Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 175)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸ்ருஷ்டியில், ப்ரஹ்மாவுக்கும் ப்ரஜாபதிகளுக்கும் காலத்திற்கும் ஸகல ஜந்துக்களுக்கும அந்தர்யாமியாய் ரஜோகுணத்தோடே கூடி ஸ்ருஷ்டிக்கும்.

– “சதுர்விபாகஸ் ஸம்ஸ்ருஷ்டௌ சதுர்த்தா ஸம்ஸ்த்திதஸ் ஸ்த்திதௌ, ப்ரளயஞ்ச கரோத்யந்தே சதுர் பேதோ ஜநார்தந:” என்னக்கடவதிறே. (ஸ்ருஷ்டியில்) இத்யாதி. அதாவது, ஸ்ருஷ்டியில் வந்தால் சதுர்தச புவந ஸ்ரஷ்டாவாய், ஸமஷ்டி புருஷனான ப்ரஹ்மாவுக்கும், அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டி கர்த்தாக்களான தச ப்ரஜாபதிகளுக்கும், ஸ்ருஷ்டிக்கு அபேக்ஷிதமான காலத்துக்கும், ஒன்றுக்கொன்று உத்பாதகங்களான ஸகல ஜந்துக்களுக்கும், தத் தத் ப்ரவ்ருத்திகளடையத் தன்பக்கலிலே பர்யவஸிக்கும்படி அந்தராத்மாவாய், ப்ரவருத்தி ஹேதுவான ரஜோ குண விசிஷ்ட்னாய்க் கொண்டு ஸ்ருஷ்டிக்குமென்கை. “ஏகேநாம்சேந ப்ரஹ்மாஸௌ பவத்ய வ்யக்த மூர்த்திமாந் மரீசி மிச்ரா: பதய: ப்ரஜாநாமந்யபாகத:, இத்தம் சதுர்த்தா ஸம்ஸ்ருஷ்டௌ வர்த்ததேஸௌ ரஜோ குண:”, என்னக்கடவதிறே.

“சதுர்விபாகஸ் ஸம்ஸ்ருஷ்டௌ சதுர்த்தா ஸம்ஸ்த்திதஸ் ஸ்த்திதௌ, ப்ரளயஞ்ச கரோத்யந்தே சதுர் பேதோ ஜநார்தந: - ஜனார்த்தனன் ஸ்ருஷ்டியில் நான்குவிதமாகவும், காப்பதில் நான்குவிதமாகவும், அழிப்பதில் நான்குவிதமாகவும் உள்ளான்”, என்பது காண்க. ஸ்ருஷ்டிக்கும்போது, பதினான்கு லோகங்களையும் படைப்பவனாக உள்ளான். அனைத்து ஆத்மாக்களுடைய தொகுத்த உருவமான நான்முகனுக்கும், அவனால் படைக்கப்பட்டவர்களாக எப்போதும் ஸ்ருஷ்டியில் ஈடுபட்டபடி உள்ள பத்து ப்ரஜாபதிகளுக்கும், ஸ்ருஷ்டிக்குத் தேவையாக உள்ளதான தகுந்த காலத்திற்கும், ஒன்றுக்கொன்று உற்பத்தி செய்தபடி உள்ள அனைத்து உயிர்களுக்கும், இவை அனைத்தின் செயல்கள் அனைத்தும் தன்னில் வந்து முடியும்படியாக அவற்றின் உள்ளே ஆத்மாவாக உள்ளான். இவை அனைத்தும் செயலாற்றுவதற்குக் காரணமாக உள்ள ரஜோகுணத்துடன் நின்று அனைத்தையும் ஸ்ருஷ்டிக்கிறான். ஸ்ரீவிபு. (1-22-25) – ஏகேந அம்சேந ப்ரஹ்மாஸௌ பவத்ய வ்யக்த மூர்த்திமாந் மரீசி மிச்ரா: பதய: ப்ரஜாநாம் அந்யபாகத:, இத்தம் சதுர்த்தா ஸம்ஸ்ருஷ்டௌ வர்த்ததேஸௌ ரஜோ குண: – அனைத்து உயிர்களுக்குள் வசிக்கின்ற ஸர்வேச்வரனாகிய ஜனார்த்தனன், தனது ஒரு சிறு அம்சத்திலிருந்து நான்முகனுக்கு அந்தர்யாமியாக நின்று அனைத்தையும் படைக்கிறான்; வேறு ஒரு அம்சத்தின் பகுதி மூலம் ப்ரஜாபதிகளான மரீசி போன்றவர்களுக்கு அந்தர்யாமியாக நின்று ஸ்ருஷ்டிக்கிறான்; ஜனார்த்தன் தனது மூன்றாவது அம்சமாகக் காலமாகவும், அடுத்து ஓர் அம்சமாக அனைத்து ஜீவராசிகளுடைய அந்தர்யாமியாகவும் இருந்து, ரஜோகுணத்துடன் கூடியவனாக, தனது ஸ்ருஷ்டியில் நான்குவிதங்களாக நின்று படைக்கிறான் - என்பது காண்க.