Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 152)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

இவனே ஸகல ஜகத்துக்கும் காரணபூதன்.

– “இவன்” என்று கீழச்சொன்ன விலக்ஷண ஸ்வரூப குண விசிஷ்டனான ஈச்வரனைப் பராமர்சிக்கிறது; அவதாரணத்தாலே, ஜகத்காரணத்வத்தினுடைய அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறது. வேதாந்தத்திலே, “ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத்” என்று சாந்தோக்யத்திலும், “ப்ரஹ்ம வா இதமேகமேவாக்ர ஆஸீத்” என்று வாஜஸநேயகத்திலும், “ஆத்மா வா இதமேகமேவாக்ர ஆஸீத்” என்று ஐதரேயகத்திலும் ஸத் ப்ரஹ்மாத்மரூப ஸாமாந்ய சப்தங்களாலே சொல்லப்பட்ட காரணவஸ்துவேது? என்னுமாகாங்க்ஷையிலே, கதிஸாமாந்ய ந்யாயத்தாலே “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்று மஹோபநிஷத்திலே விசேஷிக்கப்பட்ட நாராயணனே ஜகத் காரணபூதனாக நிச்சயித்திருக்கும் பரமவைதிகராகையாலே, (இவனே) என்று ஸாவதாரணமாக வருளிச்செய்கிறார். (ஸகல ஜகத்துக்கும் காரணபூதன்) என்றது ஸமஷ்டி, வ்யஷ்டி ரூப ஸமஸ்த கார்யங்களுக்கும் காரணபூதனென்றபடி. இத்தால், ஸமந்வயமும், அவிரோதமும், ஸாதநமும், பலமும் ஆகிற அர்த்த சதுஷ்டயத்தையும் அடைவே ப்ரதிபாதிக்கிற உத்தரமீமாம்ஸையில் அத்யாய சதுஷ்டயத்திலும் வைத்துக்கொண்டு, “அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸா” என்று ஜிஜ்ஞாஸ்யமாகச் சொல்லப்பட்ட ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக “ஜந்மாத்யஸ்ய யத:” என்று ஜகத்காரணத்வத்தைச் சொல்லி, அதினுடைய அயோக அந்யயோக வ்யவச்சேத முகத்தாலே, ஜகத்காரண வஸ்து ப்ரதிபாதக ஸகல வேதாந்த வாக்யங்களுக்கும், ப்ரஹ்மணி ஸம்யக் அந்வயத்தை ப்ரதிபாதித்த ப்ரதமாத்யாயத்தின் அர்த்தத்தை யருளிச்செய்தாராயிற்று.

“இவன்” என்று, முன்பு கூறப்பட்ட மேன்மையுடைய ஸ்வரூப குணங்களைக் கொண்டவனாகிய ஈச்வரனைக் கூறுகிறார். “இவனே” என்பதில் உள்ள ஏவகாரம் மூலம், இத்தகைய ஜகத்காரணப் பொருளின் அந்யயோக வ்யவச்சேதம் செய்கிறார் [“ஒரு பொருள் அல்லது ஒரு தன்மை பல இடங்களிலும் உள்ளது” என்று கூறுபவர்களை நோக்கி, “அந்தப் பொருள் அல்லது தன்மை ஓர் இடத்தில் மட்டுமே உள்ளது” என்று நிரூபிப்பதாகும். உதாரணமாக “ஜகத்திற்கு பலவும் காரணம்” என்று கூறுபவர்களிடம் “ஜகத்திற்கு ப்ரஹ்மம் மட்டுமே காரணம்” என்று நிரூபிப்பதே அந்யயோக வ்யவச்சேதம் ஆகும்]. வேதாந்தங்களில், சாந்தோக்யத்தில் – ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் – குழந்தாய்! தொடக்கத்தில் ஸத் என்பது மட்டுமே இருந்தது - என்றும், ப்ருஹத்தில் - ப்ரஹ்ம வா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் - தொடக்கத்தில் ப்ரஹ்மம் என்பது மட்டுமே இருந்தது – என்றும், ஐதரேயகத்தில் - ஆத்வா வா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் தொடக்கத்தில் ஆத்மா என்பது மட்டுமே இருந்தது – என்றும் உள்ள வாக்கியங்களில், “ஸத், ப்ரஹ்ம, ஆத்மா” என்பது போன்ற பொதுவான பதங்களால் கூறப்பட்ட காரண வஸ்து எது என்று சந்தேகத்தில், சொற்களில் போக்கு அமைந்துள்ள ந்யாயத்தால், மஹாநாராயண உபநிஷத்தில் உள்ள - ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – நாராயணன் மட்டுமே இருந்தான் – என்று சிறப்பாகக் கூறப்பட்ட நாராயணனே ஜகத்காரணப் பொருள் ஆவான் என்று உறுதிபட நிச்சயித்துள்ள பரமவைதிகர் என்பதால், “இவனே” என்று சூர்ணையில், ஏவகாரத்தில் அருளிச்செய்கிறார். (ஸகல ஜகத்துக்கும் காரணபூதன்) - என்பதன் மூலம் தனித்தனியான வஸ்துக்கள் மற்றும் தொகுத்த வஸ்துக்கள் என்பதாக உள்ள அனைத்திற்கும் இவனே காரணம் ஆகிறான் என்பதையும் கூறுகிறார். இதன் மூலம் ப்ரஹ்மஸூத்ரத்தில் ஸமந்வயம், அவிரோதம், ஸாதநம் மற்றும் பலம் ஆகிய நான்கு விஷயங்களையும் முற்றிலுமாக உரைக்கின்ற உத்தரமீமாம்ஸையில் உள்ள நான்கு அத்யாயங்களையும் வைத்துக்கொண்டு, ப்ர. ஸூ. (1-1-1) – அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸ - அதன் பின்னர் ஆகவே ப்ரஹ்மத்தை அறிவதில் ஆர்வம் - என்பதாக அறியப்படுவதில் ஆர்வம் கொண்ட வஸ்துவாகக் கூறப்பட்ட ப்ரஹ்மத்திற்கு, ப்ர. ஸூ. (1-1-2) - ஜந்மாத்யஸ்ய யத: - என்பதான ஜகத்காரணமாக உள்ள தன்மையைக் கூறி, அத்தகைய ப்ரஹ்மத்தின் அயோக அந்யயோக வ்யவச்சேதம் [“ஓர் இடத்தில் ஒரு பொருள் அல்லது ஒரு தன்மை இல்லை” என்று கூறுபவர்களை நோக்கி, “அங்கு அந்தப் பொருள் அல்லது தன்மை உள்ளது” என்று நிரூபிப்பதாகும். உதாரணமாக “ப்ரஹ்மம் ஜகத்காரணம் இல்லை” என்று கூறுபவர்களிடம் “ப்ரஹ்மமே ஜகத்காரணம் ஆகும்” என்று நிரூபித்தலே அயோக அந்யயோக வ்யவச்சேதம் ஆகும்] என்பதன் மூலம், ஜகத்காரண வஸ்துவை வெளிப்படுத்தும் அனைத்து வேதாந்த வாக்கியங்களுக்கும், ப்ரஹ்மத்தின் பெருமையை வெளிப்படுத்தும் முதல் அத்யாயத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தினார் என்றாயிற்று.