Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 170)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஒரு சிலந்திக்குண்டான ஸ்வபாவம் ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே.

இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரமின்றிக்கேயிருக்க ஸ்வசரீரபூத விசேஷணத்வாரா கார்ய ஜாதத்துக்கெல்லாம் இவனே உபாதாநமாகை கூடுமோ? என்ன, அருளிச்செய்கிறார் (ஒரு சிலந்திக்குண்டான) என்று தொடங்கி.

இவ்விதம் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்திற்கு மாற்றம் ஏதும் இல்லை என்னும்போது, தனது சரீரமாக உள்ள விசேஷணங்கள் மூலம் உண்டாகும் அனைத்து கார்யப் பொருள்களுக்கும் இவனே உபாதானக்காரணமாக உள்ளான் என்பது எப்படிப் பொருந்தும் என்பதற்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, அல்பசக்திகமான சிலந்திக்கு ஸ்வரூபவிகாரமின்றிக்கே யிருக்கச் செய்தே, ஸ்வசரீரபூத விசேஷண முகத்தாலே தந்துஜாதமான கார்ய ஜாதத்துக்குத்தான் உபாதானமாம்படியுண்டான ஸ்வபாவம், “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே” எனறு ஓதப்படுகிற ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே என்கை. “யதோர்ணநாபிஸ் ஸ்ருஜதே க்ருஹணதே ச”, “ஊர்ணநாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத் க்ரஸதே புந: ததா ஸ்ருஷ்ட்வேதமகிலம் ஸ்வயம் தத் க்ரஸதே ஹரி:” என்னக்கடவதிறே. “கார்யே அநந்தே ஸ்வ தநு முகத: த்வாம் உபாதாநம் ஆஹு: ஸா தே சக்தி: ஸுகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய இச்சா யாவத் விஹரதி ஸதா ரங்கராஜ அநபேக்ஷா ஸா ஏவ ஐசாநாத் அதிசயகரீ ஸா ஊர்ணநாபௌ விபாவ்யா” என்றருளிச்செய்தாரிறே பட்டர். இப்படி, நிமித்தோபாதாந காரணத்வங்களைச் சொல்லி ஸஹகாரி காரணத்வம் சொலலா தொழிந்தது ஸர்வஜ்ஞத்வாதி குணயோகம் கீழே சொல்லுகையாலும், நிமித்த உபாதாநங்களுக்கு ஐக்யம் சொல்லுகையாலும், தன்னடையே ஸித்திக்கு மென்னுமத்தாலே, ஆகையிறே வேதாந்த ஸூத்ரத்திலும் இது விசேஷித்துச் சொல்லாதொழிந்தது.

அற்பமாக உள்ள ஒரு சிலந்திக்கு, தனது ஸ்வரூபத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றாலும், தனது சரீரம் மூலமாக எச்சில் வடிவில் உண்டாகும் வலை என்ற கார்யப்பொருளின் உற்பத்திக்கு உபாதானக்காரணமாக உள்ள நிலை ஏற்படுபடுகிறது. இப்படி உள்ளபோது, இத்தகைய இயல்பானது, ச்வே. (6-8) - பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பலக்ரியா ச – அவனுடைய சக்தியானது பலவிதமாகவும், ஞானம் பலம் மற்றும் செய்கைகளை இயல்பாகவே கொண்டதாகவும் உள்ளது - என்று ஓதப்படும் ஸர்வசக்தி கொண்ட வஸ்துவிற்கு ஏற்படாமல் இருக்குமோ? முண். (1-1-7) – யதோர்ணநாபி: ஸ்ருஜதே க்ருஹண்தே ச - எவ்விதம் சிலந்திப்பூச்சி தனது வலையை உண்டாக்கியும் உள்ளிழுத்துக் கொண்டும் செய்கிறதோ – என்றும், ஊர்ணநாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத் க்ரஸதே புந: ததா ஸ்ருஷ்ட்வேதமகிலம் ஸ்வயம் தத் க்ரஸதே ஹரி: - சிலந்தியான்து எவ்விதம் தானே தனது வலையை ஏற்படுத்தி, அந்த வலையைத் தானே எவ்விதம் விழுங்குகிறதோ அதே போன்று, இந்த உலகத்தை படைக்கும் ஸ்ரீஹரி, அதனைத் தானே விழுங்குகிறான் - என்றும் கூறியது காண்க. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-31) – கார்யே அநந்தே ஸ்வ தநு முகத: த்வாம் உபாதாநம் ஆஹு: ஸா தே சக்தி: ஸுகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய இச்சா யாவத் விஹரதி ஸதா ரங்கராஜ அநபேக்ஷா ஸா ஏவ ஐசாநாத் அதிசயகரீ ஸா ஊர்ணநாபௌ விபாவ்யா - ஸ்ரீரங்கநாதா! உனது ஸங்கல்பம் எப்படிப்பட்டது என்றால் – இந்தச் செயலைச் செய்ய இயலாது, இந்தச் செயலைச் செய்ய இயலும் என்னும் பேச்சுக்கே இடம் இல்லாமல் உள்ளதாகும்; எப்போதும், எங்கும் நிறைந்து, எதனையும் செய்து முடிப்பதாக உள்ளது. இத்தகைய உனது ஸங்கல்பம் என்பதே சக்தி என்று கூறப்படும் உனது குணமாக உள்ளது. இத்தகைய சக்தி காரணமாகவே, அனைத்தும் அறிந்தவர்கள் – எண்ணற்ற கார்ய வஸ்துக்களில், சேதனம் அசேதனம் ஆகியவற்றைச் சரீரமாகக் கொண்ட உன்னை, அனைத்திற்கும் உபாதானக் காரணம் என்று கூறுகின்றனர். ஆயினும் பாசுபத மதத்தின் வாதங்களை வீழ்த்துவது உனது இந்தச் சக்தி அல்லவோ? இதனை சிலந்தியிடமும் காணலாம் - என்று ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தார். இவ்விதம் இந்த ஜகத்திற்கான நிமித்தகாரணம் மற்றும் உபாதானக்காரணம் ஆகியவற்றை உரைத்து, ஸஹகாரிகாரணம் என்னும் துணைக்காரணம் குறித்து கூறாமல் விட்டது ஏன்? காரணம், ஸர்வேச்வரனுடைய அனைத்தும் அறியும் தன்மை போன்றவற்றை முன்பே கூறியதாலும், நிமித்தகாரணம் மற்றும் உபாதானக்காரணம் ஆகியவை ஜகத்திற்கு ஒன்றாகவே உணர்த்தப்படுகிறது என்பதாலும், நிமித்தகாரணம் மற்றும் உபாதானக் காரணம் ஆகியவற்றை உரைக்கும்போது ஸஹகாரிகாரணமும் தானாகவே கூறப்பட்டதாகும் என்பதாலும், இதனை வேதாந்தஸூத்ரத்திலும் சிறப்பித்துக் கூறாமல் விடப்பட்டது.