Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 165)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
இவன்தானே ஜகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதாநமுமாயிருக்கும்.
இனி, இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம் கட படாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்குண்டான காரணத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ? என்கிற சங்கையிலே உபாதாநகாரணமும் இவனே என்னுமத்தை அருளிச்செய்கிறார் (இவன் தானே) யென்று தொடங்கி.
பானை மற்றும் துணி போன்றவற்றுக்கு நிமித்தகாரணமாக குயவர்கள் போன்றவர்கள் உள்ளனர். இது போன்று இவனுக்கு ஜகத்காரணமாக உள்ள தன்மை என்பது நிமித்தகாரணமாக மட்டுமே ஆகுமோ என்பதற்கு விடை அளிக்கிறார். அதாவது இவனே உபாதானக்காரணமும் ஆவான் என்கிறார்.
லோகத்தில், கார்யோத்பத்தியில் காரணம் நிமித்த உபாதாந ஸஹகாரி ரூபேண த்ரிவிதமாயிருக்கும் இதில், நிமித்தகாரணமாவது, உபாதாநமான வஸ்துவை கார்யரூபேண விகரிப்பிக்கும் கர்த்ருவஸ்து. உபாதாந காரணமாவது, கார்யரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து. ஸஹகாரி காரணமாவது, கார்ய உத்பத்திக்கு உபகரணமான வஸ்து. கடபடாதிகளுக்கு குலால குவிந்தாதிகள் நிமித்தமாய், மருத்தந்த்வாதிகள் உபாதாநமாய், தண்ட சக்ரவேமாதிகள் ஸஹகாரியாயிருக்கும். இங்ஙனன்றிக்கே ஜகத்ரூப கார்ய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாயிருக்கும். எங்ஙனே? என்னில், “பஹு ஸ்யாம்” என்கிற ஸங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்தகாரணனாயும், நாம ரூப விபாக அநர்ஹமாம்படி தன்னுடனே கூடிக்கிடக்கிற ஸூக்ஷ்ம சித்சித விசிஷ்டனாய்க் கொண்டு உபாதாந காரணமாயும், ஜ்ஞாந சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸஹகாரி காரணமாயும் இருக்கும். ஆகையாலே உபாதாந காரணமும இவனேயென்கிறார். (இவன்) என்று, கீழ் நிமித்தகாரணமாகச் சொன்ன ஈச்வரனைப் பராமர்சிக்கிறது. சித அசித்துக்கள் இரண்டும அப்ருதக் ஸித்த விசேஷணமாய்க் கொண்டு, தான் என்கிற சொல்லுக்குள்ளே அந்தர்ப்பூதமாம்படி யிருக்கையாலே, (தானே ஜகத்தாய் பரிணமிக்கையாலே) என்கிறார். (உபாதாநமுமாயிருக்கும்) என்று கீழ்ச்சொன்ன நிமித்தகாரணத்வத்தோடே உபாதாந காரணத்வத்தையும ஸமுச்சயிக்கிறது. இத்தால் ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்தை ப்ரதிபாதிக்கிற வேதாந்தஸூத்ரத்தில் நிமித்த காரணத்வத்தை ஸாதித்தவநந்தரம், “ப்ரக்ருதிச்ச ப்ரதிஜ்ஞாத்ருஷ்டாந்தாநுபரோதாத்” என்று உபாதாந காரணத்வத்தையும் சொன்னாப்போலே இவரும் அருளிச்செய்தாராயிற்று. “ப்ரக்ருதிச்ச” என்றத்தையுட் கொண்டிறே இவரும் (உபாதாநமுமாயிருக்கும்) என்றது. அங்கு “ப்ரதிஜ்ஞாத்ருஷ்டாந்தா நுபரோதாத்” என்று ஸாத்யம் முன்னாக ஸாதநத்தைச் சொல்லிற்று; இங்கு (இவன்தானே ஜகத்தாய் பரிணமிக்கையாலே) என்று ஸாதநம் முன்னாக ஸாத்யத்தைச் சொல்லிற்று. அங்கு “யேநாச்ருதம் ச்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்று ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞையாலும்,”யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்கிற ததுபபாதகமான த்ருஷ்டாந்தத்தாலும் ஏக வஸது பரிணாமம் ஜகத்து என்றிறே சொல்லிற்று. அந்த ஏக வஸ்துவாகிறது, ஸூக்ஷ்ம சிதசித விசிஷ்டமான ப்ரஹ்மமிறே. அத்தையிறே இவரும் (தானே) என்கிற சொல்லாலேயருளிச்செய்தது. ஆகையால், அந்த ஸூத்ரார்த்தமேயிது என்னத்தட்டில்லை. “ஏகமேவாத்விதீயம்”, “ததாத்மாநம் ஸ்வயமகுருத”, “ஸ்ருஷ்டௌ ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு: பால்யஞ்ச பாதி ச உபஸம்ஹ்ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் ப்ரபு:”, “ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச, ப்ரஹ்மாத்யவஸ்த்தாபிரசேஷ மூர்த்திர் விஷ்ணு வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய” இத்யாதிகளாலே இந்த நிமித்த உபாதாநயோரைக்யத்தை ச்ருதி ஸ்ம்ருதிகள் ஸுவ்யக்தமாகச் சொல்லா நின்றனவிறே.
இந்த உலகில் ஒரு பொருள் உண்டாவதற்கான காரணம் என்பது நிமித்த காரணம், உபாதான காரணம் மற்றும் ஸஹகாரி காரணம் என மூன்றுவிதமாக உள்ளன. இவற்றில் நிமித்தகாரணம் என்பது, உபாதானக்காரணமாக உள்ள வஸ்துவை, அதன் கார்யப்பொருளாக மாற்றிக் கொடுக்கின்ற செயலாற்றும் வஸ்துவாகும். உபாதானக் காரணம் என்பது, கார்யப்பொருளாக மாறுவதற்கான தகுதி கொண்ட வஸ்துவாகும். கார்யப் பொருளுடைய உற்பத்திற்கு உதவுகின்ற வஸ்துவானது, ஸஹகாரி காரணம் என்பதாகும். குடம் மற்றும் துணி ஆகியவற்றுக்கு முறையே குயவன் மற்றும் நெசவாளி ஆகியோர் நிமித்த காரணமாகவும், மண் மற்றும் பஞ்சு ஆகியவை உபாதானக் காரணமாகவும், தடி மற்றும் சக்கரம் ஆகியவை ஸஹ்காரி காரணமாகவும் உள்ளன. ஜகத்ரூபமாக உள்ள கார்யத்தின் உற்பத்தியில் இந்த மூன்றுவிதமான காரணங்களாக ஈச்வரனே உள்ளான். எப்படி? சாந்தோக்யத்தில் “பஹு ஸ்யாம் - நான் பலவாகக் கடவேன்” என்று ஸங்கல்பம் செய்பவனாக உள்ளதால் நிமித்த காரணமாகிறான். பெயர் மற்றும் ரூபம் என்று பிரித்து அறியத் தகுதி இல்லாதபடி தன்னுடன் சேர்ந்து கிடக்கின்ற ஸூக்ஷ்மமான சித் மற்றும் அசித் ஆகியவற்றுடன் இணைந்து உபாதானக் காரணம் ஆகிறான். ஞானம் மற்றும் சக்தி போன்றவற்றுடன் கூடியுள்ளதால் ஸஹகாரி காரணம் ஆகிறான். எனவே உபாதானக்காரணமும் இவனே ஆவான் என்கிறார். (இவன்) - இதன் மூலம் கீழே நிமித்த காரணமாகக் கூறப்பட்ட ஈச்வரனையே மீண்டும் கூறுகிறார். சித் மற்றும் அசித் ஆகிய இரண்டும் அவனை விட்டுப் பிரியாத அடையாளமாகக் கொண்டு, “தான்” என்ற சொல்லிற்குள் இருப்பதால், “தானே ஜகத்தாய் பரிணமிக்கையாலே” என்கிறார். (உபாதாநமுமாயிருக்கும்) - முன்பு கூறிய நிமித்தகாரணத்துடன் உபாதானக் காரணத்தையும் சேர்க்கிறார். அதாவது, ப்ரஹ்மத்தின் ஜகத்காரணத்தை விளக்குகின்ற ப்ரஹ்மஸூத்ரத்தில், நிமித்த காரணமாக மட்டுமே தன்மையை உணர்த்தும் ஸூத்ரத்தைத் தொடர்ந்து ப்ர. ஸூ (1-4-23) - ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் - ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்றால் மட்டுமே, உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண்படாமல் இருக்கும் - என்பதாக ப்ரஹ்மத்தின் உபாதானக் காரணமாக உள்ள தன்மை கூறப்பட்டது. இதனைப் போன்றே இவரும் இங்கு செய்கிறார். “ப்ரக்ருதிச்ச” என்பதை அடிப்படையாகக் கொண்டு இவரும் “உபாதானமாய் இருக்கும்” என்கிறார். ப்ரஹ்மஸூத்ரத்தில், “ப்ரதிஜ்ஞா” என்று, ஸாதிக்கப்படும் பொருளுக்கு முன்பாக ஸாதனம் கூறப்பட்டது. ஆனால் இங்கு, “இவன்” என்பதால், ஸாதனத்திற்கு முன்பாக ஸாதிக்கப்படும் பொருள் கூறப்பட்டதாகிறது. ப்ரஹ்மஸூத்ரத்தில், யேந அச்ருதம் ச்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் ஸ்யாத் - எந்த ஒன்றைக் குறித்துக் கேட்டப்பட்டால் கேட்கப்படாதவையும் கேட்டவை என்று ஆகிறதோ - என்பதாக “ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்” என்ற ப்ரதிஜ்ஞை உள்ளது; இத்தகைய ப்ரதிஜ்ஞையை வெளிப்படுத்துவதாக உள்ள சாந். (6-1-4, 5, 6) - யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாநம் ஸ்யாத் - குழந்தாய்! எவ்விதம் மண்ணைக் குறித்து அறிந்தால், மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் (அதாவது அவற்றின் தன்மைகள் குறித்து) அறிந்ததாகிறதோ - என்ற உதாரணம் உள்ளது; இவை மூலம், ஒரே வஸ்துவே ஜகத்தை பரிணாமம் அடைவது கூறப்பட்டது. இத்தகைய ஒரே வஸ்து என்பது சித் மற்றும் அசித் ஆகியவற்றைக் கொண்ட ப்ரஹ்மம் ஆகும். இதனையே இவரும் “தானே” என்று கூறினார். எனவே இந்தச் சூர்ணையானது, அந்த ப்ரஹ்ம ஸூத்ரத்தின் பொருள் ஆகும் என்று கூறக் குறையில்லை. சாந். (6-2-1) - ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் – இரண்டாவதாக ஏதும் இன்றி இருந்தது - என்றும், தைத். (2-7-7) – தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத – தன்னையே உபாதானமாகச் செய்தது - என்றும், ஸ்ரீவிபு. (1-12-67) - ஸ்ருஷ்டௌ ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு: பால்யஞ்ச பாதி ச உபஸம்ஹ்ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் ப்ரபு: - அந்த நாராயணன் நான்முகனாக நின்று படைக்கிறான், விஷ்ணுவாக இருந்து காக்கிறான், இறுதியில் அனைத்தையும் அழிக்கிறான், தானே அனைத்திற்கும் தலைவனாக உள்ளான் - என்றும், ஸ்ரீவிபு. (1-12-70) - ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச, ப்ரஹ்மாத்யவஸ்த்தாபிரசேஷ மூர்த்திர் விஷ்ணு வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய - அவனே அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான்; படைக்கப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே ஆவான்; காப்பவனும் அழிப்பவனும் அவனே - என்றும் உள்ள பல வாக்கியங்கள் மூலம், நிமித்த காரணம் மற்றும் உபாதானக் காரணம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பதை ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் மிகவும் தெளிவாகக் கூறின.