Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 157)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

சேதநனும் காரணமாக மாட்டான்.

இப்படி அசேதநமான ப்ரதாநத்தை ஜகத்காரணமாகக் கொள்ளுகிற பக்ஷத்தை நிராகரித்தவநந்தரம் சேதநனை ஜகத்காரணமாகக் கொள்ளும் பாசுபதாதி மதத்தை நிராகரிக்கிறார் (சேதநனும் காரணமாக மாட்டான்) என்று.

இப்படியாக, அசேதநமாக உள்ள ப்ரக்ருதியை ஜகத்காரணமாகக் கொள்ளும் கருத்தை நிராகரித்த பின்னர், சேதநனை ஜகத்காரணமாகக் கொள்ளும் பாசுபத மதத்தை நிராகரிக்கிறார்.

அசப்தத்தாலே, கீழ்ச்சொன்ன சேதநத்தை ஸமுச்சயிக்கிறது. ஆகம ஸித்த ஈச்வரன் நிமித்தகாரணமென்றும், ஆநுமாநிகேச்வரன் நிமித்தகாரணமென்றும், பாசுபத வைசேஷிகாதிகள் சொல்லுகிற ருத்ரன், சேதநரிலே அந்யதமனிறே. “ஹிரண்யகர்ப்பஸ் ஸமவாதர்த்ததாகரே” இத்யாதி வாக்யங்களைக் கொண்டு சேதநரிலே அந்யதமனான ப்ரஹ்மாவையும் ஜகத்காரணமாகச் சொல்லுவாருமுண்டிறே. அவையெல்லாவற்றையும் திருவுள்ளம் பற்றியிறே (சேதநனும்) என்று, பொதுவிலே அருளிச்செய்தது. (காரணமாக மாட்டான்) என்றது காரணமாக க்ஷமன் அல்லன் என்றபடி.

“சேதநனும்” என்பதில் உள்ள உம்மைத்தொகை மூலம், முன்பு கூறப்பட்ட சேதநன் குறித்த வாதத்தைச் சேர்க்கிறார். ஆகமதத்தில் கூறப்பட்ட சிவன் ஜகத்தின் நிமித்தகாரணம் என்றும், அனுமானத்தால் கூறப்படும் ஈச்வரன் ஜகத்தின் நிமித்தகாரணம் என்றும் பசுபத மற்றும் வைசேஷிகர்கள் முறையே கூறுகிறார்கள். பசுபதி மதத்தில் கூறப்பட்ட ருத்ரன், சேதந வகுப்பைச் சேர்ந்தவன் அல்லவோ? “ஹிரண்யகர்ப்பஸ் ஸமவாதர்த்ததாகரே - ஸ்ருஷ்டிக்கு முன்பு ஜீவர்கள் கூட்டத்தைத் தன் உள்ளே வைத்திருந்த ஹிரண்யகர்ப்பன்” என்பது போன்ற வாக்கியங்கள் மூலம், சேதநர்களில் ஒருவனாகிய நான்முகனையும் ஜகத்காரணமாகச் சிலர் கூறுவர் அல்லவோ? இவை அனைத்தையும் தனது திருவுள்ளத்தில் நன்கு ஆராய்ந்து, “சேதநனும்” என்று பொதுவாக அருளிச்செய்தார். “காரணமாக மாட்டான்” என்பதன் மூலம் “காரணமாக இயலாதவன்” என்பதைக் கூறுகிறார்.