Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 162)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
இதுக்கு ப்ரயோஜநம் கேவல லீலை.
– அநாயாஸமாயிருந்ததேயாகிலும், அவாப்த ஸமஸ்தகாமதயா பரிபூர்ணனாயிருககிறவனுக்கு இந்த வ்யாபாரத்தால் ப்ரயோஜநமென்? என்ன, அருளிச்செய்கிறார் (இதுக்கு ப்ரயோஜநம் கேவலலீலை) என்று.
ஜகத்ஸ்ருஷ்டி போன்றவை அவனுக்கு மிகவும் எளிதாக உள்ளபோதிலும், தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெற்றவனும் பரிபூர்ணமாக உள்ளவனும் ஆகிய அவனுக்கு, இத்தகைய செயல்களால் என்ன பயன் உள்ளது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.
– அதாவது, இந்த ஜகத் ஸ்ருஷ்டி ரூப வ்யாபாரத்துக்கு ப்ரயோஜநம் வெறும் லீலையென்றபடி. லீலையாவது தாதாத்விக ரஸமொழிய காலாந்தரத்தில் வருவதொரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வ்யாபாரமேயாகிலும், (இதுக்கு ப்ரயோஜநம்) என்று ஸ்ருஷ்டி ரூப வ்யாபாரத்துக்கு ப்ரயோஜநமாகச் சொல்லுகையாலே தாதாத்விக ரஸ மாத்ரத்தைச் சொல்லிற்றாகக் கடவது. இந்த ஸ்ருஷ்டி ரூப வ்யாபாரந்தான், ஸார்வபௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணற்கொட்டகம் போலேயும் தாதாத்விக ரஸமாயிருப்பதொன்றிறே இவனுக்கு. இத்தால் “லோகவத்து லீலா கைவல்யம்” என்கிற ஸுத்ரார்த்தத்தை அருளிச்செய்தாராயிற்று. “க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய” என்று ஸ்ரீபராசர பகவானும், “அப்ரமேயோ நியோஜ்யச்ச யத்ர காம கமோ வசீ, மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ” என்று ஸ்ரீவேதவ்யாஸ பகவானும, “நளிர் மாமலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்”, “இன்புறுமிவ விளையாட்டுடையான்” எனறு அபியுக்தரும், இவனுடைய ஜகத் வ்யாபாரத்துக்கு ப்ரயோஜநம் லீலையாகவே சொன்னார்களிறே. ஆனால், "சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பானெண்ணி யொன்றி யொன்றி யுலகம் படைத்தான்” என்றும், “உய்யவுலகு படைத்து” என்றும், “விசித்ரா தேஹ ஸம்பத்திரீச்வராய நிவேதிதும, பூர்வமேவ க்ருதா பரஹ்மந் ஹஸ்தபாதாதி ஸம்யுதா” என்றும், “மாயவன்றன்னை வணங்க வைத்த கரணமிவை” என்றும், “அசிதவிசேஷிதாந் ப்ரளய ஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரைர் கடயிதும் தயமாந மநா:” என்றும் சேதநருடைய உஜ்ஜீவநம் ப்ரயோஜநமாக ஜகத் ஸ்ருஷ்டி பண்ணினான் என்று சொல்லுகிற இவ்வசநங்களுக்கு வையர்த்த்யம் வாராதோ? என்னில்; வாராது. எங்ஙனே? என்னில், உபய ப்ரயோஜநமுமுண்டாயிருக்கச் செய்தேயும், லீலையே ப்ரயோஜநம் என்றவிது, ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்னவித்தனையாகையாலே. “ரூப ப்ரகார பரிணாம க்ருத்வ்யவஸ்த்தம் விச்வம் விபர்யஸிது மந்யதஸச்ச கர்த்தும், க்ஷாம்யந் ஸ்வபாவ நியமம் கிமுதீக்ஷஸே த்வம் ஸ்வாதந்த்ர்யமைச்வரமபர்யநு யோஜ்யமாஹு:” என்கிறபடியே, நினைத்தபடி செய்யவல்ல சக்திமானாகையாலே, ஸகலாத்மாக்களையும் யுகபதேவ முக்தராக்கவல்லனாயிருக்கச் செய்தேயும் ஸ்வாதீந ஸ்வரூப ஸ்த்தித்யாதிகரான ஆத்மாக்களை கர்மத்தை வ்யாஜீகரித்துக் கைகழியவிட்டு சாஸ்த்ர மர்யாதையிலே வரவர அங்கீகரிப்பனென்று இருக்கிறது, லீலா ரஸேச்சையாலேயிறே. லீலா விபூதியென்றிறே இது தனக்கு நிரூபகம். ஆகையாலே, இவ்விபூதியில லீலையே ப்ரசுர ப்ரயோஜநமாய்ச் செல்லுகையாலே, ஸூத்ரகாராதிகளெல்லாரும், ஸ்ருஷ்டி ப்ரயோஜனம் லீலையேயாகச் சொல்லுகையாலே இவரும் (கேவலலீலை) என்று அருளிச் செய்தாராயிற்று.
ஜகத் ஸ்ருஷ்டி என்பதாக உள்ள செயல்களுடைய பயன் என்பது வெறும் விளையாட்டிற்கு உதவியாக இருத்தலே ஆகும். விளையாட்டு என்பது அந்த நேரத்தில் ஏற்படும் இன்பம் அல்லாமல், மற்றொரு காலத்தில் உண்டாகக்கூடிய பயனைக் கருத்தில் கொள்ளாமல் உள்ளதே ஆகும். ஆனாலும் இந்த விளையாட்டிற்கு, ஜகத் ஸ்ருஷ்டி போன்றவை பயனாக உள்ளன என்று கூறுவதால், அப்போது உண்டாகக்கூடிய விளையாட்டு இன்பமே கூறப்பட்டதாகிறது. இத்தகைய ஸ்ருஷ்டி முதலான செயல்கள், அரசர்களுக்கு சூதாட்டம் போன்றும், சிறுவர்களுக்கு மணல் வீடு கட்டுவது போன்றும், இவனுக்கு ஏற்ற விளையாட்டாக உள்ளது. இதன் மூலம் ப்ர. ஸூ. (2-1-33) - லோகவத்து லீலா கைவல்யம் – என்ற ஸூத்ரத்தின் பொருளைக் கூறினார். இப்படியாக இவன் ஸ்ருஷ்டி முதலான செயல்களில் ஈடுபடுவதல் என்பது விளையாட்டிற்காகவே ஆகும் என்பதை ஸ்ரீபராசரபகவான் ஸ்ரீவிபு. (1-2-18) – க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய – விளையாடும் சிறுவர்கள் செயல் போன்று அவனுடைய செயல்கள் உள்ளன - என்றும், ஸ்ரீவிபு. (1-2-20) - அப்ரமேயோ நியோஜ்யச்ச யத்ர காம கமோ வசீ, மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ - அளவிட இயலாதபடியும், அனைத்துவிதமான இன்பங்களை அடைந்தபடியும், அனைவரையும் வசப்படுத்தியபடியும் உள்ள பகவான், எந்த ஒரு லீலைக்கு உபயோகமான உலகத்தில், பஞ்சபூதம் போன்றவற்றைக் கொண்டு, சிறுவர்கள் பந்து விளையாடுவது போன்று விளையாடுகிறானோ – என்றும், நாச். (14-9) – நளிர் மாமலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் - என்றும், திருவாய்மொழி (3-10-7) – இன்புறுமிவ விளையாட்டுடையான் - என்றும் கூறுவது காண்க. ஆனால் இவ்விதம் விளையாட்டிற்காகவே ஜகத் ஸ்ருஷ்டி செய்கிறான் என்றால், சேதநர்கள் பிழைப்பதற்காகவே ஜகத் ஸ்ருஷ்டி செய்வதாகக் கூறும் பின் வரும் வாக்கியங்கள், பயனின்றிப் போகாதோ? அவையாவன திருவாய்மொழி (3-9-10) – சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பானெண்ணி யொன்றி யொன்றி யுலகம் படைத்தான் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (1-6-1) - உய்யவுலகு படைத்து - என்றும், விசித்ரா தேஹ ஸம்பத்திரீச்வராய நிவேதிதும, பூர்வமேவ க்ருதா பரஹ்மந் ஹஸ்தபாதாதி ஸம்யுதா – தன்னை வணங்கி வழிபடுவதற்காகவே கை கால் என்பதான விசித்ரமான இந்தச் சரீரம் ப்ரஹ்மத்தால் முன்னர் படைக்கப்பட்டது - என்றும், இராமாநுச நூற்றந்தாதி (67) - மாயவன்றன்னை வணங்க வைத்த கரணமிவை - என்றும், ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் (2-41) – அசித் அவிசேஷிதாந் ப்ரளயஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரை: கடயிதும் தயமாந மநா: வரத! நிஜ இச்சயா ஏவ பரவாந் அகரோ: ப்ரக்ருதிம் மஹத் அபிமாந பூத கரண ஆவளி கோரகிணீம் - மோக்ஷ வரம் அளிக்கும் பெரியபெருமாளே! ப்ரளயத்தின்போது, சேதனங்கள் அனைத்தும், அசித் வஸ்துக்களுடன் எந்தவிதமான வேறுபாடும் காண இயலாமல், ஒன்றாகவே கிடந்தன. இவற்றைக் கண்டு உனது மனம் இரங்கியது. இந்தச் சேதனங்களை, அவற்றின் உடல் மற்றும் இந்த்ரியங்களுடன் சேர்க்க நீ திருவுள்ளம் கொண்டாய். இதற்கான ஸங்கல்பம் கொண்டவனாக, உனது இச்சைக்கு மட்டுமே வசப்பட்டவனாக – ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், பஞ்சபூதங்கள், இந்த்ரியங்கள் போன்றவற்றை வரிசையாக அரும்பும்படிச் செய்தாய் - என்றும் உள்ளவை ஆகும். இந்த முரண்பாடு ஏற்படாது. ஏன்? இரண்டுவிதமான பயன்களும் உள்ளதாலும், விளையட்டிற்காகவே செய்வதாகக் கூறப்படும் கருத்தானது இன்றியமையாத விஷயத்தைக் கூறுவதாலும் ஆகும். ஸ்ரீவைகுண்டஸ்தவம் (55) - ரூப ப்ரகார பரிணாம க்ருத்வ்யவஸ்த்தம் விச்வம் விபர்யஸிது மந்யதஸச்ச கர்த்தும், க்ஷாம்யந் ஸ்வபாவ நியமம் கிமுதீக்ஷஸே த்வம் ஸ்வாதந்த்ர்யமைச்வரமபர்யநு யோஜ்யமாஹு: - இன்ன வஸ்துவின் ஸ்வரூப பரிணாமம் இன்னது, இன்ன வஸ்துவின் ஸ்வபாவ பரிணாமம் இன்னது என்பதான வரையறை கொண்டுள்ள சேதநம் மற்றும் அசேதநம் ஆகியவற்றைக் கொண்டதான அனைத்து ப்ரபஞ்சங்களையும் விபரீதமாக மாற்றுவதற்கும், அஸத்தாக உள்ளதை ஸத்தாக மாற்றுவதற்கும் சக்தி கொண்ட நீ, ஒவ்வொரு ஸ்வபாவத்தையும் ஏன் நியமிக்கிறாய்? உனது சுதந்திரமானது எல்லயற்றது என்பதால் ஆகும் - என்பது காண்க; இதன்படி தான் எண்ணியதைச் செய்யவல்லவனாக உள்ளதால், அனைத்து ஆத்மாக்களையும் ஒரே நேரத்தில் முக்தி பெறச்செய்யும் திறன் கொன்டவனாக உள்ளபோதிலும், “தாங்கள் தங்களுடைய வசத்தில், தங்களுடைய இருப்பு மற்றும் ஸ்வரூபத்தைக் கொண்டுள்ளோம்” என்று எண்ணியுள்ள ஆத்மாக்களை, கர்மத்தை ஒரு வாய்ப்பாகக் கொண்டு கைகழிய விட்டு, அவர்கள் சாஸ்த்ரங்களுடைய வரம்பிற்குள் வரும்போது ஏற்றுக் கொள்ளுதல் என்பது, லீலையில் உள்ள இச்சையால் ஆகும். “லீலைக்கான லோகம்” என்று அல்லவோ இந்த உலகின் பெயராக உள்ளது? எனவே இந்த விபூதியின் லீலை என்பதையே இன்றியமையாத ஒன்றாகக் கூறுவதால், ஸூத்ரகாரர்கள் அனைவரும் ஸ்ருஷ்டியின் பயன் என்பது அவனுடைய லீலைக்காக இருத்தலே ஆகும் என்பதை ஏற்பதால், இவரும் அவ்விதமே கூறுகிறார்.