Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 155)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
காபிலர் ப்ரதாநம் காரணமென்றார்கள்.
அநந்தரம் ஜகத்துக்கு ப்ரக்ருதியே ஸ்வதந்த்ரகாரணம் என்று சொல்லுகிற காபிலமதத்தை நிராகரிக்கைக்காக அத்தை உத்க்ஷேபிக்கிறார் (காபிலர் ப்ரதாநம் காரணமென்றார்கள்) என்று.
அடுத்து, “ப்ரக்ருதியே ஜகத்தின் சுதந்திரமான காரணப்பொருள்” என்று கூறும் கபில மதத்தைத் தள்ளுவதற்காக, முதலில் அதன் கருத்தை உரைக்கிறார்.
காபிலரென்கிறது கபில மத நிஷ்ட்டரான ஸாங்க்யரை. ம்ருதாத்மகமான கடத்துககு ம்ருத த்ரவயமே காரணமாகிறாப்போலே ஸத்வ ரஜஸ் தமோமய ஸுக துக்க மோஹாத்மகமான ஜகத்துக்கும் குணத்ரயங்களினுடைய ஸாம்ய ரூபமான ப்ரதாநமே ஸ்வதந்த்ரமான காரணம். ததிபாவேந பரிணமியா நிற்கும் பயஸ்ஸுக்கு அநந்யாபேக்ஷமாக ஆத்யபரிஸ்பந்தம் முதலான பரிணாம பரம்பரை ஸ்வத ஏவ கூடுகிறாப்போலேயும் மேகவிமுக்தமாய், ஏக ரஸமாயிருக்கிற ஜலத்துக்கு நாரிகேள தால சூத கபித்த நிம்ப திந்த்ரிண்யாதி விசித்ர ரஸ ரூபேண பரிணாம ப்ரவ்ருத்தி காணப்படுகிறாப் போலேயும், பரிணாம ஸ்வபாவமாய் ப்ரதிஸர்காவஸ்த்தையில் ஸத்ருச பரிணாமமுமாயிருந்த ப்ரதாநத்துக்கு அநந்யாதிஷ்ட்டிதமாகவே ஸர்காவஸ்தையில் குண வைஷம்ய நிமித்தமான விசித்ர பரிணாமம் கூடுமாகையாலே ப்ரக்ருதியே ஸ்வதந்த்ரமாய்க் கொண்டு ஜகத்காரணமாகிறதென்றிறே அவர்கள் சொல்லுவது.
“காபிலர்” என்பது கபில மதத்தைப் பின்பற்றும் ஸாங்க்யர்கள் ஆவர். மண் ரூபமாக உள்ள பானைக்கு மண்ணே காரணம் என்பது போன்று, ஸத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றால் இன்பதுன்பங்களையும் மயக்கத்தையும் உள்ளடக்கிய ஜகத்திற்கு, மூன்று குணங்களுடைய சம வடிவமாக உள்ள ப்ரதானமே, சுதந்திரமான காரணம் ஆகும். தயிராக மாற்றம் அடைகின்ற பாலானது மற்ற எதனையும் எதிர்பாராமல், காலம் மாறுவதன் மூலம் ஏற்படுகின்ற, தனது முதல் நிலையிலேயே திரிந்து போதல் முதலான மாற்றங்களை அடைகிறது; மேகம் பொழிகின்ற ஒரே சுவை கொண்ட நீரானது தேங்காய், மாம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், புளியம்பழம் போன்றவற்றுடைய விசித்ரமான சாறு என்பதான மாற்றம் அடைகிறது; இது போன்று மாற்றம் அடைதல் என்பதையே தனது இயல்பாகக்கொண்டதும், ஒவ்வொரு ஸ்ருஷ்டியிலும் ஒரே போன்று மாற்றங்கள் கொண்டதும் ஆகிய ப்ரதானத்திற்கு, மற்றொன்றின் ஸம்பந்தம் இன்றி, ஸ்ருஷ்டி நேரத்தில், குணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக, விசித்ரமான மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆகவே ப்ரக்ருதியே சுதந்திரமாக இருந்தபடி ஜகத் காரணமாக உள்ளது என்பதே அவர்கள் கருத்தாகும்.