Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 161)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஸ்வஸங்கல்பத்தாலே செய்கையாலே இதுதான் வருத்தமற்றிருக்கும்.

இப்படி இச்சையாலேயானாலும் இதுதான் ஆயாஸ ரூபமாயிருக்குமோ என்ன அருளிச்செய்கிறார் (ஸ்வஸங்கல்பத்தாலே செய்கையாலே இதுதான் வருத்தமற்றிருக்கும்) என்று.

இப்படியாக ஸர்வேச்வரனுடைய இச்சை என்பதாகவே உள்ளபோதிலும், அது அரிதாக இருக்குமோ என்பதற்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, யத்நரூபமான காயிகவ்யாபாரத்தாலன்றிக்கே, அயத்நமான மாநஸ வ்யாபாரரூப ஸங்கல்பத்தாலே செய்கையாலே இந்த ஜகத் ஸருஷ்டி ரூப வ்யாபாரந்தான் அவனுக்கு அநாயாஸமாயிருக்குமென்கை. “ஸோகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி”, “மநஸைவ ஜகத் ஸ்ருஷ்டிம் ஸம்ஹாரஞ்ச கரோதி ய: தஸ்யாரிபக்ஷக்ஷபணே கியாநுத்யமவிஸ்தர:”, “நினைந்தவெல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்துன் பெருமை” என்னக்கடவதிறே.

அதாவது, செயல்படுவதாக உள்ள சரீரம் மூலம் அல்லாமல், மனம் மூலம் செய்யப்படும் ஸங்கல்பத்தால் செய்வதால், ஜகத் ஸ்ருஷ்டி முதலான வடிவில் உள்ள அவனுடைய செய்கைகள் அனைத்தும் அவனுக்கு எளிதாகவே இருக்கும். தைத். (2-6) - ஸோகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி – நான் பலவாகக் கடவேன் என்று ஸங்கல்பம் செய்து படைத்து - என்றும், ஸ்ரீவிபு. (5-22-15) - மநஸைவ ஜகத் ஸ்ருஷ்டிம் ஸம்ஹாரஞ்ச கரோதி ய: தஸ்யாரிபக்ஷக்ஷபணே கியாநுத்யமவிஸ்தர: - எந்த ஒரு ஸர்வேச்வரன் தனது மனத்தின் நினைவு மூலம் மட்டுமே ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் மற்றும் ஸம்ஹாரம் செய்தல் ஆகியவற்றைப் புரிகிறானோ அவனுக்கு விரோதிகளை அழிக்கும் செயலில் உள்ள முயற்சிதான் எத்தனை, மிகவும் அற்பமே - என்றும், திருவாய்மொழி (1-5-2) - நினைந்தவெல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்துன் பெருமை – என்றும் கூறுவது காண்க.