Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 173)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸம்ஹரிக்கையாவது அவிநீதனான புத்ரனைப் பிதா விலங்கிட்டு வைக்குமாபோலே, விஷயாந்தரங்களில் கைவளருகிற கரணங்களைக் குலைத்திட்டு வைக்கை.

– அநந்தரம், ஸம்ஹார ப்ரகாரத்தை யருளிச்செய்கிறார் (ஸம்ஹரிக்கை யாவது) என்று தொடங்கி.

அடுத்து அழிக்கும் செயல்களுடைய விதத்தைக் கூறுகிறார்.

– அதாவது, “விசித்ரா தேஹ ஸம்பத்தீரீச்வராய நிவேதிதும்” என்கிறபடியே ஸ்வஸமாச்ரயணத்தைப் பண்ணி, உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாகத் தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு தன்னை வழிபடுகையன்றிக்கே பாஹ்ய விஷய ப்ரவணனாய்ப் போகப் புக்கவாறே, விதி நிஷேத வச்யனாய ஒடுங்கி வர்த்தியாமல், ஸ்வைரசாரியான புத்ரனை ஹிதபரனான பிதாவானவன் ஒரு வ்யாபாரார்ஹனல்லாதபடி விலங்கையிட்டு ஒடுக்கி வைக்குமாப்போலே தன்னையொழிந்த விஷயங்களிலே அதிப்ரவணமாய் நடக்கிற கரணங்களைக் குலைத்து ஒடுக்கியிட்டுவைக்கையென்கை.

“விசித்ரா தேஹ ஸம்பத்தீரீச்வராய நிவேதிதும் - விசித்ரமான அமைப்புடன் கூடிய இந்தச் சரீரத்தை அளித்தது என்பது ஈச்வரனை ஆராதிக்கவே ஆகும்” என்பதற்கு ஏற்ப, தன்னைச் சரணம் புகுந்து கரையேறுவதற்கு ஏற்றபடியாக, தான் அளித்த உடல் உறுப்புகளைக் கொண்டு தன்னை வழிபடுதல் போன்றவற்றைச் செய்யாமல், மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளதைக் காண்கிறான். தனக்கு விதிக்கப்பட்டவற்றைச் செய்து, அந்த விதிகளுக்கு வசப்பட்டு, மற்ற விஷயங்களிலிருந்து விலகி வாழாமல், தனது விருப்பப்படி தகாதவற்றைச் செய்தபடி உள்ள தனது புத்திரன் ஒருவனை, அவனுடைய நன்மையில் மட்டுமே கண்வைத்தபடி உள்ள ஒரு தந்தை, அவன் எந்தச் செயலையும் செய்ய இயலாதபடி விலங்கு இட்டு வைக்கிறான். இதனைப் போன்றே ஸர்வேச்வரனும், தன்னைத் தவிர்த்து மற்ற விஷயங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ள உடல் உறுப்புகளை ப்ரளயத்தின்போது அழிக்கிறான் என்று கருத்து.