Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 172)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸ்திதிப்பிக்கையாவது ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே பயிருக்கு நீர் நிலைபோலே, அனுகூலமாக ப்ரவேசித்து நின்று ஸர்வ ரக்ஷைகளையும் பண்ணுகை.

அநந்தரம் ஸ்திதி ஸம்ஹாரங்களினுடைய ப்ரகாரங்களையும் அருளிச் செய்யவேணுமென்று திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் ஸ்திதியினுடைய ப்ரகாரத்தை யருளிச்செய்கிறார் (ஸ்திதிப்பிக்கையாவது) என்று தொடங்கி.

அடுத்ததாக, உயிர்கள் நிற்பதற்குக் காரணமாக உள்ள காப்பாற்றும் தன்மை மற்றும் அவற்றை அழித்தல் ஆகிய விதங்களை அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டார். முதலில் காப்பாற்றும் தன்மையை அருளிச்செய்கிறார்.

– “ஸ்திதிக்கையாவது” என்னாதே “ஸ்திதிப்பிக்கையாவது” என்றது, ஸ்திதியாவது ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் போலே கர்த்ருகதமன்றிக்கே ரக்ஷணத்துக்கு கர்மீபவிக்கிற வஸ்துகதமாயிருப்பதொன்றாகையாலே, ஸ்திதிப்பிக்கையே கர்த்ரு வ்யாபாரமாகையால். (ஸ்ருஷ்டமான) இத்யாதி. அதாவது, “தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே பயிருக்கு ரக்ஷகமாய்க் கொண்டு அநுகூலமாய் நிற்கும் நீர் நிலைபோலே, “ததேவாநுப்ராவிசத்” என்கிறபடியே, தத் ரக்ஷணாநுகூலமாக உள்ளே ப்ரவேசித்து நின்று, தத் தத் வஸ்து அநுகுணமான ஸர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையென்கை. அநுப்ரவேச சப்தத்துக்கு அநுகூலதயா ப்ரவேசம் இவர்க்கிவ்விடத்தில் விவக்ஷிதம். இத்தால், ஸ்திதிப்பிக்கையாவது நிலைப்பிக்கை யாகையாலே தத் ரக்ஷணங்களைப் பண்ணுகையென்றதாயிற்று.

“ஸ்திதிக்கையாவது – இருத்தல் என்பது” என்று கூறாமல் “ஸ்திதிப்பிக்கையாவது - இருக்கும்படிச் செய்தல் என்பது” என்று ஏன் கூறினார்? “இருப்பு” என்பது ஸ்ருஷ்டி மற்றும் அழித்தல் போன்று செய்யும் செயல் என்பது அல்லாமல், காப்பாற்றுதலுக்கு ஏற்றபடியான பொருளாக உள்ளதைக் கூறுவதால், “இருக்கும்படி செய்தல்” என்பதே இங்கு அவன் செய்கின்ற செயல் என்றாகிறது. ஆகவே இவ்விதம் உரைத்தார். “தத் ஸ்ருஷ்ட்வா - அதனை ஸ்ருஷ்டித்து” என்பதற்கு ஏற்ப தன்னால் படைக்கப்பட்ட பொருள்களில், பயிரைக் காப்பாற்றுதலுக்கு ஏற்றபடி நிற்கும் நீர் நிலை போன்று, “தத் ஏவ அநுப்ராவிசத் - அவற்றில் புகுந்து” என்பதற்கு ஏற்ப, அவற்றைக் காப்பாற்றுவதற்குத் தகுதியாக அவற்றின் உள்ளே புகுந்து, அந்தந்த வஸ்துக்களுக்கு ஏற்றபடியான அனைத்து காப்பற்றும் செயல்களையும் செய்கிறான். “உள்ளே புகுதல்” என்பது, அவற்றுக்கு ஏற்றபடியான நன்மைகளைச் செய்யவே ஆகும் என்பதே இங்கு இவருடைய திருவுள்ளமாக உள்ளது. ஆகவே “இருக்கும்படிச் செய்தல்” என்பது “நிலைக்கும்படிச் செய்தல்” என்பதால், அந்தந்த காப்பாற்றும் செயலைச் செய்கிறான் என்றாகிறது.