Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 156)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ப்ரதாநம் அசேதநமாகையாலும், ஈச்வரன் அதிஷ்டியாதபோது பரிணமிக்க மாட்டாமையாலும், ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது.
அத்தை நிராகரிக்கிறார் (ப்ரதாநம் அசேதனமாகையாலும்) என்று தொடங்கி.
மேலே கூறப்பட்ட கருத்தை நிராகரிக்கிறார்.
– அதாவது, விசித்ர ஜகதாகாரேண பரிணமிப்போமென்றிருக்கைக்கு யோக்யதையில்லாதபடி ப்ரதாநம் சைத்நயரஹிதமான வஸ்துவாகையாலும்; “ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிச்யாத்மேச்சயா ஹரி: க்ஷோபயாமாஸ ஸம்ப்ராப்தே ஸர்க காலே வ்யயாவ்யயௌ” என்கிறபடியே ஈச்வரன் அதிஷ்டித்தபோதேயொழிய பரிணமிக்க மாட்டாமையாலும்; தததிஷ்ட்டாநமொழிய பரிணமிக்குமாகில், ஸர்வகாலமும் ஸ்ருஷ்டியேயாய்ச் செல்லுமதொழிய ஸம்ஹ்ருதமாய்க் கிடக்கையென்னுமது கூடாமையாலே காலபேதேந வருகிற ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்த்தை கூடாமையாலும்; ப்ரதாநம் காரணமென்கிறவதுவும் சேராதென்கை. (அதுவும்) என்று பூர்வோக்த பரமாணு காரணவாதத்தை ஸமுச்சயிக்கிறது.
ப்ரதானமானது “விசித்ரமான ஜகத்ரூபமாக நாம் மாறுதல் அடைவோம்” என்று சிந்திக்கும் தகுதி இல்லாதபடியான அறிவற்ற வஸ்துவாக உள்ளதாலும்; ஸ்ரீவிபு. (1-2-31) - ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிச்யாத்மேச்சயா ஹரி: க்ஷோபயாமாஸ ஸம்ப்ராப்தே ஸர்க காலே வ்யயாவ்யயௌ - ஸ்ருஷ்டியின்போது அழிவு மற்றும் அதன் இல்லாமை ஆகிய தன்மைகளைக் கொண்டதான முறையே ப்ரக்ருதியையும் ஜீவாத்மாவையும் விஷ்ணு கலக்கினார் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஈச்வரன் அண்டி நின்று உதவாதபோது ப்ரக்ருதி எந்தவிதமான மாற்றங்களையும் அடையாது என்பதாலும்; இவ்விதம் அவனுடைய செய்கையின்றி மாற்றம் அடையும் என்றால், அனைத்து காலங்களிலும் ஸ்ருஷ்டி நடந்தபடியே இருக்கும் அல்லாமல், எதுவும் அழியும் நிலை ஏற்படாது என்பதால், காலத்தின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹார நிலைகள் உண்டாகாமல் போகும் என்பதாலும்; ப்ரதானமானது ஜகத்காரணம் என்பது பொருந்தாது. “அதுவும்” என்பதில் உள்ள உம்மைத்தொகை மூலம், “பரமாணுக்கள் ஜகத்காரணம்” என்று முன்னர் கூறப்பட்ட வாதம் தள்ளப்பட்டது.