Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 164)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஸம்ஹாரந்தானும் லீலையாகையாலே குலையாது.
அத்தைப் பரிஹரிக்கிறார் (ஸம்ஹாரந்தானும் லீலையாகையாலே குலையாது) என்று.
அந்த சந்தேகத்தை விலக்குகிறார்.
– அதாவது, கொட்டகமிட்டு விளையாடுகிற பாலர்க்கு, இட்ட கொட்டகந்தன்னை மீளவழித்துப் பொகடுகிறது தானும் லீலையாயிருக்குமாபோலே, இவற்றை ஸம்ஹரிக்கைதானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாயிருக்கையாலே, அப்போதும் லீலை குலையாது என்றபடி. “அகில புவந ஜந்மஸ்த்தேம பங்காதி லீலே” என்றும், “நிகில ஜகதுதய விபவ லய லீல” என்றும், ஸ்ருஷ்டியோபாதி ஸம்ஹாரத்தையும் அவனுக்கு லீலையாக அருளிச்செய்தாரிறே எம்பெருமானார். ஆக இதுக்குக் கீழ், ஈச்வரனே ஜகத்துக்குக் காரணமென்றும்; இவன் காரணமாகிறது ஹேத்வந்தரங்களாலன்று, ஸ்வேச்சையாலேயென்றும்; ஸங்கல்ப மாத்ராவக்ல்பதமாகையாலே இதுதான் அநாயாஸமாயிருக்குமென்றும்; இது தனக்கு ப்ரயோஜநம் லீலையென்றும் சொல்லி நின்றது.
அதாவது, மணல் வீடு கட்டி விளையாடும் சிறுவர்களுக்குத் தாங்கள் கட்டிய மணல் வீட்டை அழிப்பதும், பின்னர் மீண்டும் உண்டாக்குவதும் என்பது, விளையாட்டிற்காகவே உள்ளது. இதனைப் போன்றே ஸம்ஹாரமும் ஸ்ருஷ்டி போன்று லீலையாக உள்ளதால், அந்த நேரத்தில் லீலை மாறாது என்று கருத்து. ஸ்ரீபாஷ்யம் மங்கள ச்லோகம் – அகில புவந ஜந்மஸ்த்தேம பங்காதி லீலே - அனைத்து உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை ஒரு லீலையாகக் கொண்டு - என்றும், நிகில ஜகதுதய விபவ லய லீல - அனைத்து உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை ஒரு லீலையாகக் கொண்டவனே – என்றும், ஸ்ருஷ்டி போன்று ஸம்ஹாரத்தையும் அவனுக்கு ஒரு லீலையாகவே எம்பெருமானார் அருளிச்செய்தார். ஆகவே, இதற்கு முன்பாக, அனைத்து ஜகத்திற்கும் ஈச்வரனே காரணமாக உள்ளான் என்பது, மற்ற காரணங்களால் அல்ல, தனது இச்சையால் மட்டுமே என்றும்; ஸங்கல்பத்தை கொண்டு மட்டுமே இது நடைபெறுவதால், மிகவும் எளிதாகவே அவனுக்கு உள்ளது என்றும்; இதன் பயன் என்பது லீலைக்காக மட்டுமே என்றும் கூறப்பட்டது.