Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 171)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஈச்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது அசித்தைப் பரிணமிப்பிக்கையும், சேதநனுக்கு சரீரேந்த்ரியங்களைக் கொடுத்து ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணுகையும்.
ஆக ஈச்வரனே த்ரிவிதகாரணமும் என்னுமிடம் ஸாதித்தாராய் நின்றார் கீழ்; அநந்தரம் “அஜாமேகாம்”, “கௌநாத்யந்தவதீ”, “த்ரிகுணம் தஜ்ஜகத் யோநிரநரதிப்ரபவாப்யயம்”, “அஜோஹ்யேக:”, “ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜாவீச நீசௌ”, “அஜோ நித்யச் சாச்வதோயம் புராண:” இத்யாதி ச்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே, நித்யமாயிருந்துள்ள அசித்தையும் சித்தையும் ஈச்வரன் ஸ்ருஷ்டிக்கையாவதுதான் ஏது? என்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (ஈச்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது) என்று தொடங்கி.
இதுவரை ஸர்வேச்வரனே ஜகத்தின் மூன்றுவிதமான காரணமுமாக உள்ளான் என்று நிரூபித்தார். அடுத்து, அஜாம் ஏகாம் – பிறப்பற்றதும் ஒன்றாக உள்ளதும் – என்றும், கௌநாத்யந்தவதீ - முதல் மற்றும் முடிவு அற்றது - என்றும், கொஔ- முதல் மற்றும் முடிவு அற்றது – என்றும், ஸ்ரீவிபு. (1-2-22) - த்ரிகுணம் தஜ்ஜகத் யோநிரநரதிப்ரபவாப்யயம் - மூன்று குணங்கள் கொண்டது, ஜகத்தின் காரணமாக உள்ளது, தோன்றுதல் அற்றது - என்றும், அஜோஹ்யேக: - பிறப்பற்ற ஒன்று - என்றும், ச்வே. (1-19) - ஜ்ஞா ஜ்ஞௌ த்வா அஜௌ ஈச அநீசௌ - அறிந்தவன், அறியாதவன் என்று இரண்டு பிறப்பற்றவர்கள் ஈசன், அநீசன் என்று கூறப்படுகிறார்கள் - என்றும், கட. (2-18) – அஜோ நித்ய: சாச்வத: அயம் புராண: - பிறப்பற்றவனாக, நித்யனாக, எப்போதும் உள்ளவனாக, பழையவனாக உள்ள இந்த ஆத்மா - என்றும் உள்ள பல ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களில் கூறப்பட்டபடி, நித்யமாக உள்ள அசித் மற்றும் சித் ஆகியவற்றில், ஈச்வரன் ஸ்ருஷ்டிப்பது என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
கீழ் ஜகத்காரணபூதனாகச் சொல்லப்பட்டவீச்வரன் சேதநாசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கையாவது, “தம: பரே தேவ ஏகீ பவதி” என்கிறபடியே தன்னோடு அவிபக்தமாய்க் கிடந்து தமச்சப்த வாச்யமான அசித்தை, “ததஸ் ஸ்வயம்பூர் பகவாநவ்யக்தோ வ்யஞ்ஜயந்நிதம், மஹாபூதாதி வ்ருத்தௌஜா: ப்ராதுராஸீத் தமோநுத:” என்கிறபடியே ஸ்வப்ரேரண விசேஷத்தாலே ஸ்வஸ்மாத் விபக்தமாக்கி அநந்தரம், அக்ஷராவஸ்த்தமாக்கி, அது தன்னைப் பின்பு அவ்யக்தாவஸ்த்தமாக்கி, அத்தை வ்யக்த சப்த வாச்யமான ஸமஷ்டி வ்யஷ்டி ரூப ஸமஸ்த கார்யங்களுமாம்படி பரிணமிப்பிக்கையும், “அசித் விசேஷிதாந் ப்ரளய ஸீமநி ஸம்ஸரத:” என்கிறபடியே, கரணகளேபர விதுரனாய், போக மோக்ஷ சூந்யனாய், அசித் விசேஷிதனாய்க் கிடந்த சேதநனுக்கு போக ஸ்த்தாநமான சரீரத்தையும், போக உபகரணங்களாள இந்த்ரியங்களையும் கொடுத்து, போக மோக்ஷ பாகித்வ அநர்ஹனாம்படி, முன்பு ஸங்குசிதமாய்க் கிடந்த ஜ்ஞாநத்தினுடைய விகாஸத்தைப் பண்ணுகையும் என்கை. “சேதநனுக்கு” என்றவிது, ஜாத்யேக வசநம்.
ஜகத் காரணமாகக் கூறப்பட்ட ஸர்வேச்வரன், சேதநம் மற்றும் அசேதநம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜகத்தை ஸ்ருஷ்டித்தான் என்பது என்ன? தம: பரே தேவ ஏகீ பவதி - என்பதற்கு ஏற்ப தன்னுடன் பிரிக்க இயலாத நிலையில் உள்ளதும், “தமஸ்” என்பதால் கூறப்படுவதும் ஆகிய அசித்தை, மநு. (1-6) – தத: ஸ்வயம்பூ: பகவாந் அவ்யக்தோ வ்யஞ்ஜயந் இதம் | மஹாபூதாதி வ்ருத்தௌஜா: ப்ராதுராஸீத் தமோநுத: - ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன், ஸ்வயம்பூவாகிய நாராயணன், அதுவரை புலப்படாமலிருந்து, மிகுந்த ப்ரகாசத்துடன் வெளிப்பட்டான்; மிகுந்த தேஜஸ்ஸுடன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சபூதங்களை, இருளை விரட்டும்விதமாக வெளிப்படுத்தினான் - என்பதற்கு ஏற்ப, தான் உட்புகுந்த சிறப்பு மூலம் தன்னிடமிருந்து பிரித்து, அடுத்து அதனை அக்ஷர நிலையை அடையும்படிச் செய்து, அதன் பின்னர் அதனை அவ்யக்த நிலையை அடையும்படிச் செய்து, அதன் பின்னர் அதனை “வ்யக்தம் – காணும்படி” என்பதாக உள்ள தனி மற்றும் தொகுத்த ரூபமாகப் பரிணாமம் செய்கிறான். மேலும் அசித் வஸ்துக்களைப் போன்று கிடந்த சேதனுக்கு, இன்பத்தை அனுபவிக்கவல்ல இடமான சரீரத்தையும், இன்பங்களை அனுபவிப்பதற்கான கருவிகளாகிய இந்த்ரியங்களையும் அளிக்கிறான். இதன் மூலம் சேதநனை இன்பம் மற்றும் மோக்ஷம் அடைவதற்கான தகுதியைப் பெறும்படிச் செய்கிறான். மேலும், முன்பு சுருக்கமாகக் கிடந்த ஞானத்திற்கு மலர்ச்சியையும் ஏற்படுத்துகிறான். “சேதநனுக்கு” என்பதான இதன் மூலம், சேதநர்களுக்கு மட்டும் செய்வதைக் கூறுகிறார்.