விஷ்ணு:” என்று விஷ்ணு அவதாரமொன்றையும் சொன்னது, அவதாராந்தரங்களுக்கும் உபலக்ஷண மென்று கொள்ளவேணும், (விஷ்ண்வாதி ரூபேண அவதரித்து) என்று இவர் அருளிச்செய்கையாலே.
அனைத்தையும் காப்பாற்றி, அவற்றை “இருக்கும்படிச் செய்தல்” என்ற செயலில், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-51) - மத்யே விரிஞ்ச கிரிசம் ப்ரதமாவதார: - நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகியோருக்கு நடுவில் முதல் அவதாரம் எடுத்து - என்று விஷ்ணு அவதாரம் தொடக்கமாக, ஸ்ரீவரதராஜஸ்தவம் (17) - ஸுர நர திரச்சாமவதரந் - தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் போன்ற பலவற்றிலும் அவதரித்து – என்றும், திருவிருத்தம் (1) - எந்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்துவிதமான அவதாரங்களையும் செய்கிறான். “யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் - மனு எதனைக் கூறினாரோ அது மருந்து போன்றது” என்பதற்கு ஏற்ப அனைவராலும் நம்பத்தகுந்தபடி உள்ள வேதத்தின் மூலம் அறியப்படும் மனு போன்றவர் தொடங்கி, “யாஜ்ஞவல்க்யர், பராசரர், வால்மீகி, சௌநகர்” என்பது போன்ற பலர் மூலமாக “ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம்” என்பதான வடிவில் உள்ள சாஸ்த்ரங்களை வெளிப்படுத்துகிறான். சேதநர்கள் தவறான பாதையில் சென்று விடாமல் கரையேறுவதற்கு ஏற்றபடியான நற்பாதைகளைக் காண்பிக்கிறான். அனைத்தையும் காப்பாற்றுவதற்குத் தனக்குப் பயன்படும் காலம், உலகில் ஒன்றுக்கொன்று காப்பாற்றியபடி உள்ளதான அனைத்து உயிர்கள் மற்றும் அவற்றில் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு அந்தர்யாமியாக நிற்கிறான். ஞானம் மற்றும் ப்ரகாசம் ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ள ஸத்வகுணத்துடன் கூடி நின்று அனைத்தையும் காப்பாற்றியபடி உள்ளான். ஸ்ரீவிபு. (1-22, 26, 27, 28) – ஏக அம்சேந ஸ்த்திதோ விஷ்ணு: கரோதி பரிபாலநம், மந்வாதி ரூபீ ச அந்யேந காலரூபோபரேண ச ஸர்வ பூதேஷு ச அந்யேந ஸம்ஸ்த்தித: குருதே ஸ்த்திதிம், ஸத்வம் குணம் ஸமாச்ரித்ய ஜகத: புருஷோத்தம: - விஷ்ணு, தனது ஒரு அம்சம் மூலம் அனைத்தையும் காப்பாற்றி பரிபாலனம் செய்கிறான். மற்றொரு அம்சம் மூலமாக மனு போன்ற மற்றவர்களுக்கு அந்தர்யாமியாக நின்றும், வேறு ஓர் அம்சம் மூலமாகக் காலமாகவும், வேறு ஓர் அம்சத்திலிருந்து அனைத்து உயிர்களுக்கும் அந்தர்யாமியாக நின்று, ஸத்வ குணத்தில் இருந்தபடி, இந்த உலகைக் காப்பாற்றுதல் என்பதைச் செய்கிறான் - என்பது காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் (1-22) – ஏக அம்சேந ஸ்த்திதோ விஷ்ணு: - தனது ஒரு அம்சம் மூலம் விஷ்ணு – என்று கூறப்பட்டதன் மூலம், விஷ்ணு அவதாரம் மட்டுமே கூறப்பட்டது என்பதல்ல; இதன் மூலம் அனைத்து அவதாரங்களையும் கூறியதாகவே கொள்ள வேண்டும்; காரணம் சூர்ணையில் “விஷ்ண்வாதி ரூபேண அவதரித்து” என்று இவர் அருளிச்செய்ததால் ஆகும்.