Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 160)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

இவன் காரணமாகிறது, அவித்யா கர்ம பரநியோகாதிகளாலன்றிக்கே ஸ்வேச்சையாலே.

லோகத்திலே அவித்யா கர்ம நிபந்தநமாகவும் பரநியோக நிபந்தநமாகவும் காரணமாகையுண்டாகையாலே அவற்றைக் கழித்து, இவனுடைய காரணத்வ ஹேதுவை அருளிச்செய்கிறார் (இவன் காரணமாகிறது) என்று தொடங்கி.

இந்த லோகத்தில், அவித்யையானது கர்மம் காரணமாகவும், மற்றவர்களுக்கு வசப்படுதல் காரணமாகவும் உண்டாகிறது. அவற்றை விலக்கி, இவனுடைய ஜகத்காரணத்திற்கான காரணத்தை அருளிச்செய்கிறார்.

அவித்யா கர்ம நிபந்தநமான காரணத்வம் ஸகல ஜந்து ஸாதாரணம். அதாவது, லோகத்தில் ஒன்றுக்கொன்று உத்பாதகமாய்க் கொண்டு வருகிற காரணத்வம், வைஷயிக ஸுகப்ராவண்ய ஹேதுவான அஜ்ஞாநத்தாலும் காமத்தாலுமிறே. அதில், சாஸ்த்ரவச்யமானவற்றினுடைய உத்பாதகத்வம் கர்ம ப்ரதாநமாயிருக்கும்; அல்லாதது அவித்யா ப்ரதாநமாயிருக்கும் இரண்டும், ஒன்றையொன்று விட்டிராது அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளுடைய காரணத்வம் பரநியோக ப்ரதாநமாயிருக்கும். “ப்ராஜாபத்யம் த்வயா காம பூர்வம் மயி நிவேசிதம்”, “ஏதௌ த்வௌ புருஷ ச்ரேஷ்ட்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸம்ருதௌ, ததா தர்சித பந்த்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ” இத்யாதிகளிலே கண்டு கொள்வது. “ஆதி” சப்தத்தால், இவர்க்கு விவக்ஷிதம் “அவர்ஜநீயமான ரோகமோ” என்று நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச்செய்ததா மித்தனை. “அந்த ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்கள், எம்பெருமானுக்கு அவித்யா கர்ம நிபந்தநமோ? அன்றிக்கே, அவர்ஜநீயமாயிருப்பதொரு (ரோ) ராகமோ? இல்லையாகில், பரப்ரேரிதனாய்க் கொணடு செய்கிறானா?” என்றிறே அவர் சங்காவாக்யத்தில் அருளிச் செய்தது. இவற்றாலன்றிக்கே ஸ்வேச்சையாலே என்றது “நிரவத்யம் நிரஞ்ஜநம்”, “அபஹதபாப்மா”, “ந தஸ்யேசே கச்சந” என்கிறபடியே அவித்யாதி தோஷ ப்ரதிபடனாய், தனக்கொரு நியாமகரின்றிக்கேயிருப்பானொருவனாகையாலே, தன்னிச்சையொழிய ஹேத்வந்தரமில்லையென்றபடி. “அசிதவிசேஷிதாந் ப்ரளயஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரைர் கடயிதும் தயமாநமநா:, வரத நிஜேச்சயைவ பரவாநகரோ: ப்ரக்ருதிம் மஹதபிமாந பூதகரணாவளி கோரகிணீம்”, “ப்ரளய ஸமய ஸுப்தம் ஸ்வம் சரீரைகதேசம் வரத சிதசிதாக்க்யம் ஸ்வேச்சயா விஸ்த்ருணாந:, கசிதமிவ கலாபம் சித்ரமாதத்யதூந்வந் அநுசிகிநி சிகீவ க்ரீடஸி ஸ்ரீஸமக்ஷம்” என்றிறே பட்டரருளிச்செய்தது.

அறியாமைக்கு, “கர்மம் காரணமாகவே அறியாமை உண்டாகும்” என்னும் தன்மை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே ஆகும். அதாவது, இந்த லோகத்தில் உள்ள அனைத்தும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்வதாக உள்ளது; ஆகவே ஒன்றுக்கு ஒன்று காரணமாக உள்ளன; இப்படியாக இவற்றுக்கு ஏற்படுகின்ற “காரணமாக உள்ள தன்மை” என்பது, புலன்களின் சுகத்திற்குக் காரணமாக உள்ள அறிவற்ற தன்மையாலும், கர்மத்தாலும் ஆகும். இவற்றில் சாஸ்த்ரங்களுக்கு உட்பட்டு ஏற்படக்கூடிய உற்பத்தியானது, கர்மம் காரணமாக இருக்கும். இவ்விதம் அல்லாதது, அறிவற்ற தன்மையால் இருக்கும். இவை ஒன்றை ஒன்று விடாமல் இருப்பதாகும். அதிகாரி புருஷர்களாக உள்ள நான்முகன் ஆகியவர்களுக்கு உள்ள “காரணமாக உள்ள தன்மை” என்பது மற்றவர்களுடைய கட்டளைக்கு உட்பட்டு இருக்கும். ப்ராஜாபத்யம் த்வயா காம பூர்வம் மயி நிவேசிதம் - ப்ரஜாபதி என்னும் பதவியானது முன்பு ஒரு காலத்தில் உன்னால் எனக்கு அளிக்கப்பட்டது - என்றும், ஏதௌ த்வௌ புருஷ ச்ரேஷ்ட்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸம்ருதௌ, ததா தர்சித பந்த்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ - தேவர்களில் உயர்ந்தவர்களாகவும், ஸர்வேச்வரனுடைய அருள் மற்றும் கோபம் ஆகியவற்றால் உண்டானவர்களாகவும் உள்ள நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகியவர்கள், அவனால் காண்பிக்கப்பட்ட ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரம் ஆகிய வழியில் ஈடுபட்டு நிற்பதைக் காணலாம் - என்றும் கூறப்பட்டது காண்க. “நியோகாதி” என்பதில் உள்ள “ஆதி - முதலான” என்பது, இவருடைய கருத்தானது, “விடமுடியாத ஆசையாக இருக்குமோ” என்று உரைப்பதாக நடுவில்திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச்செய்வார். மேலும் அவர், “ஸ்ருஷ்டி முதலான கர்மங்களைப் பகவான் செய்வது அறிவற்ற தன்மை மற்றும் கர்மங்களின் பந்தம் காரணமாகவா? அல்லது தவிர்க்க முடியாத ஆசையா? அல்லது வேறு ஒருவன் ஏவியபடி உள்ளபோது இவன் செய்கிறானா?” என்ற சந்தேகங்களை எழுப்பிக் கொண்டு, இவற்றுக்குச் சமாதானம் கூறுகிறார். “இவை எதனாலும் அல்ல, தனது ஆசையால் அவன் செய்கிறான்” என்று நடுவில்திருவீதிப் பிள்ளைபட்டர் அருளிச்செய்தார். இதன் காரணம் என்ன? ச்வே. - நிரவத்யம் நிரஞ்ஜநம் – அழிவற்றவன், தோஷம் அற்றவன் - என்றும், அபஹதபாப்மா – பாபம் அற்றவன் - என்றும், ந தஸ்யேசே கச்சந – பரமாத்மாவிற்கு ஈச்வரனாக உள்ளவன் யாரும் இல்லை - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அறிவற்ற தன்மை போன்றவற்றுக்கு எதிர்த்தட்டாக இருந்தபடி, தன்னை அடக்கி ஆள்பவர்கள் யாரும் இல்லாதபடி உள்ளதால், தனது ஆசை அல்லாமல், ஸ்ருஷ்டி போன்றவற்றுக்கு வேறு எந்தக்காரணமும் இல்லை. இதனை ஸ்வாமி பராசரபட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-41) - அசித் அவிசேஷிதாந் ப்ரளயஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரை: கடயிதும் தயமாந மநா: வரத! நிஜ இச்சயா ஏவ பரவாந் அகரோ: ப்ரக்ருதிம் மஹத் அபிமாந பூத கரண ஆவளி கோரகிணீம் - மோக்ஷ வரம் அளிக்கும் பெரியபெருமாளே! ப்ரளயத்தின்போது, சேதனங்கள் அனைத்தும், அசித் வஸ்துக்களுடன் எந்தவிதமான வேறுபாடும் காண இயலாமல், ஒன்றாகவே கிடந்தன. இவற்றைக் கண்டு உனது மனம் இரங்கியது. இந்தச் சேதனங்களை, அவற்றின் உடல் மற்றும் இந்த்ரியங்களுடன் சேர்க்க நீ திருவுள்ளம் கொண்டாய். இதற்கான ஸங்கல்பம் கொண்டவனாக, உனது இச்சைக்கு மட்டுமே வசப்பட்டவனாக ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், பஞ்சபூதங்கள், இந்த்ரியங்கள் போன்றவற்றை வரிசையாக அரும்பும்படிச் செய்தாய் – என்றும், (2-44) - ப்ரளய ஸமய ஸுப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம் வரத! சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சயா விஸ்த்ருணாந: கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந் அநுசிகிநி சிகீ இவ க்ரீடஸி ஸ்ரீஸமக்ஷம் – மோக்ஷ வரம் அளிக்கும் பெரியபெருமாளே! ப்ரளய காலத்தில் உனது திருமேனியில் அனைத்து சேதனங்களும் அசேதனங்களும் ஒடுங்கி நின்றன. உனது திருமேனியும் அவையும் ஒன்றே எனத் தோன்றுவது போல் நின்றன. இதனை உனது ஸங்கல்பம் மூலமாக, அனைத்து உலகங்களும் உனது திருமேனியில் நிற்பதைப் பெரியபிராட்டியிடம் நீ காண்பித்தாய். இது எப்படி உள்ளது என்றால் – பெண் மயிலின் முன்பாக ஆண் மயிலானது, பல நிறங்களுடன் கூடிய தனது அழகான தோகையை, விண்ணை முட்டும் அளவிற்கு விரித்து நின்று உதறுவது போன்று உள்ளது – என்றும் கூறியது காண்க.