Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 153)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

சிலர் பரமாணுவைக் காரணமென்றார்கள்.

– அவிரோத ப்ரதிபாதகமான த்விதீயாத்யாயத்திற்படியே ப்ரஹ்ம காரணத்வ விரோதியான பரமாணு காரணவாதிகளை நிராகரிக்கிறார் (சிலர் பரமாணுவை காரணமென்றார்கள்) என்று தொடங்கி.

விரோதி வாதங்களை விலக்குவதாக உள்ள இரண்டாவது அத்யாத்தின்படி, ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்பதற்கு விரோதமாகப் பொருள் கூறுவதான, பரமாணுவே ஜகத்காரணம் என்னும் வாதங்களை இங்கு தள்ளுகிறார்.

சிலரென்று பௌத்த ஆர்ஹத வைசேஷிகாதிகளைச் சொல்லுகிறது. இதில் பௌத்த ஆர்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத்காரணமாக மதமாயிருக்கும்; வைசேஷிகாதிகளுக்கு பரமாணுக்கள் உபாதாநகாரணமாய், ஆநுமாநிகேச்வரன் நிமித்த காரணமாக மதமாயிருக்கும். இவர்களில் பௌத்த வைசேஷிகாதிகள், பார்த்திவாப்யதைஜஸவாயவீயங்களென்று, பரமாணுக்களை சதுர்விதமாகக் கொள்ளுவர்கள்; ஆர்ஹதர் ஏகரூபமாகக் கொள்ளுவர்கள். இங்ஙனே சில விசேஷங்கள் உண்டானாலும், பரமாணு காரணத்வ அங்கீகாரம் எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே சிலரென்று ஸமுச்சித்ய உபாதாநம் பண்ணுகிறார்.

“சிலர்” என்பதன் மூலம் பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் வைசேஷிகர்கள் போன்றவர்கள் கூறப்படுகிறார்கள். இதில் பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியவர்களுக்கு, “பரமாணுக்களே ஜகத்காரணம்” என்பதே கருத்தாக உள்ளது. வைசேஷிகர்கள் பரமாணுக்களே ஜகத்தின் உபாதானக்காரணம் என்றும், அநுமானத்தால் கற்பிக்கப்பட்ட ஈச்வரனே ஜகத்தின் நிமித்தகாரணம் என்றும் கூறுவர். இவர்களில் பௌத்தர்கள் மற்றும் வைசேஷிகர்கள் ஆகிய இருவரும் பூமி, நீர், அக்னி மற்றும் வாயு ஆகியற்றைப் பரமாணுக்களாக நான்குவிதங்களாகக் கொள்வர். ஜைனர்கள் ஒரேவிதமாகக் கொள்வர். இப்படியாக ஒரு சில விசேஷங்கள் உள்ளது என்றாலும், பரமாணுக்களே ஜகத்காரணம் என்பதை ஒரே போன்று இவர்கள் ஏற்றதால், “சிலர்” என்று ஒன்றாகக் கூட்டி உரைக்கிறார்.